• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பூசாரி மாரியப்பன் சவரக்கடை..!

|

சென்னை: பூசாரி மாரியப்பன் சவரக்கடை.. பெங்களூரில் சிவில் என்ஜினீயராக வேலை செய்தாலும், அது என்னவோ எங்க ஊர் காளப்பட்டிக்கு வந்து "பாலாஜி சலூன்"ல முடி வெட்டினால் தான் மனசுக்கு நிம்மதி. ஒருவேளை கிராமத்திலேயே வளர்ந்தது காரணமாக இருக்கலாம். தெரியவில்லை.

பள்ளிக்கூட வயசில் இருந்தே தலைமுடி மீது அதீத ஆர்வம். என்னைவிட பெரிய பசங்க சிகை அலங்காரத்தை சுத்தியே மனசு ஓடும். அப்பா வீட்டில் இல்லை என்றால் கண்ணாடி முன் நின்று விதம் விதமா சீவிப் பார்ப்பேன். முடி வெட்ட போற எல்லா நாளுமே வீட்டுல சண்டை தான். ஆனா அப்பா விட மாட்டார். எப்பவும் ஒரே மாதிரி அரை அங்குல நீளம் விட்டு சம்மர் கட்டிங் தான். பின் மண்டையில கைய வெச்சு மேலே தேச்சா முள்ளு முள்ளா குத்தும். எட்டாம் வகுப்பு முடியும் வரை என் சிகை ஆர்வம் நிறைவேறவே இல்லை. பெங்களூரில் குடியிருப்புக்கு அருகிலேயே நிறைய ஆண்கள் அழகு நிலையம் இருக்கிறது. ஆனால் போவதில்லை. சுந்தரேசன் பலதரம் கிண்டல் செய்து இருக்கிறான்.

Tamil Sirukathai: Mariappan barber shop

"கதிரு..பெங்களூர்ல வேலை செஞ்சுட்டு கிராமத்துல முடி வெட்டுறது தமிழ் நாட்டுலேயே நீ மட்டும் தான்" - சொல்லிச் சிரிப்பான். நானும் சிரிப்பேன்.

முடிவெட்ட, அப்பாவோட பழைய கருப்பு ராஜ் தூத் எடுத்து கெளம்பினேன். பிளாஸ்டிக் குடம், வாளியை தள்ளு வண்டியில் விற்கும் பெரியவர் ஒருவர் ரோட்டோரம் உரக்க கூவி கடந்து போனார். ஊர் முடிந்து கொஞ்சம் தள்ளி இருந்த பழைய பஞ்சாயத்து கட்டிடத்தை கடக்கும்போது தான் ஏதேச்சையாக எதிரே கவனிச்சேன். பழைய மாரியப்பன் சவரக்கடை.

பஞ்சாயத்து கட்டிடத்தில் மொத்தம் மூன்று கடைகள்.அதில் மாரியப்பன் கடையும் ஒன்று. கட்டிடம் ஒரு மண்மேடை ஒட்டி இருந்தது. மண்மேடு ஓரம் பின்புறம் எல்லாம் பார்த்தீனியம் செடி காடாய் முளைத்து குப்பை அண்டிக் கிடக்க பன்றி எதையோ மும்மரமாய் மேய்ந்து கொண்டு இருந்தது. மாரியப்பன் கடையின் சரபலகைகள் பல உடைந்து இருந்தன. பலகையின் அடிப்புறம் முழுவதும் சிவப்பு நிறத்தில் கரையான் புத்து முளைத்து மன்னடிந்து குப்பை மேடு ஆகி இருந்தது. உடைந்த சரபலகையின் முன் யாரோ ஒரு பிச்சைக்காரன் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான்.

கடையை பார்த்த அந்த நொடி மாரியப்பன் கண் முன்னே வந்து நின்றார். அவர் சவரக்கடைக்கு அருகே முன்பு ஒரு பூச்சி மருந்துக்கடை இருந்தது. அது பழைய நிலையை விட இன்னும் அழுக்கடைந்து அப்படியே இருந்தது. சிவசாமி செட்டியார் தான் அதன் முதலாளி. அப்பாவுக்கு நன்கு பழக்கம். நான் சிறுவனாக இருந்த போது தோட்டத்துக்கு உரம் வாங்கிய ஞாபகம் இப்போதும் இருக்கிறது. நான் மாரியப்பன் கடையை பார்த்துக்கொண்டே கடந்தேன். மருந்துக்கடையில் சிவசாமி யாரிடமோ மர நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். கடைவாசலில் சாயம் போன FACT உர விளம்பர துணி பாதி கிழிந்து காற்றில் ஆடியது.

