For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும்...! – புதிய தொடர்

By Shankar
Google Oneindia Tamil News

- சுப. வீரபாண்டியன்

வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நான் பார்த்த, அந்த இரண்டு நிகழ்ச்சிகள்தாம், இக்கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கின.

ஆறேழு மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா, நானா' நிகழ்ச்சியில், நண்பர் கோபி, இளைஞர்களைப் பார்த்து ஒரு வினாவை முன்வைக்கின்றார். "நீங்கள் அறிந்த வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள்". சில நொடிகள் அமைதியாய்க் கழிகின்றன.

Subhavee’s Arindhum Ariyamalum – A new series

எவரிடமிருந்தும் எந்த விடையும் வரவில்லை. "ஒரு எழுத்தாளர் பெயர் கூடவா, உங்கள் நினைவுக்கு வரவில்லை?" என்று திருப்பிக் கேட்டவுடன், ஓர் இளைஞர் கை உயர்த்துகின்றார். ஒலிவாங்கியைக் கையில் வாங்கி, "எழுத்தாளர் மு.வ." என்கிறார்.
அந்த அரங்கில் வேறு எந்த விடையும் வரவில்லை. மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சிதான் என்றாலும், அவரும் ‘வாழும் எழுத்தாளர்' இல்லை. எனவே வெளிவந்த ஒரு விடையும் சரியானதாக இல்லை. அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற, இளம்வயது ஆண்கள், பெண்கள் எவருக்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரைக் கூடத் தெரியவில்லையா, அல்லது அந்த நிமிடத்தில் சட்டென்று தோன்றவில்லையா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.

மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்ட அந்த இளைஞரை நோக்கி, "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்று கோபி கேட்க, "நான் எம்.ஏ., தமிழ் படிக்கின்றேன்" என்றார் அவர். உண்மையாகவே நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
தமிழ் எழுத்துகளிலிருந்து, இன்றைய இளைய தலைமுறை எவ்வளவு விலகி நிற்கிறது என்பதை அந்நிகழ்ச்சி உணர்த்தியது.

மிக அண்மையில், இன்னொரு அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெரிய அளவிலான ஒரு படத்தை, ஒரு கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களிடம் காட்டி, "இவர் யார் என்று தெரியுமா?" என்று கேட்கப்படுகின்றது. ஒவ்வொருவராக அந்தப் படத்தைப் பார்க்கின்றனர். சிரிக்கின்றனர். விடை சொல்ல வெட்கப்படுகின்றனர்.

"சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்சிருக்காரு. ஆனா அவரு இல்லே. வேறு யாருன்னும் தெரியலே" என்கிறார் ஒரு மாணவர்.

"எங்க தாத்தா மாதிரியே இருக்காரு" என்று ஒரு மாணவி சொல்ல, எல்லோரும் சிரிக்கின்றனர். வேறு விடைகள் வருமா என்று தொகுப்பாளர் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே வருகின்றார். ஒரு மாணவர் சட்டென்று முன்வந்து, "எனக்குத் தெரியும், இது முத்துராமலிங்கத் தேவரின் படம்" என்கிறார். அவருக்கு முத்துராமலிங்கத் தேவரையும் தெரியவில்லை என்பது புரிந்தது.

என்ன ஆயிற்று நம் இளைஞர்களுக்கு? இலக்கியத்தை விட்டும், எழுத்துலகை விட்டும் வெகுதூரம் விலகிப் போய்விட்டார்களா? தங்கள் துறைசார்ந்த படிப்பும், தொழில் அனுபவமும் மட்டுமே போதுமானவை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா? குழப்பமாக இருந்தது.

அதே வேளையில், இன்றைய இளைஞர்களின் கணிப்பொறி அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியன நம்மை வியக்க வைக்கின்றன. அதனால்தான் நம் தமிழ்ப் பிள்ளைகளை, உலகின் பல நாடுகள் வாரி அணைத்துக் கொள்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், நம் பிள்ளைகள் இன்று காலூன்றி நிற்கின்றனர். அவர்களால்தான், இணையத்தள உலகில், தமிழுக்கு இன்று ஒரு தனியிடம் கிடைத்துள்ளது. "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை" நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

இவ்வாறாக நம் இளைய தலைமுறையினர், சிலவற்றை நன்கு அறிந்தும், சிலவற்றைப் பற்றிச் சிறிதும் அறியாமலும் இருப்பது ஏன்? இந்த நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு ‘பொதுப்புத்தி' உண்டு. அப்படிப்பட்ட பொதுவான சிந்தனை, தானாக உருவாவதில்லை. ஒரே நாளில் உருவாக்கப்பட்டு விடுவதுமில்லை. சிறிது சிறிதாகச் சமூகத்தின் மூளையில் ஏறுகின்றது. சில வேளைகளில் திட்டமிட்டு ஏற்றவும் படுகின்றது.

அவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் மூளையில், பரவலாகச் சில புரிதல்கள் படிந்து கிடக்கின்றன. இந்தியச் சமூகத்தின் நிலையும் கூட அதுதான் என்றாலும், நாம் நம் தமிழ்ச் சமூகம் குறித்தே இங்கு பேசுவோம்.

மூன்று துறைகளைப் பற்றிய மூன்று விதமான செய்திகள், நம் பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்றன.

1. இலக்கியம் பயனற்றது. வேறு எந்தத் துறையிலும் இடம் கிடைக்காதவன்தான், இலக்கியம் படிப்பான்.

