For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதொருபாகனும் மகாபாரதமும்

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

படைப்புச் சுதந்திரம் எதுவரை நீளலாம் என்னும் வினாவிற்கு உடனடி விடை ஏதுமில்லை என்றாலும், அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வரை அல்லது பொது ஒழுங்கைக் கெடுக்காத வரை என்ற விடையே பெரிதும் கூறப்படுகின்ற ஒன்றாகும்! எனினும்,அடுத்தவர் சுதந்திரம் என்பது எதுவரை அல்லது பொது ஒழுங்கு என்றால் என்ன, அதனை யார் தீர்மானிப்பது என்னும் வினாக்கள் எழும்போது, மீண்டும் முதல் வினா விடையற்றே நிற்கிறது. எவ்வாறாயினும், படைப்புச் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் கிடையாது என்னும் கூற்றில் நம்மால் உடன்பட முடியவில்லை. அது பற்றிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

இப்போது 'பி.கே' என்னும் இந்திப் படமும், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' என்னும் நாவலும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. உடனடி விளைவு யாதெனில், எண்ணிப் பார்க்க முடியாத வண்ணம் இரண்டும் வெகு மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதுதான். பி.கே படம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், 600 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துள்ளது. மாதொருபாகன் நாவல், படிக்கும் பழக்கம் மிகுதியாக இல்லாதவர்களைக் கூடப் படிக்க வைத்துள்ளது. இன்று இணைய தளத்திலும் அந்நாவல் இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே படித்திருக்கக் கூடிய அந்நாவல் இப்போது லட்சக் கணக்கானவர்களால் படிக்கப்படுகிறது!

பெருமாள் முருகன் நாவலை முன் வரிசையில் நின்று எதிர்ப்பவர்கள் சாதி அமைப்பினர். பின்னால் நின்று இயக்குபவர்கள், இந்து மத அமைப்பினரும், சுயநிதிப் பள்ளி உரிமையாளர்களும். 30 வயதாகியும், குழந்தை இல்லாத பெண்கள், அர்த்தநாரீசுவரர் கோயில் திருவிழாவின் இறுதி நாளில், அன்று காவடி தூக்கி வரும் அனைவரும் 'சாமிகளே' என்பதால், அவர்களில் ஒருவரோடு கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்பதும், அப்படிப் பிறக்கும் பிள்ளைகள் 'சாமி கொடுத்த பிள்ளைகள்' என நம்புவதும், திருச்செங்கோடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த ரகசிய மரபு என்று கூறப்படும் செவி வழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவலே மாதொருபாகன்.

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நாவலை எதிர்ப்பதில் எந்தப் பொருளும் இல்லை. ஏனெனில், இந்து மதம் போற்றுகின்ற மனு நீதியும், மகாபாரதமும் இவற்றை எப்போதோ சொல்லிச் சென்றுள்ளன.இது குறித்து, மனு நீதியின், 9ஆவது இயலில் இருந்து சில சுலோகங்களை நாம் பார்க்கலாம்.

Subavee's spl article on Perumal Murugan

சுலோகம் 32: "கணவன் இரண்டு விதம் என்று கேட்டிருக்கிறோம். அதாவது, சிலர் பிள்ளையை உண்டு பண்ணினவனைக் கணவன் என்றும், சிலர் கலியாணம் செய்தவனைக் கணவன் என்றும் சொல்கிறார்கள்."

சுலோகம் 52: " ஒருவன் மனையாளிடத்தில் மனையாள் இல்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம்."

சுலோகம் 51: "ஒருவன் மனையாளிடத்தில் மற்றொருவன் உண்டு பண்ணின பிள்ளை, உடையவனைச் சாருமேயன்றி, உண்டு பண்ணினவனச் சாராது."

எனவே குழந்தைக்காக, காம உணர்வு ஏதுமின்றி, இன்னொருவனைக் கூடலாம் என்னும் இந்த விதியை, இந்து மதம், 'நியோகா தருமா' என்று கூறுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் பலரின் பிறப்பும் அமைந்துள்ளது.