வெயில் முகத்தில் அடிக்க - "இப்போ எதுக்கு மாரியப்பன் ஞாபகம்?" என்னை நானே கேட்டுக் கொண்டேன். "ஒரு வேளை முடி வெட்ட போவதாலேயோ?" - எது எப்படியோ இந்த நொடி மாரியப்பன் தான் முழு மனதையும் ஆக்கிரமித்து இருந்தார். மனசு ஒரு பதினைத்து வருடம் பின்னோக்கி பள்ளிகூட வயதில் பயணித்தது.

பதினைந்து வயது வரை, ஊரில் எனக்கு தெரிந்த ஒரே சலூன் - மாரியப்பன் சவரக்கடை தான். வடக்கு மேட்டில் சிவன் கோவில் அருகே வேறொரு கடை இருந்தது.அது என்னவோ அப்பா என்னை மாரியண்ணன் கடைக்கு தான் அழைத்து வருவார்.

அவருக்கு அப்போது 49 கடந்த நடுத்தர வயது. ஒல்லியாக கோடு போட்டது போல் திருத்தமான மீசை வைத்து இருப்பார். எண்ணை போட்டு படிய வாரிய தலைமுடி. பின்புறம் பாகவதர் போல் வைத்து இருப்பார். எப்பவும் காவி வேட்டியும் வெள்ளை சட்டையும் தான் அணிவார். தெய்வ பக்தி அதிகம். கடையில் எல்லா தெய்வங்களின் படங்களும் இருக்கும். முருகன் பிரதான தெய்வம். தைப்பூசம் கார்த்திகை நோம்பி வந்தால் தவறாமல் பழனி சென்று வருவார். நெத்தி நிறைய திருநீறோடு காலையில் விளக்கு வைத்து விட்டுத் தான் கத்திரியை தொடுவார். செய்யது பீடி மட்டும் பிடிப்பார்.

மாரியப்பன் சவரக்கடை ரொம்ப சிறியது. அதுல கொஞ்சம் உயரமா ரெண்டு மர நாற்காலி. ரெண்டுமே சுழலாது. வந்தவங்க உக்கார ஒரு நீள மர பெஞ்ச். பழைய ரெண்டு கண்ணாடி. குட்டிக்குரா பவுடர் டப்பா. மூணு நாலு கத்திரிக்கோல். முகம் மழிக்க கத்தி, ஷேவிங் சோப்பு, ப்ரஷ். முகத்தில் ஷேவிங் செய்து தண்ணிர் அடிக்க ஒரு பழைய ஸ்ப்ரேயர் பாட்டில். கத்தி பதம் போட தோல் பெல்ட். அதை சுவற்றில் ஆணி அடிச்சு மாட்டி இருப்பார். ஷேவிங் செய்வதற்கு முன் அதில் மேழும் கீழும் கத்தியை இழுத்து பதம் செய்வார். அதை செய்யும் போது அவர் தலை ஒரே வேகத்தில் முன்னும் பின்னும் செல்லும்.

பின் சிறிது நாட்கள் கழித்து டவுனில் இருந்து புதிய ஷேவிங் கத்தி வாங்கி வந்தார். நீளமாக மடித்து வைப்பது போல் இருக்கும். அதில் அசோகா அல்லது பனாமா பிளேடை பாதி வெட்டிச் சொருகி பக்கவாட்டில் உள்ளே இழுத்து ஷேவிங் செய்தார். அதில் செய்ய இரண்டு ரூபாய் அதிகம் தர வேண்டும். தினமணி பேப்பர் தான் வாங்குவாரு. கடையை எப்போதும் சுத்தமாக வைத்து இருப்பார். கடைக்கு வரும் ஆட்களின் வெட்டி அரட்டை அல்லது அரசியல் பேச்சில் கலந்து கொள்ளாமல் நிறைய கேட்டுக் கொள்வார். எதாவது கருத்து கேட்டாலும் கேட்பவர் மனம் நோகாதவாறு பேசுவார். மாரிக்கு நிறைய நாட்டு வைத்தியம் தெரியும். கடைக்கு வருகிற நிறைய ஆட்கள் அதை மாரி மூலமே வாங்கி அதன் பலன் எப்படி இருந்தது என்று அடுத்த முறை வரும் போது மாரியிடமே சொல்லுவார்கள்.

