For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடும் மாடும் - சுபவீ சிறப்புக் கட்டுரை

By Shankar
Google Oneindia Tamil News

- சுப வீரபாண்டியன்

மராத்திய மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிலுவையில் இருந்த 'விலங்குகள் வதைத் தடைச் சட்டம்' இப்போது அங்கு நிறைவேற்றப்பட்டு, 3.3.15 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

இச்சட்டத்தின்படி, பசு, காளைகள் ஆகியனவற்றைக் கொல்வது , விற்பனை செய்வது மட்டுமின்றி, மாட்டுக் கறியை ஒருவர் வைத்திருப்பதே கூடக் குற்றமாகும். இக்குற்றம் புரிவோருக்குப் பத்தாயிரம் வரையில் தண்டமும், 5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் வழங்க இச்சட்டம் வழி செய்கிறது. எருமை மாடுகளைக் கொலை செய்வதை இச்சட்டம் குற்றமாகக் கருதவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

'நாடும் ஏடும்' என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவின் தலைப்பு. அண்ணா நாடும் ஏடும் எழுதினர். நாம் 'நாடும் மாடும்' பற்றி எழுத வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.

Naadum Maadum - Subavee special article

மேலே உள்ள சட்டத்திற்கு 'விலங்குகள் வதைத் தடைச் சட்டம்' என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தாலும்,மற்ற எல்லா விலங்குகளையும் வதை செய்வதை அது தடுக்கவில்லை. எருமை மாடு தவிர்த்த பிற மாடுகளை வதை செய்வதை மட்டும்தான் தடுக்கிறது. எனவே இதனை மாடுகள் வதைத் தடைச் சட்டம்' என்றுதான் கூற வேண்டும்.

பிற விலங்குகளின் மீதெல்லாம் இல்லாத கருணை, மாடுகளின் மீது மட்டும் ஏன் பா.ஜ.க. விற்கு ஏற்படுகிறது? காரணம், மிக வெளிப்படையானது. பசு என்பது இந்துக்களின் புனிதமான விலங்காக நம்பப்படுவதே அதற்கான காரணம். எனவே இச்சட்டம் அஹிம்சையின் அடிப்படையில் உருவானதன்று. மதவாதத்தின் அடிப்படையில் உருவானது. இந்துக்களின் மதவாதம் என்பது கூட மிகையானது. ஏனெனில், இந்துக்களில் பெரும்பான்மையோர் மாட்டுக் கறி உண்ணும் வழக்கமுடையவர்களே. குறிப்பாக, உழைக்கும் மக்களும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களும் மாட்டுக்கறி உண்பவர்களாகவே உள்ளனர். குறைந்த விலையில் கூடுதல் புரதம் கொண்ட உணவு மாட்டுக் கறியே! அதனால்தான் அது உழைக்கும் மக்களால் விரும்பப்படுகிறது. எனவே இச்சட்டத்திற்குப் பின்னால், உடல் உழைப்பு இல்லாத பார்ப்பனர்களின் சாதி அடிப்படையிலான இந்து மதவாதம் மட்டுமே உள்ளது.

Naadum Maadum - Subavee special article

அதிலும் எருமை மாடுகளுக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது ஒரு முதன்மையான வினா. பசுவின் பாலை விட எருமையின் பாலே கெட்டியானது. நம் நாட்டின் தேநீர்க் கடைகளில் மிகுதியும் பயன்படுத்தப்படுவது. ஏழைகளுக்கு ஏற்றது. ஆனால் அதற்குப் பாதுகாப்பில்லை. ஒருவேளை, அது கருப்பாக இருப்பது காரணமா என்று தெரியவில்லை. பா.ஜ.க. வின் பார்வையில், கருப்பாக இருக்கும் மனிதர்கள் மட்டுமின்றி, கருப்பாக இருக்கும் மாடுகளும் இழிவானவைதாம் போலும்!

இந்த 'மாட்டு அரசியல்' இந்தியாவில் நெடு நாள்களாகவே நடைபெற்று வருகிறது. காந்தியார், நேரு, அவர்களுக்கும் முன்னால் விவேகானந்தர் என்று பலரும் இது குறித்துக் கருத்துகளைக் கூறியுள்ளனர். காந்தியார், இஸ்லாமிய மக்களின் ஒப்புதலோடு பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரலாம் என்றார். நேரு அந்தத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டு இறுதியில், வட மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு மனிதர்கள், கால்நடைகள் என எல்லோரும் மாண்ட நேரத்தில், இந்துத்வவாதிகள் சிலர் 'கோ ரக்ஷன் சமிதி' என ஒன்றைத் தொடங்கினர். மனிதர்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மாடுகளைக் காப்பாற்றக் கோரும் அந்த அமைப்பு குறித்து விவேகானந்தர் மிகக் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் பசு வதைத் தடைச் சட்டம் குறித்து இரண்டு வகையான கருத்துகள் காலம்தோறும் இருந்துகொண்டே இருந்தன. (காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு கருத்து இருந்தால்தான் அது வியப்புக்குரியது!). நேரு அச்சட்டத்தை எதிர்த்த போதும், அவர் பிரதமராக இருந்தபோதுதான், உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த சம்பூர்ணானந் 1955இல் அச்சட்டத்தைக் கொண்டு வந்தார். அது மாநில அரசின் உரிமை என்பதால்தான் தலையிட விரும்பவில்லை என்று நேரு கூறிவிட்டார். பிறகு, பீகார், ம.பி., ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகளும் அப்போதே அச்சட்டத்தைக் கொண்டுவந்தன.

