For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைபேயில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு!

தைபேயில் தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு நடைபெற்றது.

Google Oneindia Tamil News

தைபே: தைபேயில் தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு கோலாகலமாக நடைபெற்றது.

தைவான் தமிழ்ச்சங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஆறாம் அமர்வு தைபே நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. முனைவர். மு.திருமாவளவன் அவர்கள் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்த முனைவர் வனிதா நித்தியானந்தம் முனைவர். சுப்புராஜ் திருவெங்கடம் அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் பட்டிமன்றம் புகழ் ராஜா அவர்கள் காணொளி வழியாக சிறப்புரையாற்றி இலக்கிய அமர்வினை துவங்கிவைத்தார்.

Tamil literature of the sixth session was held in Taipei

தமிழ் இலக்கிய அமர்வின் சிறப்புரையாக பட்டிமன்றம் புகழ் ராஜா அவர்கள் 'கம்பனின் கவி' என்ற தலைப்பில் கம்பனின் சிறப்பு பற்றி காணொளி வழியாக சிறப்புரையாற்றினார். கம்பராமாயணத்தில் சில இடங்களில் திருமால் மற்றும் ஸ்ரீராமரை புகழ்ந்தாலும்கூட "உலகம் யாவையும்" எனத்தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப்பாடலில் எந்த ஒரு கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல் பாடுவது கம்பனின் சமயம் கடந்த பார்வை. சிறந்த நாடக ஆசிரியர் என போற்றப்படும் ஷேக்ஸ்பியர் சுமார் முப்பதாயிரம் சொற்களை பயன்படுத்தியுள்ளார் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் கம்பனோ சுமார் ஒரு லடசத்திற்கு மேலான தமிழ் சொற்களை பயன்படுத்தியுள்ளார் என்று ஆய்வரிக்கை சொல்கிறது. இதிலிருந்தே கம்பனின் சொல்லாட்சியை நாம் விளங்கிக்கொள்ள முடியும். கம்பனின் சொல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக தாடகையை வதம் செய்யும் காட்சியை விளக்கும் "அலை உருவ" எனத்தொடங்கும் பாடலில் ஒன்பது இடங்களில் 'உருவ' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒன்பது இடங்களிலும் வேறு வேறு அர்த்தங்களில் வருகிறது.

"மறு வாசிப்பில் கம்பன் மலர்கிறான்" என்ற வாக்கிற்கிணங்க முதல் வாசிப்புகளில் கடினமாய் இருந்தாலும் மேலும் மேலும் வாசிக்கையில் கம்பராமாயணம் இனிமையாய் இனிக்கும். மகாகவி பாரதி ''யாமறிந்த புலவர்களில் கம்பனைப்போல், வள்ளுவனைப்போல்" என்றும் "கம்பன் இசைத்த கவியெலாம்" என்று குறிப்பிடுவதும், காளிதாசன் "கம்பன் என்றோர் மானிடன்" எனப் பாடத்துவங்குவதும், கண்ணதாசன் தன் பாடல்களில் பல இடங்களில் கம்பனின் பெயரை பயன்படுத்தியதும் தமிழ் இலக்கிய உலகில் கம்பனை தொடாத கவிஞர் எவருமில்லை என்று கூறி கம்பனின் கவி ஆளுமையை சிறப்பித்து பேசினார். மதுரையில் தெருக்களின் பெயர்கள் தமிழ் மாதங்களின் பெயரில் உள்ளது போல தமிழ் மாதங்களின் முதல் மாதமான "தை " மாதத்தின் பெயர் 'தை'வான் நாட்டின் பெயரில் இருப்பது சிறப்பு என கூறினார். மேலும் தைவான் தமிழ் சங்கத்தின் தமிழ் தொண்டினை பாராட்டி வாழ்த்துக்களை கூறி தன் சிறப்புரையை முடித்தார்.