மாரியின் சம்சாரம் கமலா. மாரிக்கு வாரிசு எதுவும் இல்லை. பார்க்காத மருத்துவர் இல்லை. வருகிற வருமானத்தில் நிறைய செலவு செய்து இருவரும் சிகிச்சை எடுத்தார்கள். இருந்தும் எதுவும் நடக்கவில்லை. மாரியை எப்போவுமே ரொம்ப கவலை படுத்தற விஷயம் அது தான். கடைக்கு முடி வெட்டவும் ஷேவிங் செய்யவும் வர்றவங்க பாதி பேர் மாரியிடம் வேலைக்கு நடுவில் இதை பற்றி நிறைய பேசுவார்கள். அவர்கள் கேட்ட ஏதாவது ஒரு நாட்டு வைத்தியமோ தெய்வ வழிபாடோ பரிகாரமா சொல்வார்கள். மாரியப்பன் எல்லாவற்றையும் நிதானமா கேட்டுகுவார்.என்ன பேசினாலும் மாரியின் கவனம் முழுவதும் கத்திரி சப்தத்திலும், சோப்பு நுரை மழித்துச் செல்லும் கத்தியின் மீதும் தான் இருக்கும்.

மாரியண்ணனுக்கு கடையில் ஒத்தாசைக்கு சம்சாரம் கமலாவின் தம்பி சண்முகம் இருந்தான். அவனுக்கு அப்போ 25 வயசு இருக்கும். கடைக்கு வர்ற முக்கிய ஊர் ஆட்களுக்கும் பெரிசுகளுக்கும் மாரி தான் முடி திருத்தினார். முகச்சவரம் செய்து விட்டார். என் வயசு சின்ன பசங்க பாதி பேர் சண்முகம் கிட்டே தான் கட்டிங் செய்வாங்க. வார கடைசி நாட்களில் கடைக்கு நல்ல கூட்டம் வரும். மாரி பம்பரமாய் சுழல்வார். இடை இடையே கொல்லை புறம் போய் பீடி பிடித்து பின் வந்து தொடர்வார்.

அப்பாவோட இதே ராஜ்தூத் பைக்ல தான் என்னை கூட்டிட்டு வருவார். "மாரி...நல்லா காது ஓட்ட சம்மர் கிராப் வெட்டி விடுப்பா" - "இவனுக்கு விசுக்குனு மசுரு வளர்ந்துடுது" - அப்பா மீசைய நீவிட்டே சொல்ல...எனக்கு கோபமாக வரும். பின் மண்டை கனக்க ஸ்டெப் கட்டிங் வைக்க ஆசை. அப்பா ஒரு நாளும் சரி என்று சொன்னதில்லை. சண்முகத்துக்கு ஸ்டெப் கட்டிங் நன்கு தெரியும். அதனால் தான் எங்கள் தெரு பையன்கள் சண்முகம் இடம் முடி திருத்துவார்கள். சண்முகம் ஓரக் கண்ணால் என்னை பார்த்து சிரிப்பான். நான் எரிச்சலில் முகத்தை திருப்பிக் கொள்வேன்.

