For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை

தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு சொங்லி நகரில் நடைபெற்றது.

By Mathi
Google Oneindia Tamil News

சொங்லி: தைவான் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் 3-வது அமர்வு சொங்லி (Zhongli) நகரில் நடைபெற்றது.

தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் மூன்றாம் அமர்வு சொங்லி (Zhongli) நகரில் உள்ள தேசிய மத்திய பல்கலைகழகத்தில் (National Central University) சிறப்பாக நடைபெற்றது. முனைவர் திருமதி. கல்பனா தலைமையில் முனைவர் திருமதி பூங்கொடி அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

Taiwan Tamil Sangam's Third Literary meet

அன்பும் அறனும்- தி.க. இசையாழினி

முதலாவதாக 'அன்பும் அறனும்' என்ற தலைப்பில் பள்ளி மாணவி தி. க. இசையாழினி இசைப்போன்ற மழலைக்குரலில் ஆற்றிய உரை:

வாழ்வின் அடிப்படை நியதியான அன்பு, அறன் ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்த திருவள்ளுவர் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' மற்றும் 'அறனென்னப் பட்டதே இல்வாழ்க்கை' எனவும் கூறியுள்ளார். இறைவன் உயிர்குலத்திற்கு கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று, பாதுகாப்பின் கவசம். மாந்தர்க்கு உயிரியல். அன்பில்லையேல் மற்ற செல்வம், புகழ், அறிவு எவை இருந்தாலும் அவற்றிற்கு மதிப்பே கிடையாது. அன்பின் வழிநடத்தல் நம்மை என்றும் உயர்த்தும் என்றார்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' மற்றும் 'வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்.' போன்ற முன்னோர்களின் கூற்றுகள் யாவும் அன்பின் மகத்துவத்தை ஆழமாக எடுத்துரைப்பது சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையை காட்டுகிறது. இத்தகைய அன்பே பாசம், நேசம், காதல் போன்ற வெவ்வேறு பரிமாணங்ககளில் மனித உள்ளங்களை பிரதிபலிக்கின்றது.

Taiwan Tamil Sangam's Third Literary meet

இத்தகைய அன்பே அறத்திற்கும் சான்றாக உள்ளது. அறன் என்பது மனுதர்மம், வரையறுத்த தர்மம் அல்லது வாழ்வியல் நியதி ஆகும். அறத்தை பின்பற்றும் யாவரும் அன்புடையவரே. இந்த அறத்தை எல்லாரும் தானாக கடைபிடிக்க வேண்டும். எனவேதான் அறிவுரை கூறும் அவ்வை மூதாட்டி கூட அறாம் செய்ய விரும்பு என கட்டளையிடாமல் அன்பாய் எடுத்துரைக்கின்றார். அறத்தின் சிறப்பையும் உணர்ந்த திருவள்ளுவர் அறத்துப்பாலை முன்னிலைப் படுத்தியுள்ளர். செய்யவேண்டிய செயலை தவிர்ப்பதும் அநீதியை கண்டு மவுனமாக இருப்பதும் அறத்தை மீறுதல் ஆகும். அறத்தை மீறும் தருணங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து அறச்சீற்றம் கொள் என சான்றோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அன்பும் அறனும் இல்லாத சமூகம் அழியும். அறத்தை இறுதிவரை கடைபிடித்த அரிச்சந்திரன் சரித்திரத்தில் சிறந்த சான்றாகவும் உள்ளான். சமூகம், தனிமனித ஒழுக்கமின்றி போலிகவுரவம், புகழ், செல்வம் இவற்றினைப் போற்றி அழிவை நோக்கி பயணிக்கிறது. இச்சமூகத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும். எனவே இயன்ற மட்டும் அன்பு செலுத்தி அறனை பின்பற்றி இச்சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவோம். இறுதியாக தமிழே என் உயிர்முச்சு. இவ்வாறு மழலைக்குரல் மாறாமல் பேசிமுடித்தார்.

