For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சடசடவெனச் சரிந்தான் ராஜபக்சே!

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

சின்னஞ்சிறு நாடுதான் இலங்கை. ஆனாலும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பி வழிகின்ற வரலாற்றைக் கொண்டது அது. இப்போது அங்கு இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது!

மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியில் மகிழ நமக்குப் பெரிதாக ஏதும் இல்லை. எனினும், ராஜபக்சேயின் தோல்வியை எண்ணி எண்ணி மகிழ ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. கொடுமைக்காரரர்களுக்கு வரலாற்றில் எப்போதும் இடமில்லை என்பதை இலங்கையின் தேர்தல் முடிவுகள் இன்னொருமுறை மெய்ப்பித்துள்ளன. 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலாவுக்குத்தான் வரலாற்றில் இடமுண்டு. அவரைச் சிறை வைத்த வெள்ளைக்காரர் யாரென்று யாருக்குத் தெரியும்?

நடந்து முடிந்த இலங்கைத் தேர்தல், முந்தைய அந்நாட்டின் தேர்தல்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. எப்போதும் அங்கு சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையில்தான் கடும் மோதல் நிலவும்.இரண்டில் ஒன்று வெற்றிபெறும். ஆனால் இத்தேர்தல் அப்படி இரு கட்சிகளுக்கிடையிலான தேர்தலாக இல்லை. அனைத்து எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சிறிசேன நிறுத்தப்பட்டார்.

ராஜபக்சே , சிறிசேன ஆகிய இரண்டு தனி மனிதர்களுக்கு இடையிலான தேர்தலாகவும் அது அமையவில்லை. ராஜபக்சே பொறுப்பில் நீடிக்க வேண்டுமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மட்டுமே அது நடைபெற்றது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

Fall of Rajapaksa - Subavee's special article

சிங்களர்கள் வாக்குகளும் இரண்டாகப் பிரிந்துதான் விழுந்திருக்கின்றன. ராஜபக்சேவுக்கு எதிரான, ஜதிக ஹெல உறுமய போன்ற சிங்கள அமைப்பின் கண்டனங்களும், சிறிசேனவுக்கு மாங்க் கட்சி, வலதுசாரி ஜே.வி.பி. போன்ற கட்சிகள் கொடுத்த ஆதரவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையே. இருப்பினும், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் வாக்குகளே தேர்தல் வெற்றியைத் தீர்மானித்திருக்கின்றன.

இரண்டு மாதங்கள் முன்பு வரையில் சிறிசேன ராஜபக்ஷேவுடன் இருந்தவர் என்பதையும், தமிழின அழிப்பின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவரே சிறிசேனதான் என்பதையும் தமிழர்கள் அறியாதவர்கள் இல்லை. அதே போல, 1970ஆம் ஆண்டு, ஜே.வி.பி.யினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியபோது அதனை ஆதரித்தவர்தான் சிறிசேன என்பதை முஸ்லிம்களும் அறியாதவர்கள் இல்லை. இருந்தாலும், ராஜபக்சேயை விரட்டியடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழர்களும் சிறுபான்மையினரும் தங்கள் வாக்குகளை அளித்திருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லரையும் பாசிச சக்திகளையும் முறியடிப்பதற்காகத் தங்களை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானியப் பேரரரசையே இந்தியா ஆதரித்த அந்த வரலாற்று நிகழ்வை இங்கு நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இந்தத் தேர்தலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஈழத் தமிழர்கள் மூன்று வகையினர் என்பதை நாம் அறிவோம். அதனையே தங்கள் தாயகமாகக் கொண்டுள்ள, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் ஈழத் தமிழர்கள், பதுளை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள், வணிக நோக்கில் கொழும்பில் வாழ்ந்துவரும் இந்தியத் தமிழர்கள் என அவர்கள் மூவகையினர். அனைவரின் வாக்குகளும் ஒரே மாதிரியாக விழுந்துள்ள தேர்தல் என்றும் இதனைக் கூறலாம். ஈழத் தமிழர்களின் அராசியல் பார்வைக்கும், மலையகத் தமிழர்களின் அறசியல் பார்வைக்கும் இடையே சில கால கட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இந்தத் தேர்தலில், ஒரே மாதிரியாக வாக்களித்துள்ளனர். திரிகோணமலை, யாழ்ப்பாணம், பதிலை ஆகிய மூன்று பகுதிகளிலும் , ஏறத்தாழ 80 சதவீத வாக்குகள் சிறிசேனாவுக்கு ஆதரவாக - அதாவது ராஜபக்சேவுக்கு எதிராக - விழுந்துள்ள காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்தச் சூழலிலும் கூட, சிறிசேன தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று ஒருநாளும் கூற முடியாது. பேரினவாதம் அவர்களின் குருதியில் கலந்திருக்கிறது. சிங்கள இனவெறியர்களாகவும், பௌத்த மத வெறியர்களாகவும்தான் அவர்கள் இருப்பார்கள் என்பது தெளிந்த உண்மை. அதனால்தான், தன் 100 நாள் திட்டத்தில் கூட, தமிழர்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் எதனையும் சிறிசேன முன் வைக்கவில்லை. தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவேன் என்னும் உறுதிமொழியையும் அவர் அளிக்கவில்லை.