மாரிக்கு நெறைய முடி வெட்றதுல என்ன சந்தோசமோ? - அப்பா கேட்டதுக்கு மேலேயே கரக்,கரக் என்று கத்தரி சத்தத்தோடு முடியை ஒட்ட வெட்டி விடுவார். இடை இடையே சீப்பை கத்திரி மேல் வைத்து தட்ட சீப்பில் உள்ள பொடி முடி முழுவதும் தரையில் விழும். பாதி வெட்டுகையில் நிறுத்தி விட்டு தரையில் உள்ள முடியை வீடு கூட்டும் விளக்குமாறு கொண்டு கடையின் கதவுக்கு பின்புறம் கூட்டி வைப்பார். அங்கே வெள்ளையும் கருப்புமாக முடிக் குவியல் பஞ்சு பொதி போல நிறைந்து இருக்கும். அதில் சிறிய சிறிய சதுரமாக கிழத்த தினமணி பேப்பரில் தாடி மீசை மழித்த மயிர் கற்றைகள் சோப்பு நுரையுடன் கலந்து நிறைய இருக்கும். கூட்டிய பின் மீண்டும் வந்து வெட்டுவதை தொடர்வார். நான் திருவிழா பலி ஆடு போல தலையை குனிந்து அமர்ந்திருப்பேன். மேல் துண்டில் விழும் பொடி முடிகளை அடிப்புறம் விரல் கொண்டு தட்டி விட்டு ரசிப்பேன். எனக்கு ஏதோ விதத்தில் பொடி முடி காந்தத்தில் ஒட்டும் கருப்பு மண்ணாக நினைக்க தோன்றும். முடிவெட்டி முடித்ததும் பிடரி முடியை வெள்ளை துண்டு வைத்து தட்டுவார். கொஞ்சம் குட்டிக்குரா பவுடர் எடுத்து பிடரியில் தடவிவிட்டு அப்பாவிடம் சட்டையை வாங்கி அவரே பொத்தான் போட்டு விடுவார். எனக்கு அந்த பவுடர் வாசனை ரொம்ப பிடிக்கும். ஒரு வேளை எங்கள் வீட்டில் எப்போதுமே பாண்ட்ஸ் பவுடர் வாங்குவது காரணமாக இருக்கலாம்.

"கதிரு...! வெளிய நல்ல வெய்யிலு...உருவம் கண்ணு...! வீட்டுக்கு போய் நல்லா எண்ணெய் தேச்சு குளி" - சரியா? - என்னை பார்த்து சிரிப்பார். அப்பா சிரித்து விட்டு அடர்ந்த கோடுபோட்ட வேட்டி டவுசரில் இருந்து பணம் எடுத்து தர...சிரித்து கொண்டே சங்கோஜமாக ரெண்டு கையில் வாங்கிக் கொள்வார்.

"வரட்டுமா மாரி... நமக்கு அடுத்த வாரம்" - அப்பா சொல்ல...

"சரீங்க" - மாரி தலையாட்டிவிட்டு பைக் போற வரை வெளியே நின்று அனுப்பி வைப்பார்.

அப்படி ஒரு ஞாயிறு அப்பாவுடன் வந்தேன். அப்பா உரக்கடைக்கு போக வேண்டி இருந்ததால் என்னை கடையில் விட்டு சென்று விட்டார். கடையில் கூட்டமில்லை. அன்று சண்முகத்தையும் காணோம்.

கடைக்குள் வந்தேன். என்னை பார்த்த மாரி - "உக்காரு கண்ணு...இதோ இப்ப வந்தர்ரேன்" - வாஞ்சையாய் சிரித்தார். நான் ஒரு ஓரமாக பெஞ்சில் அமர்ந்தேன்.

கட்டிங் நாற்காலியில் யாரோ ஒருவர் சாமியார் போல் அமர்ந்து இருக்க அவரிடம் மாரி வலது உள்ளங்கையை காட்டிக் கொண்டு இருந்தார். அந்த ஆளுக்கு 65 வயது இருக்கும். நரைத்த தலை. முக்கால் பாகம் வெளுத்த தாடி. நீண்ட பெரிய மீசை. நெற்றில் பெரிய கும்குமம் வைத்து இருந்தார். தொப்பையுடன் கூடிய மேல் வயிறு. சட்டை எதுவும் போடாமல் வெற்று உடம்பில் மார்பிலும் வயிற்றிலும் திருநீறு பூசி இருந்தார். அவரது வலது கையில் நிறைய முடிச்சுகளோடு கூடிய வெளுத்த சிவப்பு நிற கயிறு ஒன்றை கட்டி இருந்தார். மாரியின் வலது கையை நீவிக்கொண்டே பேசினார்.