தமிழும் திராவிடமும்- முனைவர் ராஜேஷ்குமார்

இரண்டாவதாக 'தமிழும் திராவிடமும்' என்கிற தலைப்பில் தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் ராஜேஷ்குமார் பேசினார். தமிழுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு, திராவிட சொல்லின் மூலம் மற்றும் அறிமுகம், தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்டை தென்மாநிலங்கள் மற்றும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்புகள், திராவிட இயக்கங்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் அவர் உரையாற்றினார்.

முதலாவதாக, தமிழின் சிறப்பை பற்றி முனைவர் ராஜேஷ் பேசுகையில், 'கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ்க்குடி' என்கிற கருத்திற்கிணங்க தமிழ் பண்டைய காலம் தொட்டே பேசப்பட்டு வருகிறது. ஆரிய, முகலாய, ஆங்கிலேய போன்ற படையெடுப்புகளால் சிறிதும் தொய்வடையாமல் தமிழ் மொழி ஓங்கி நிற்கிறது. சமஸ்கிருதம், ஹீப்ரு போன்ற பழமையான மொழிகள் வழக்கொழிந்தாலும் நம் தமிழ் மொழி வழக்கில் இருப்பதுடன் மென்மேலும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்றார்.

Taiwan Tamil Sangam's Third Literary meet

தமிழுக்கும் திராவிடத்திற்குமான தொடர்பை பற்றி பேசுகையில் தென்னகத்து மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றுக்கெல்லாம் மூல மொழி தமிழே என ஆராய்ச்சியாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் திராவிடம் என்கிற சொல் தமிழுக்கு மட்டுமே அல்லது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கும் மற்றும் தென்இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசிய உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களை திராவிடர்கள் என அச்சொல்லோடு இணைத்துப் பயன்படுத்தவாதக ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது என்றார்.

தந்தை பெரியாருக்கும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசுகையில் பெரியார்தான் முதன்முதலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர் என்பது தவறு. ஏனெனில் பெரியார் ஒருபோதும் எந்த ஒரு மொழியையோ, நாட்டையோ உயர்த்திப் பிடித்தவர் இல்லை. அவரின் முக்கிய கொள்கைகள் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் போன்றவை ஆகும். பெரியார் தன்னுடைய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்றே பெயரிட்டார். பிற்காலத்தில் அண்ணாவின் காலத்தில் 1944-ல்தான் திராவிடர் இயக்கமாக மாற்றப்பட்டது. 1935 முதல் 1940 வரையே பெரியார் சமத்துவ கொள்கைக்காக மிகப்பெரிய போராட்டங்கள் செய்து சிறை சென்று வரும் வரைக்கும் அவர் திராவிடம் என்ற சொல்லை போராட்டக்களங்களில் பயன்படுத்தியது இல்லை. தந்தை பெரியரைப் பற்றி 19ஆம் நூற்றாண்டில்தான் நம் அனைவரும் அறிவோம். ஆனால் திராவிடம் என்ற சொல் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்ததாக மனுஸ்ருமிதி என்ற சமஸ்கிருத நூலில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் 'கல்லாத தேர்விலே நல்லவர்கள்' எனத்தொடங்கும் பாடலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்த்து வந்த திருஞானசம்பந்தர் அவர்கள் திராவிடசிசு என அழைக்கப்பட்டார். 1856ல், கார்டுவெல் என்கிற ஆராய்ச்சியாளர் தன்னுடைய மொழிசார்ந்த நூல்களில் திராவிடம் என்ற சொல்லை பரவலாக பயன்படுத்தியுள்ளார். உண்மை இவ்வாறாக இருக்க, தந்தை பெரியார்தான் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர். அவர் கன்னடராக இருந்ததினால் தமிழை அழிக்கவே திராவிடம் என்பதை முன்னெடுத்துச்சென்றார் போன்ற தவறான கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என்றார்.