அதன்பின்னர் "இணையத்தில் தமிழ் அறிவியல்" என்ற தலைப்பில் முனைவர் வனிதா நித்தியானந்தம் அவர்கள் சிறப்புரையாற்றினார். தற்பொழுதைய சூழலில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்று. இத்தகைய காலத்தில் அறிவியல் செய்திகள் தமிழ் மொழி வழியாக இணையத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இல்லையென்பதே பதில். தற்போது, வலையொளி, வலைப்பூ , தமிழ் விக்கிபீடியா போன்றவைகள் அறிவியல் செய்திகளை தமிழில் கொண்டுசேர்க்கிறது. இவற்றில் பெரும்பாலும் அடிப்படை அறிவியலே விளக்கப்படுகிறது. ஆனால் பல முக்கிய ஆழ்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள், ஆய்வுமுடிவுகள் பற்றிய தற்பொழுதைய தகவல்களை தமிழில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிக அவசியம். சமீபத்தில் தடுப்பூசி பற்றிய வதந்தியானது புலனம் மற்றும் முகநூல் வழியாக பரவியதை அனைவரும் அறிவோம். தடுப்பூசியினால் மதியிறுக்கம் வரும் என்ற வதந்தியினால் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தவறினர். இத்தகைய வதந்திகள் குழந்தைகளின் உயிரையே அடகுவைக்கின்றன. பல ஆராய்ச்சிகள் தடுப்பூசியினால் மதியிறுக்கம் நோய் வருவதில்லை என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களை பின்வரும் இணைய தொடுப்புகளில் பெறலாம் https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25898051, https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25562790, https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24814559. இத்தகைய ஆய்வரிக்கைகள் இணையத்தில் தமிழில் வரவேண்டும். அப்படி வந்தால் தான் மக்கள் வதந்திகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்று நவீன அறிவியல் தமிழில் வருவதால் உள்ள பயன்களை கூறினார். நம் அன்றாட வாழ்வில் அலைபேசி தொடங்கி மருத்துவம், ராணுவம் வரை அறிவியல் உள்ளது. மக்கள் வாழ்வு மேம்பட அறிவியல் முன்னேற்ற தரவுகளை தமிழில் கொணர்தல் வேண்டும். ஆங்கிலம் அறிந்த அறிவியல் புரிந்த ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அறிவியல் செய்திகளை ஆதாரங்களோடு தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என கூறி தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக முனைவர். சுப்புராஜ் திருவெங்கடம் அவர்கள் "தென்கிழக்காசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் தாக்கம் - ஒரு நாடோடியின் பார்வையில்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மிகப்பெரும் வரலாற்று ஆய்வாளர்களான சர். ஜான் மார்ஷல், ஹென்றி ஹால், மற்றும் வில் டுராண்ட் ஆகியோரின் ஆய்வுகளின்படி, இந்தியாவில் வேதகாலத்திற்கு முன்பாகவே ஒரு செழுமையான கலாச்சாரம் புழங்கி வந்துள்ளது, அவர்கள் கடல் தாண்டிச்சென்று எகிப்து, சீனம் மற்றும் சுமேரிய கலாச்சார மக்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர் என்று பதிவுசெய்துள்ளார்கள். மத்தியதரைக்கடல் தொடங்கி சீனக்கடல் வரையில் திரைகடலோடிய அந்த கடலோடிகளே திரமீளர் (தமிழர்) ஆவார்கள். திரமீளர் என்றால் திரை மீளர், கடல் கடந்து சென்று மீள்பவர்கள் என்றும் அர்தம் இருக்கிறது.

கணியன் பூங்குன்றனின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" மற்றும் அவ்வையின் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற வரிகளில் உள்ள பிற உயிர் பேணும் சகோதரத்துவ மனப்பாங்கும், செல்வம் சேர்க்க நெடுந்தொலைவு கூட பயணிக்கலாம் என்கிற உளப்பாங்கும் தமிழர்க்கு ஆதியிலே ஊட்டப்பட்டிருப்பதால் கடலோடுதல் தமிழர்க்கு விருப்பமான ஒன்றாய் மாறியிருக்கலாம். இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் பற்றி ஆய்வாளர் குவாரிட்ச் வேல்ஸ் கூறுகையில், இந்திய ஆய்வாளர்களில் பெரும்பாலோனோர் வடபுலத்தவர் மற்றும் தென்புலத்தின் மேட்டுக்குடி சார்ந்த ஆய்வாளர்கள். அவர்கள் தென்கிழக்கு ஆசியாவில் வடபுல மற்றும் வேத கலாச்சாரம் வகித்த பாத்திரத்தை மிகைப்படுத்தி கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். எம். கோடீஸ் என்ற மற்றொரு ஆய்வாளர், " வடஇந்திய கலாச்சாரமானது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் கலாச்சார தொடர்பிற்கு பங்களித்திருக்கின்றன. ஆனால் தென்னகத்தின் கலாச்சார தாக்கமானது இலங்கை, ஜாவா, சுமத்ரா, போர்னியோ, மலாயா, கம்போடியா, தாய்லாந்து, மற்றும் பாலி ஆகிய பகுதிகளில் மிகவும் வெளிப்படையானது "என்கிறார். மிக சமீபமாக, எம். ஸ்டெர்ன் என்கிற ஆய்வாளர், சாம்பா (சியாம்) மற்றும் கம்போடியா ஆகியவற்றில் கூட, பல்லவ (தமிழ்) தாக்கங்கள் அவர்களின் கலாச்சாரம் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு பகுதியாக இருந்து வருகின்றன என்பதை சுட்டி காட்டுகிறார். தமிழ் மற்றும் தமிழர்களின் கலாச்சரத்தின் தாக்கமானது தென்கிழக்காசிய நாடுகளில் 17 நாடுகளில் இருந்ததாக கூறுகிறார். தற்போதைய பர்மா, மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் எச்சங்களாக கிடைத்துள்ள சான்றுகளை அனைவருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கி கூறி தனது சிறப்புரையை முடித்தார்.

தைவான் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று இணைய காணொளி வழியாக சிறப்பானதொரு உரையை அளித்த . ராஜா அவர்களுக்கும் நேரலைக்கு உதவிய செல்வேந்திரன் அவர்களுக்கும் தைவான் தமிழ்ச் சங்கம் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தைவான் தமிழ்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

English summary
Tamil literature of the sixth session was held in Taipei, Taiwan tamil sangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X