அவர்கள் பேசியதில் இருந்து புரிந்தது அந்த ஆள் ஒரு கை ரேகை ஜோசியர் என்று. "மாரிப்பா ...நா நெறைய கை பார்த்து இருக்கேன். உனக்கு கடவுள் அருள் நிரம்ப இருக்குது". - ஜோசியர் சொன்னார். மாரியப்பன் அவரை ஆர்வமாய் பார்க்க... "இத நான் சொல்லலே...உன்னோட ரேக சொல்லுது..இங்க பாரு.." - மாரி கையில் எதையோ சுட்டிக் காட்டினார். "நீ போன ஜென்மத்தில கோவில் பூசாரியா சேவகம் செஞ்சு இருக்கனும் மாரி" - ஜோசியர் ஆணி அடித்தது போல சொன்னார்.

அவர் மேலும் ஏதேதோ சொல்ல..மாரி உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். அந்த வயதில் எனக்கு சரியாய் புரியா விட்டாலும் எதோ எண்ணத்தில் சிரிப்பாய் வந்தது. ஒரு வேளை மாரியப்பனை அவர் பூசாரி என்று சொன்னதால் கூட இருக்கலாம். "வாரம் ரெண்டு நாள் முருகனுக்கு நேத்துக்க" "நோம்பிக்கு காவடி எடு..சரியா?" - ஜோசியர் சொன்னார். "சரிங்க சாமி". மாரி வேகமா தலை ஆட்டினார்.

"கொஞ்சம் பொறு" ஜோசியர் எழுந்து போய் பக்கத்துக்கு நாற்காலி மீது வைத்து இருந்த ஒரு அழுக்கான மஞ்சள் பையை எடுத்தார். உள்ளே கைவிட்டு எதையோ துழவி பின் எடுத்தார். அவர் கையில் ஐந்து அங்குல உயரத்தில் முக்கோணமாக ஒரு கருங்கல் இருந்தது. "மாரி...இது நா ஆறுமாசம் முன்ன கும்பமேளாவுக்கு வாரணாசி போனப்ப ஒரு பெரிய அகோரி முனிவர் மந்திரித்து குடுத்தது." ரொம்ப சக்தியான கல்லுப்பா". - ஜோசியர் சொன்னார்.

மாரி கல்லை வியப்போடு பார்த்தார்.

"இப்படி கிழக்க பார்த்து நில்லு மாரி...இந்தா ரெண்டு கைல புடி...இன்னக்கு நெறஞ்ச நாளு...கொண்டு போய் வீட்டுல வை" - ஜோசியர் கல்லை கண்களில் ஒற்றி மாரியின் கையில் கொடுத்தார். மாரி பயபக்தியோடு இரு கைகளில் வாங்கி கொண்டார். "இத தினம் சாமிக்கு பக்கத்துள்ள வெச்சு கும்பிடு. அடுத்த தைக்கு புள்ள பொறக்கும் பாரு" ஜோசியர் மாரியின் கண்ண பார்த்து சொல்லிவிட்டு கண்ணை மூடி எதோ முனகினார். பின் ரெண்டு கையையும் மேலே தூக்கி கடையின் கூரையை பார்த்து கும்பிட்டார். மாரி நாற்காலி ஓரமாக ஒதுங்கி கைகூப்பி நின்று கொண்டார். அதற்கு பின் ஜோசியர் மஞ்சள் பையில் இருந்து ஒரு வெள்ளை சட்டையை எடுத்து பட்டன் போட்டுக் போட்டார். அப்போது அவர் என்னை பார்த்தார். நான் ஒருவித பய நிலையில் அவரை பார்ப்பதை தவிர்த்து விட்டு கடைக்கு வெளியே பார்த்தேன். ஜோசியர் பையை அக்குளில் சொருகி புறப்பட்டார்.

"ஒரு நிமிஷம் சாமி.." மாரி அவசரமாக சிறிய மரப்பெட்டியை திறந்து ஒன்றிரண்டு நோட்டுகளை சுருட்டியது போல மடித்து ஜோசியர் கையில் பயபக்தியோடு கொடுத்தார். "எதுக்கு மாரி இதெல்லாம்?!...ஏதோ உன்ன பார்த்ததும் குடுக்கணும் தோனுச்சு" வாங்கி கொண்டார். "சரிப்பா...நா கெளம்பறேன்" எல்லா நல்லதாவே நடக்கும்" - விடுவிடுவென ஜோசியர் போய் விட்டார். எப்பவும் முடி வெட்டறப்ப மாரி எங்கிட்ட ஏதாவது லொட லொடன்னு பேசிட்டே தான் வெட்டுவார். ஆனா அன்னைக்கு பெரிசா ஒன்னும் பேசலே. வெட்டி முடியற வர கடைக்குள்ள வெறும் கத்திரி சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. எனக்கு ஜோசியர் சொன்னது மாரி மனசுல நல்லா தங்கிருச்சுனு புரிஞ்சுது.