திராவிட இயக்கங்கள் பற்றி பேசுகையில் தந்தை பெரியாரை பின்பற்றி வந்த திராவிட இயக்கங்கள் தமிழுக்கு மென்மேலும் பெருமையையும் எளிமையையும் பத்திரிகை, நாடகம், தெருக்குத்து, மேடைப்பேச்சுக்கள் மூலமாய் சேர்த்தார்கள். இவர்களின் தாக்கம் பத்திரிகை துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1940ற்குப் பிறகு ஆனந்தவிகடன், கல்கி போன்றவை எளிய தமிழ் சொல்லாடலை பயன்படுத்த துவங்கினர். 1946ல் புலவர் குழந்தையின் ராவணன் காவியம் சமஸ்கிருத திணிப்பிற்கு மரண அடி கொடுத்தது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் அந்நூல் முழுக்க முழுக்க எளிய தமிழ் சொல்லாடலை கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் திராவிட இயக்கத்தார், பல சமஸ்கிருத சொற்களுக்கு மாற்றாக எளிய தமிழ் சொற்களை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக விவாக சுபமுகூர்த்த பத்திரிகை-திருமண அழைப்பிதழ், கர்ணபூஷணம்-காதணிவிழா, ருதுசாந்தி-மஞ்சள் நீராட்டுவிழா, கிரகப்பிரவேஷம்-புதுமனைப்புகுவிழா, உத்திரகிரியை-நீத்தார் வழிபாடு, நமஸ்கரம்-வணக்கம், அக்ரசானர்- அவைத்தலைவர், காரியாதசி-செயலாளர், அபேக்ஷகர்-வேட்பாளர் போன்றவை ஆகும்.

தற்போதைய நிலையில் திராவிட இயக்கங்கள் முன்பைப்போல தமிழுக்கு தொண்டாற்றாமல் போனாலும் அவ்வியக்கங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை எவராலும் மறுக்க இயலாது என பேசிமுடித்தார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள்- முனைவர் கே. பி. மகேஷ்

'தந்தை பெரியாரின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சொங்யுயன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் கே. பி. மகேஷ் உரையாற்றினார். தந்தை பெரியாரின் வரலாற்றைப் பற்றி பேசுகையில், இயற்பெயர் ஈ. வே. ராமசாமி நாயக்கர், 1879 செப்டம்பர் 17ல் ஈரோட்டில் பிறந்தார், 1973 டிசம்பர் 24ல் மறைந்தர். அவர் பொதுக்கூட்டங்கள், மேடைப்பேச்சு என 21,400 மணி நேரங்கள் பேசியுள்ளார்.

அவரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதித்து கேட்டால் அதனை 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இடைவிடாமல் நாம் கேட்கலாம். இத்தனை பேச்சுக்கள் யாவும் எளியோரின் முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் மட்டுமே. தந்தை பெரியாரை பற்றிய பிம்பம் கடவுள் மறுப்பாளர் மற்றும் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற இரண்டு விடயங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறது.

Taiwan Tamil Sangam's Third Literary meet

ஆனால் இவ்விரண்டு விடயத்திற்குப் பின்னாலிருந்து பார்த்தால் அவரின் நீண்ட நெடிய சிந்தனைகள் புலப்படும். கடவுளின் பெயரை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிற மதங்களில் பெண்ணடிமை இருந்தாலும் இந்து மத்தில் மட்டுமே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

இவை அனைத்திற்கும் மூலம் யாதெனில் சாஸ்திரங்கள், வேதங்கள், இவற்றை அளித்தது யாரெனில் கடவுள் என சொல்லப்படுகிறது. எனவே கடவுள் மறுப்பு என்ற ஒற்றை கொள்கையில் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பார்ப்பன எதிர்ப்பு என அனைத்தும் அடங்கிவிடும், எனவேதான் பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தார். 1920ல் பாலா கங்காதர திலகரின் இறுதி ஊர்வலத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு திலகரின் உடல் தங்கிய பாடை தூக்க அனுமதி மறுக்கப்பட்ட விடயத்தையும், காந்தியடிகளை 1929 வரை தனது வீட்டின் முற்றம் வரையே உபசிரிப்பு செய்த சீனிவாச ஐயங்கார் அதன்பின் வீட்டின் உட்பகுதி வரை அழைத்துச்சென்ற விடயத்தையும் பார்க்கும் போது சாதிக்கொடுமை பாரபட்சமின்றி சாமானிய மனிதன் முதல் பெரும் அரசியல் தலைவர் வரை இருந்துள்ளது என புலப்படும். இதனைப்பற்றி காந்தியரிடம் கேட்டபோது இதற்கு முழு காரணம் தந்தை பெரியாரின் தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகளே. எனவே அவருக்குதான் தன் நன்றியை தெரிவிக்கவேண்டும் எனவும் கூறினார்.