இந்திரா காந்தி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த நந்தா, இந்தியா முழுவதும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற 'சாதுக்களின்' கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்றார். அதனைப் பிரதமர் இந்திரா காந்தியும், காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் ஏற்கவில்லை. 1966 நவம்பர் 2 அன்று தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காமராஜர் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நாடு, மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இது, மாடுகளைப் பற்றி அல்ல என்றார். அவர் கூற்று இந்து மதத் தீவிரவாதிகளிடம் பெரும் கோபத்தை உண்டாக்கிற்று. அதனால்தான், நவம்பர் 7 ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற சாதுக்களின் ஊர்வலம், காமராஜர் தங்கியிருந்த வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தியது. நல்வாய்ப்பாக, காமராஜர் உயிர் பிழைத்தார். அவருடைய உதவியாளர்கள் நிரஞ்சன், அம்பி ஆகியோரும், பாதுகாவலர் பகதூர் சிங்கும் படுகாயமடைந்தனர்.

Naadum Maadum - Subavee special article

காமராஜரைக் கொலை செய்தாவது, பசு மாடுகளைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று கருதிய 'அஹிம்சாவாதிகளின்' அரியதோர் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.

இன்றைக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மாடுகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது, மராத்திய அரசு. இந்தியாவிலேயே விவசாயிகள் மிகுதியும் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் மராத்தியம்தான். 15.02.2009 அன்று, அவ்வரசு , மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் அங்கு 1.37 கோடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4800 கோடி ரூபாய் நிதி உதவி வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதும் அங்கு விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதென்று, அங்கு ஆட்சியில் பங்கு வகிக்கும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவே கூறியுள்ளது. ஒரு மாதத்திற்குள்ளாக, 30.01.2015 அன்று, தங்களின் அதிகாரப்பூர்வ ஏடான 'சாம்னா'வில், சிவசேனா அந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளது. முதல்வர் பட்நாவிஸ், நிதியமைச்சர் சுதீர் முல்கத்வார் ஆகிய இருவரும் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தும், அங்கு தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகளை அவர்களால் தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாற்றியுள்ளது. அங்கே சராசரியாக 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்கிறார்கள்.

அது குறித்துக் கவலை கொள்ளாத மராத்தியப் பா.ஜ.க. அரசு மாடுகளைப் பற்றிக் கவலை கொள்கிறது. மாடு புனிதமான விலங்காம். அதுவும் உண்மையில்லை. வேத காலத்தில் மாட்டுக் கறியை விரும்பி உண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம். நெய்யில் வறுத்து மாட்டுக்கறி உண்பது குறித்து வேத, உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில், இராமனும், சீதையும் மாட்டுக்கறி உண்ணும் காட்சியை வால்மீகி காட்டுகின்றார். மகாபாரதத்தில் மாட்டுக்கறிக்குப் பஞ்சமே இல்லை. பிற்காலத்தில், சமண-பௌத்த மதங்களுக்கு இணையாகத் தாங்களும் புலால் மறுப்பை ஏற்றார்கள் பார்ப்பனர்கள் என்பதே வரலாறு.

தொடக்கத்தில், பார்ப்பனர்கள் வளர்த்த யாகங்களில் மாடு, குதிரை என எல்லா விலங்குகளையும் வெட்டிப் பலி போட்டுள்ளனர். அவற்றை அவர்கள் உண்டும் இருக்கின்றனர். அதனை சங்கராச்சாரியார் (ஓடிப்போகாத பெரியவாள்), தெய்வத்தின் குரல் (இரண்டாம் தொகுதி) என்னும் தன் நூலில் நியாயப் படுத்துகின்றார். இதோ அவருடைய வரிகள்:

"தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண
வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில்
சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும்
ஒப்புக் கொள்ளவில்லையா?.......அப்படி பசு ஹோமம்
பண்ணுவதிலும் தப்பே இல்லை."

"பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ
பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன.
சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ
மேதத்துக்குக் கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது."

ஆக, அவர்கள் கொன்றால் அது யாகம். நாம் கொன்றால், அது மிகப் பெரிய குற்றம். 10000 ரூ தண்டம், 5 ஆண்டுகள் சிறை. இன்னும் வாழ்கிறது மனுநீதி என்பதுதானே இதன் பொருள்!

English summary
Subavee strongly criticised the Maharashtra Govt's recent law of banning beef and killing cows in this special article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X