இதுக்கு பிறகு மாரிகிட்டே நிறைய மாற்றம். முருகனுக்கு நேத்துகிட்டு நடையா பழனி போயிட்டு வந்தார். காவடி எடுத்தார். ஜோசியர் கல்லு தந்து ஒரு வருடம் ஆவதற்குள் மாரி சம்சாரம் கமலா கருவாச்சு. மாரிக்கு அப்படி ஒரு சந்தோசம். அப்ப பொறந்தான் மகன் முருகவேலு. ஒரு வாரம் கடைக்கே போகவில்லை. பையனை கையில் தூக்கி வெச்சுகிட்டு கொஞ்சிட்டே இருந்தார். சண்முகம் தான் கடையை பார்த்துக் கொண்டான். மாரியின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது.

மாரி வீட்டுக்கு முன்னாடி ஒரு வேப்பமரம் இருந்துச்சு. ஒரு தீவாளி நோம்பி சமயம் பசங்களோட கருவேலம்காடு போய் காடமுட்டை தேடிட்டு வீடு வந்து கொண்டு இருந்தேன். மாரி வீட்டு மரத்தடில செங்கல் மண்ணு கலவைய வெச்சு என்னமோ செய்து கொண்டு இருந்தார். ஆர்வத்தில் மூர்த்தி தான் கேட்டான் - "என்ன மாரிண்ணா செய்றீங்க?" "இங்க சின்னதா ஒரு கோவில் கட்டுறேன் கண்ணு" கோவிலா?! எல்லோரும் ஆர்வமா பார்த்தோம். "ஆமா...முருகனுக்கு! தினம் பள்ளிக்கூடம் போறப்ப கும்பிட்டு போங்க...சரியா?" - மாரி தீர்க்கமாய் சொன்னார்.

அடுத்த நாள் பள்ளிக்கூடம் போகும் வழியே பார்த்தேன். அவர் சொன்னது போலவே வேப்ப மரத்தடியில் இரண்டடி உயர அகலத்தில் சின்னதாக ஒரு சுவர் எழும்பி இருந்தது. அதன் மேல் கூரைக்கு ஒரு பழைய அஸ்பெச்டோஸ் அட்டை வைத்து மறைத்து அதற்கு மேலே ஒரு செங்கல் இருந்தது. உள்ளே பார்த்தேன். ஜோசியர் கொடுத்த முக்கோண கல்லை நடுவில் வைத்து அதற்கு முன் ஒரு அகல் விளக்கு எரிந்தது. விளக்கு வெளிச்சம் பார்த்ததும் செருப்பு காலோடு இருந்த நான் சற்று தள்ளி நின்று கொண்டேன்.

மாரியின் போக்கு கண்டு முதலில் கலங்கிய கமலா பின் சண்டை போடுவதை படிப்படியாக குறைத்துக் கொண்டாள். முருகவேலு கொஞ்சம் வளர்ந்து விட, பக்கத்து வீட்டு துரைசாமி தோட்டத்தில் தக்காளியை மொத்தமாக வாங்கி உக்கடம் சந்தையில் கொண்டு போய் விற்கக் தொடங்கினாள். அது குடும்பம் நடத்த ஓரளவு உதவியது.

சண்முகம் பாதி நேரம் கடையை பார்த்து கொண்டதால் வருமானத்தில் அவனுக்கு போக மீதியை மட்டும் தான் கொடுத்தான். மாரியப்பன் இது தெரிந்தாலும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தை பொங்கலும், ஆடி அமாவாசை நாட்களும் மாரி வீட்டு மரத்தடி திருவிழா கண்டது. ஒரு பங்குனி உத்திர நேரம் ஊர் அம்மன் கோவில் திருவிழா டிரஸ்ட் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மாரிக்கு அழைப்பு வந்தது. ஊர் பஞ்சாயத்து போர்டு கூடி பேசி மாரியப்பனை அம்மன் கோவில் பூசாரி பணிக்கு ஒத்தாசையாக மாத சம்பளத்தில் வைக்க முடிவு எடுத்தனர். மாரி ஏனோ அதை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். கமலாவுக்கு பஞ்சாயத்து முடிவால் மனசு நிறைந்தது.