தந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதன் முதல் மாநில மாநாடு 1925ல் செங்கல்பட்டில் நடைபெறாது. அம்மாநாட்டில் அவர் இயற்றிய தீர்மானங்கள் எக்காலத்திலும் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு மிகச்சிறப்பானவை. அவைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களின் மறுமணம், மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்க பெண்ணுக்கு திருமண வயது 16 போன்றவை ஆகும். இத்தகைய சீரிய முயற்சிகளை பெரியார் எடுக்கவில்லை எனில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தற்போது நடந்திருக்க வாய்ப்பில்லை. பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் பெரும் வெற்றி பெற்றன என்பதற்கு சாட்சியாக இருந்தது பெரியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் பேச்சு. அவர் 1920 களில் நாடகத்துறையில் இருக்கும்போது தேனீர் வாங்க செல்லும்போது 'அய்யா சாமி' என கூப்பிடும் போது 'டேய் வரன்டா' என்ற அதிகார தொனியில் பதில் வருமாம். 1930களில் 'சாமி' என கடைக்காரரை அழைக்க 'இதோ வரன்டா' எனவும், இதுவே 1940களில் 'ஐயரே' என கடைக்காரரை அழைக்க இப்போது 'வரம்பா' என்பது கடைக்காரரின் பதில்.

இத்தகைய மாற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரின் சீர்த்திருத்த நடவடிக்கைகளே ஆகும். இவ்வாறாக சாதிய கொடுமைகளுக்காகவும் பெண்ணடிமைக்கு எதிராகவும் மிகக்கடுமையாக போராடினார் பெரியார். அவர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாவே பெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவரின் இறப்பிற்குப் பிறகு வெகுவாக இச்சமூகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.

தமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்- முனைவர் மு. திருமாவளவன்

இலக்கிய அமர்வின் இறுதிப் பேச்சாளராக முனைவர் மு. திருமாவளவன், 'தமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தமது எளிய உரையின் மூலமும், அழகிய சொல்லாடல் மூலமும் பல புதிய செய்திகளைப் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். உரையின் தொடக்கத்தில் 'தமிழ் மொழி வளரும்போதே நாகரிகமும் சேர்ந்தே வளர்ந்தது' என்ற கருத்தினைச் சொல்லி தமிழ் மொழியின் தொண்மை, பரிணாமவளர்ச்சி மற்றும் அதன் சிறப்பு அம்சங்களையும் பற்றி உரையாற்றினார். பிறகு சங்க இலக்கியம் பற்றி சில குறிப்புகளை எடுத்துக் கூறி சங்க நூலகள் எவை என்றும் அவை எவ்வாறு முறையாக வகைப்படுத்தப்பட்டன என்றும் அனவைருக்கும் எடுத்துரைத்து புரிதலில் ஒரு தெளிவை உண்டாக்கினார். தமிழின் பழைமை வாய்ந்த தொல்காப்பிய நூலைப் பற்றி அரிய கருத்துகளைப் பேசத் தொடங்கினார். தமிழ் மொழியில் எழுத்துக்கள் வடிவமைக்கப் பட்ட செய்திகளை எடுத்துச் சொல்லி தமிழில் சில இலக்கணங்களைப் அழகாக புரிய வைத்தார்.