பாண்டு தன் மனைவியரோடு உறவு கொள்ள இயலா வண்ணம் அவருக்கு ஒரு சாபம் இருந்ததால், குந்தி, இந்திரன், வாயு முதாலோருடன் கூடிப் பிள்ளைகளைப் பெறுகின்றாள் என்றுதான் மகாபாரதத்தின் ஆதிபருவம் கூறுகின்றது. முதலில் தயங்கும் குந்தியை, பாண்டுவின் தாயான அம்பாலிகைதான், அதில் ஒன்றும் தவறு இல்லை என்று கூறி ஊக்கப் படுத்துகின்றாள். அப்போது அவள் குந்தியைப் பார்த்து, 'ஒன்றும் தயங்காதே, உன் கணவரான பாண்டு, அவரின் அண்ணன் திருதராஷ்டிரன் ஆகியோர் அவர்களின் பெரியப்பாவுக்குப் பிறந்தவர்கள்தானே' என்கிறாள். அதனைக் கேட்ட குந்தியும், படிக்கும் வாசகர்களும் அதிர்ச்சி அடையக் கூடும். ஆனால் அதுதான் அந்த இதிகாசக் கதை. அம்பை, அம்பாலிகை இருவரையும் மணந்து கொண்ட விசித்திர வீரியன் இறந்து போய்விட, அவனுக்கு அண்ணன் முறையான வியாசனுக்குத்தான் பாண்டு, திருதராஷ்டிரன் இருவரும் பிறக்கின்றனர். பிறகு, வியாசனுக்கும், அம்பாலிகையின் வேலைக்காரப் பெண் ஒருத்திக்கும் பிறந்த குழந்தைதான் விதுரர்.

எனவே இந்து மதம் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டுள்ள மதம்தான்.இவற்றை ஒழுக்கக் கேடு என்று கூறுவதும், பாலியல் சுதந்திரம் என்று கூறுவதும் அவரவர் பார்வை, வாழ்க்கை முறை சார்ந்தது. எவ்வாறாயினும், இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள செய்தியை இந்து மதத்தினர் எதிர்ப்பதில் பொருள் இல்லை.

சாதி அமைப்பினர், இந்நாவலை எதிர்ப்பதற்கு ஒரு காரணத்தை முன் வைக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட ஊரில் வாழும், ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை இந்நாவல் இழிவு படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாவலின் மையக் களம் உள்ளது என்றாலும், இது மானுட சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிப் போக்கில் நடைபெற்ற ஓர் அசைவினைக் குறிக்கிறது என்பதே உண்மை. குறிப்பிட்ட மக்கள் தங்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அப்படியே அவர்கள் மனங்களைப் புண்படுத்தி விட்டது என்று கருதுவார்களேயானால், அதனை எதிர்த்து வன்முறையற்ற வழிகளில் போராடுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. மாறாக, ஓர் எழுத்தாளரை மிரட்டுவதும், அவர் குடும்பத்தினரை அச்சுறுத்துவதும், ஊரை விட்டே விரட்டுவதும், இவை அனைத்துக்கும் அரசு அதிகாரியே துணை போவதும், மிகக் கடுமையான கண்டனத்திற்குரியவை.

சாதி வெறியர்களின் போக்கு மிக மிக அநாகரிகமானது. அவர்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு இந்துத்வ அடிப்படைவாதிகள் நடத்தும் நாடகம் அதனைவிட அநாகரிகமானது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவராலும் இது கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் இந்நாவலைப் படித்துவிட்டு, மனம் குமுறித் திரண்டு எழுந்துவிட்டனர் என்று கூறுவதில் எந்த உண்மையும் இருக்க முடியாது. வெகுமக்கள், உழைக்கும் மக்கள் எல்லோரும் நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால், நம்மை விட யார் மகிழ்ச்சி அடைவார்கள்? ஆனால் அப்படி ஒரு நிலை நம் நாட்டில் ஏற்படவில்லை. அதனால்தான், நூல் வெளிவந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ கிளப்பிவிட்ட கருத்துகளின் மையத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இதனைத் தன்னெழுச்சியான போராட்டம் என்று விவரம் அறிந்த எவரும் ஏற்க மாட்டார்கள்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட, சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் பல கருத்துகளைத் தன் படைப்பில் பதித்துள்ள, கல்விக் கொள்ளையை எதிர்த்து எழுத்துகள் பலவற்றைத் தந்துள்ள பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளரைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவரின் முன்னாலும் உள்ளது.

'ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை' என்னும் உண்மையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திடவேனும், பெருமாள் முருகன் அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்!

English summary
Prof Suba Veerapandiayan's special article on the protest against Perumal Murugan's Maathoru Paagan novel. The author urges Perumal Murugan to start his writing career again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X