இதற்கு பிறகு மாரி கடைக்கு செல்வது முழுவதும் குறைந்தது. மரத்தடியிலேயே கழித்தார். மாரியை பார்க்க வருபவர்கள் தாயத்து, திருநீறு,கயிறு கொண்டு வந்து கல் அருகே வைத்து மாரியப்பனிடம் மந்திரித்து கட்டிக் கொண்டனர். சின்ன பையன் தொடங்கி ஊரில் ஆட்கள் பேசும் போது "பூசாரி மாரியப்பன்" என்ற பெயரில் அவரை அழைத்தது யாருக்கும் ஒரு நெருடலாக தோன்றவில்லை.அது அவருக்கு இட்ட பெயர் போல அவருடனே நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.

பின் எப்போதோ ஒரு நாள் அம்மா சொல்லக் கேட்டேன். சண்முகம் கள்ளச்சாராயம் அதிகம் குடித்து விட்டு சைக்கிளில் போய் பஸ்ஸில் அடிபட்டு இறந்து விட்டான் என்று. அரசு மருத்துவமனையில் இரண்டு தினம் வைத்து இருந்தார்கள். இருந்தும் பிழைக்கவில்லை. மாரியப்பன் அதற்கு பிறகு தன் சவரக்கடையை திறக்கவே இல்லை.

அவர் நினைவில் இருந்து மீண்டு, ஊர் பள்ளம் தாண்டி, மெயின் ரோட்டில் "பாலாஜி சலூன்" வந்து சேர்ந்தேன். அன்று பெரிய கூட்டமில்லை. சூரியன் FM ரேடியோவில் புதிய படத்தின் ஏதோ ஒரு பாடல் பாடிக் கொண்டு இருந்தது. "வாங்க கதிரு...எப்போ வந்தீங்க?" ஓனர் சுந்தரம் கேட்டார். "வந்து ஒரு வாரம் ஆச்சு சுந்தரம். சிரித்தேன். வெள்ளை துணி போர்த்தி பெங்களூர் வாழ்க்கை பற்றி பேசிய படியே முடி வெட்டத் துவங்கினார். அடுத்த நாள் குளித்து நேரமாக கிளம்பினேன். "அப்பா வாழமண்டி நடராசுவை பாக்க போய் இருக்காரு"...நீ கெளம்புப்பா. அம்மா வட்டமான முகத்தோடு சிரித்து.. நல்லா சாப்டு...டெய்லி போன் பண்ணு..சரியா?" கையை பிடித்து கொண்டே கேட் வரை வந்து அனுப்பி வைத்தாள்.

இரண்டு தெரு தாண்டி மாரியப்பன் வீடு கடக்கும் போது கவனித்தேன். மரத்தடியில் கோவில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. யாரோ ஒரு பெண்மணி மரத்தை சுற்றிக் கொண்டு இருந்தார். முன்கதவு சாத்தி இருந்தது. பஸ் நிறுத்தம் வந்தேன். 24B காந்திபுரம் பஸ் ஒன்றிரண்டு பேருடன் காலியாக இருந்தது. ஞாயிற்றுகிழமை ஆனதால் பெரிதாக கூட்டமில்லை. ஏறி ஜன்னலோரமா உக்கார்ந்தேன். இன்று ராஜகோபால் அண்ணன் தான் டிரைவர். சின்ன ஊர் என்பதால் ஒரு வகையில் எல்லோரையும் நன்கு தெரியும். தங்கபாலு டீகடையிலே இருந்து கண்டக்டர் ரத்னம் வந்தார்.