Taiwan Tamil Sangam's Third Literary meet

பிறகு இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி சங்க நூலான தொல்காப்பியத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்திகள் சொல்லப் பட்டிருப்பதாகக் கூறி, எப்படி ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உயிர்கள் வகைப்படுத்தப்பட்டன என்ற செய்தியையும் தனது உரையில் இணைத்துக் கொண்டார். இப்படி சங்க காலத்துப் படைப்பாளிகள் முன் கூட்டியே இந்த உலகைப் பற்றி எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று சொல்லி அவர்களின் கற்பனைத் திறனைப் பற்றி சிலாகித்துக் கொண்டார். பிறகு உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரின் கற்பனைச் செறிவு பற்றியும் உரை நிகழ்த்தும்போது திருக்குறளில் சொல்லப்படாத செய்தியே இல்லை என்றும் திருவள்ளுவரின் தீர்க்க ஞானம் பற்றியும் வியந்து போற்றினார். மற்றும் 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று திருவள்ளுவர் பாடியதிலிருந்து அவர் தமிழ்ச் சமூகத்தையே சார்ந்தவர் என்னும் ஆழ்ந்த கருத்தை எடுத்துரைத்து சில திருகுறள்களை எடுத்துச் சொல்லி அவை எப்படி தமிழ் மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் மற்றும் அறிவியல் செய்திகள் சார்ந்த கருத்துகள் பலவற்றையும் விவரிக்கின்றன என்றும் தமது உரையில் விளக்கினார்.

திருக்குறளைத் தொடர்ந்து அவ்வையார் படைப்புகளைப் பற்றி பேசும்போது, மொத்தம் உறுதி செய்யப்பட்ட மூன்று அவ்வையார் இருந்ததாக புதிய தகவல்கள் சொல்லி, சங்க காலத்தில் ஏறக்குறைய 49 பெண்பால் புலவர்கள் இருந்ததாக அரியத் தகவல்களையும், அவ்வையாரின் அறிவு நுட்பம், சிந்தனைத் திறன், எப்படி அவர் படைப்புகள் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தையும் எடுத்து விவரிக்கின்றன என்னும் பல செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, சிலப்பதிகாரத்தின் கற்பனை வளத்தையும், அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் நியதிகளையும் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

தொடர்ச்சியாக பாரதியில் தொடங்கி பாலகுமாரன் வரை அவர்களின் படைப்புக்களை எடுத்துக்காட்டி, இப்படி சங்க காலம் முதல் சம காலம் வரை தமிழ் மொழியில் உருவான படைப்புகளை பற்றி ஆழ்ந்த கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டு, எந்த நூலையும் தெளிந்த ஆழ்ந்த சிந்தனையோடு அணுகினால் அலாதி இன்பம் என்று கூறி முடித்தார். அது மட்டுமன்றி தமிழ் நூல்கள் யாவும் பக்கவாட்டு சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறப்பம்சம் உடையன என்னும் புதிய செய்தியையும் உரையில் விளக்கினார்.

இப்படி தமது உரையில் பல ஆழ்ந்த செய்திகளை தமது அழகான பேச்சின் மூலம் தெளிவு படுத்தினார். அவரின் உரையைக் கேட்கும்போது, ஒரு சிறிய தமிழ் இலக்கண நூலகத்தினில் சென்று வந்ததைப் போன்று நிச்சயம் ஓர் உணர்வு தோன்றும்.

இறுதியாக மழலைச்செல்வி இசையாழினிக்கு தைவான் தமிழ் சங்கம் சார்பாக நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. மேலும் அவரின் பேச்சினை பாராட்டி அகமகிழ்ந்து தைவான் தமிழ் சங்க துணைத்தலைவர் முனைவர் சங்கரராமன் தனிப்பட்ட பரிசாக 1000 தைவான் டாலர்களை அளித்தார்.

செய்தி: இரமேஷ் பரமசிவம், துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்.

English summary
Taiwan Tamil Sangam had conducted Third Literary meet on Last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X