ராஜபக்சே சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களைத் தான் ஆட்சிக்கு வந்தால் ஏற்க மாட்டேன் என்று சிறிசேன கூறியுள்ளார் என்றாலும், அதுவும் அத்தனை எளிதன்று. இன்று இலங்கை என்பது, சீனாவின் இன்னொரு மாநிலம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. அங்கு நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் சீனாவின் கைகளில்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளன. ராஜபக்சேயின் மகன் நாமல் இன்று சீனாவில்தான் தஞ்சம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

ராஜபக்சே மீதான இனப்படுகொலை விசாரணை எதனையும் சிறிசேன நடத்துவார் என்று நாம் கனவு கூடக் காண முடியாது. அப்படி எதுவும் நடத்தப்பட்டால், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சிறிசேனவுக்கும் அதில் பங்கு உண்டு என்பது வெளிப்படும், எனவே அதற்கும் வாய்ப்பில்லை.

இன்னும் சில மாதங்களில் அங்கு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றிபெற வேண்டுமானால், சிங்களர்களுக்கு நல்ல பிள்ளையாக அவர் நடந்து காட்டியாக வேண்டும். ஆதலால் நடந்து முடிந்த தேர்தலால், தமிழர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்றும் வந்துவிட வாய்ப்பில்லை என்றாலும், இத்தேர்தல் முடிவை நாம் அனிவரும் வரவேற்பதே சரியானது.

அதற்கான இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆட்சிக்கு வரும் எவர் ஒருவருக்கும் ராஜபக்சேயின் முடிவு சரியான எச்சரிக்கையாக இருக்கும். இரண்டாவது, உலக நாடுகளின் பார்வையில், சில மாற்றங்கள் ஏற்படும்.

ஈழ மக்களின் நீண்ட நெடிய போர், 2009க்குப் பிறகு, மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 1950களில் அறவழியில் தொடங்கி,1970களில் ஆயுத வழியில் பயணித்து, 2009இல் உலக அரசியல் அரங்கிற்கு வந்துள்ளது. இனி உலக நாடுகளின் அழுத்தமே, ஈழத் தமிழ் மக்களுக்கான ஒரு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர இயலும். அதற்கு இந்தத் தேர்தல் முடிவு உறுதியாய் உதவும்.

தமிழர்களின் வாக்குகள்தான் தன்னை அதிபர் ஆக்கின என்னும் நன்றியுணர்ச்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகேனும், சிறிசேனவுக்கு ஏற்படுமானால், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தமிழர்கள் பெற வாய்ப்புண்டாகும்!

English summary
Suba Veerapandiyan's special article on the fall of Sri Lanka's ex president Rajapaksa's fall and emerge of Maithripala Srisena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X