"என்ன கதிரு..நல்லாருக்கியா? பெங்களூர் போனப்புறம் ஆளே பாக்கவே முடியறது இல்ல" சிரிச்சார். நானும் சிரித்தேன். பஸ் ஒருமாறி நிரம்ப ஆரம்பிக்க ராஜகோபால் வண்டிய எடுத்தார். அப்போ தான் பார்த்தேன். வேகமா கைய ஆட்டிட்டு மாரியப்பன், அவர் சம்சாரம், பையனோட வந்தார். "என்ன மாரிப்பா? எதுக்கு இத்தனை அவசரம்? அஞ்சு நிமிஷம் முன்ன வரலாமில்ல? ரத்னம் சிரித்து விட்டு விசிலடிக்க...பஸ் கெளம்பியது.

மாரி சம்சாரமும் பையனும் பெண்கள் இருக்கையில் அமர்ந்து விட, மாரியப்பன் எனக்கு ரெண்டு சீட் முன்பு இருந்த காலி சீட்டில் அமர்ந்தார். என்னை கவனிக்கவில்லை. காலைலே இருந்து மாரியப்பனை நெனச்சுட்டு இப்ப நேரில் பாக்க ஒரு சின்ன வியப்பு. நான் ரொம்ப நாட்களுக்கு பிறகு அவரை பார்க்கிறேன். இறங்கும் போது நான் பின் வழி இறங்க, மாரியப்பன் குடும்பத்தோடு எதிர் திசையில் வந்தார். என்னை பார்த்ததும் மகிழ்ச்சியில் சிரித்தார். நெற்றியில் திருநீறும் கும்குமமும் நிறைந்து இருந்தது. தலை மயிர் நிறைய நரைத்து நீண்ட முடி கழுத்தில் புரண்டது. சிரித்து கொண்டே அருகில் வந்தவர், எதோ நினைவில் என் தலை முடியை பார்த்தவாறே பேசினார்.

"நல்லா இருக்கியா கதிரு? அப்பாகிட்டே அடிக்கடி கேப்பேன்...பெங்களூரூ புடிச்சுதா உனக்கு?" அவர் சிரிக்க... "சௌக்கியம் மாரி." எங்க குடும்பமா கெளம்பிடீங்க? "என் கூட பெங்களூர் வாரீங்களா?" நான் சிரித்தேன். ஓரமாக நின்ற மாரியின் சம்சாரம் கையில் "எஸ் சித்தநாதன் பரிமள விலாஸ். பழனி." மஞ்சபை கழுத்து வரை நிரம்பி இருந்தது. பையன் முருகவேல் வளர்ந்து இருந்தான். பதிமூன்று வயது இருக்கும். அவன் சோர்வாக கமலாவின் புடவை தலைப்பை பிடித்தபடி நின்றிருந்தான்.

மாரி வாட்டமான முகத்தோடு இருமிய படி சொன்னார்... "எங்க கதிரு..பையனுக்கு பத்து நாளா ஒரே காய்ச்சல். விடவே மாட்டேங்குது. டவுன் டாக்டர்கிட்டே போய் காட்டிட்டு வந்தோம். டைபாய்டு ஜீரம் மெதுவாதான் சரி ஆகுன்னு சொன்னாரு. கன்னியாகுமரி "உவரி மாதா" கோவிலுக்கு குடும்பத்தோட வரேன்னு வேண்டி இருந்தோம். போன வாரம் குழந்தைக்கு மந்திரிக்க வந்த ஒருத்தர் தான் சொன்னாரு. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மான்னு"...அதான் ஒரு நடை போயிட்டு வரலாம்னு".

அவர் கண்ணில் ஒரு நம்பிக்கையை பார்த்தேன். காவி வேட்டியை இறக்கிவிட்டு, சட்டையை சரி செய்து கொண்டார். சட்டை பாக்கெட்டில் பீடி கட்டு தெரிந்தது.

சரி கதிரு...பத்திரா போயிட்டுவா. நேரமாச்சு..நாங்களும் கெளம்பறோம்." மெலிதாக சிரித்துவிட்டு, கன்னியாகுமரி பஸ்பிடிக்க திருவள்ளுவர் பஸ்ஸ்டான்ட் நோக்கி குடும்பத்தோடு வேகமா போய்விட்டார்.

- மாணிக்கம் விஜயபானு

டெக்சாஸ். ஆஸ்டின்

 
 
 
English summary
Tamil Sirukathai: Mariappan barber shop written by Manikkam Vijayabanu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X