2. அரசியல், கயமைத்தனம் நிறைந்தது. அதில் ஈடுபட்டுள்ள அனைவரும், அல்லது மிகப் பெரும்பான்மையினர் அயோக்கியர்கள்.

3. கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குரியது. படித்தால்தான் வேலை கிடைக்கும், பணம் சேர்க்க முடியும். தான் முன்னேறுவதும், தன் குடும்பத்தை முன்னேற்றுவதும்தான் நல்ல குடிமகனின் அடையாளங்கள்.

மேலே குறிப்பிடப்பெற்றுள்ள மூன்று கருத்துகளும், இன்றைய இளைஞர்கள் பலரின் நெஞ்சங்களில் படிந்து கிடப்பது உண்மை. இவற்றை நான் கற்பனையாக எழுதவில்லை. இந்தக் கருத்துகளே, இன்றைய இளைஞர்களை வடிக்கின்றன. அதனால்தான், வாழும் தமிழ் எழுத்தாளர்களோ, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோ அவர்களால் அறியப்படாதவர்களாக உள்ளனர் & தங்கள் துறை சார்ந்த அறிவில் மட்டும், நம் இளைஞர்கள் வல்லுனர்களாக உள்ளனர்.

1970களின் தொடக்கத்தில் உருவேற்றப்பட்ட இந்த எண்ணங்கள், ஓர் அரை நூற்றாண்டு கால அளவில் வலிமை பெற்று, இறுகி, இன்றைய இளைஞர்களின் மூளைகளில் இடம் பிடித்துக் கொண்டுவிட்டன.

‘1970களில்' என்று நான் குறிப்பிடுவதற்கு மிக நியாயமான காரணங்கள் உள்ளன. அது பற்றிய விரிவான செய்திகளை, இத்தொடரில் நாம் காண இருக்கிறோம்.
எப்படியோ, ஒரு தலைமுறை இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற இடைவெளி, நம் சமூகத்திற்கு மட்டும் உரியதன்று. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எனினும், இந்த இடைவெளியைக் குறைத்து, இரண்டு தலைமுறைகளும் இணைந்து நடத்துகின்ற உரையாடல், சில புதிய பாதைகளைத் திறக்கும். தலைமுறை இடைவெளியைப் பற்றியே எண்ணிக் கொண்டிராமல், தலைமுறைச் சந்திப்பைப் பற்றித் திட்டமிடுகின்ற சமூகங்களே, தன் அடுத்த கட்ட நகர்வைத் தொடக்கும்.

முதியவர்களின் பட்டறிவும், இளையவர்களின் செயல்திறனும், இணையும் புள்ளிகளில் அதிசயம் பிறக்கும். புதிய பரிமாற்றங்கள் நிகழும். சில கற்பிதங்கள் உடைந்து நொறுங்கும்.

இளையவர்கள் மட்டுமில்லை, முதியவர்களும் அறிந்தவை சில, அறியாதவை பல! அறிந்தும் அறியாமலும்தான் அனைவரின் வாழ்வும் பயணப்படுகின்றது!

முற்றும் அறிதல் என்பது என்றைக்கும் முடியாத ஒன்று! என்றாலும், கூடுதல் அறிவை நோக்கியே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடப்பது சிங்கத்தின் குணம் என்பார்கள். நமக்கும் அது தேவைப்படுகின்றது. என் ‘நேற்றுகளை' நான் எண்ணிப் பார்க்கிறேன். 60, 70களில், நான் என் இளமைக் காலத்தில் வாழ்ந்தேன். அன்றைய சமூகச் சூழல், இளைஞர்களிடமிருந்த இலக்கிய, அரசியல் ஈடுபாடு போன்றவைகளை, இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது!

"என்ன இருந்தாலும் எங்கள் காலம் போல வராது" என்று அங்கலாய்ப்பதோ, ஆதங்கப்படுவதோ என் நோக்கமில்லை. நம் பிள்ளைகளுக்குப் பயனுடைய நேற்றுகளை எடுத்துச் சொல்வதும், அவர்களிடமிருந்து தேவையான நாளைகளைக் கற்றுக் கொள்வதும் மட்டுமே நோக்கம்!

வாருங்கள் இளைஞர்களே, உரையாடத் தொடங்குவோம்!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

(தொடர்புகளுக்கு : [email protected], www.subavee.com

சுப.வீரபாண்டியன்- சிறு குறிப்பு:

பேராசிரியர் சுபவீ எனும் சுப வீரபாண்டியன், திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பேச்சாளர். பேச்சின் சிறப்பு எழுத்திலும் கைவரப்பெற்றவர்.

கால் நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் அனுபவம், தமிழ் சமூகத்தை விழிப்படைய வைக்க ஓயாமல் எழுதியும் பேசியும் வரும் பெரும்பணி...

பேராசிரியர் பணி ஒரு பக்கம்... சமூகப் பணி மறுபக்கம்... இரண்டிலுமே செம்மை சேர்த்த பேரறிவாளர் இவர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர் சுபவீ.

சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர்.

பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர்.

சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர்.

2007ம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்று வரை அவ்வமைப்பின் பொதுச் செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர்.

இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.

(அறிந்தும் அறியாமலும்- 2: எழுத மறந்த காலம்)

English summary
Subhavee’s Arinthum Ariyamalum is a new series of socio - political articles that begins from May 1st in Tamil.Oneindia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X