• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறள் இளவரசி சீதா... அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவியின் 1330 திருக்குறள் சாதனை!

By Shankar
|

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற திருக்குறள் போட்டியில், பங்கேற்ற 12ம் வகுப்பு படிக்கும் சீதா ராமசாமி புதிய சாதனை படைத்துள்ளார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற சீதா 1330 குறள்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் சொல்லி முடித்தார்.

'குறள் இளவரசி' சீதா

ஃப்ரிஸ்கோ, டிம்பர்ரிட்ஜ் மாண்டசரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 219 குழந்தைகளும் 41 பெரியவர்களும் பங்கேற்றனர். சுமார் 9000 ஆயிரம் தடவைகளுக்கும் மேலாக திருக்குறள்கள் ஒப்புவிக்கப்பட்டது காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டி, மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து முதல் மாலை 5:30 மணி வரை நீடித்தது.

போட்டியின் நிறைவாக, 1330 குறள்கள் ஒப்புவித்த சீதாவைப் பாராட்டி' குறள் இளவரசி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சீதாவை வாழ்த்திப் பேசினார்கள்.

Thirukkural Contest in Dallas

பாராட்டிப் பேசிய தமிழ்மணி, சீதாவுக்கு தமிழ் கற்றுத் தந்த ஆசிரியர்களுள் ஒருவரான தனக்கு, நடுவராக அவருடைய சாதனை நிகழ்விலும் கிடைத்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.

இரண்டரை வயதுக் குழந்தை முதலாகவே பார்த்து வருகிறேன்., ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் கவனித்து வந்துள்ளேன். அவருடைய விடா முயற்சியால் இந்த சாதனை சாத்தியமானது என்று தீபா குறிப்பிட்டார்.

ராஜ் பேசும் போது, இங்குள்ள பெரும்பான்மை ஆசிரியர்களிடம் தமிழ்ப் படித்து இந்த சாதனையை புரிந்துள்ளார் சீதா. இது தமிழ் கற்றுத் தரும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஊக்கம் தரக்கூடியது என்று பெருமிதம் அடைந்தார்.

அமெரிக்காவில் தமிழ் மொழியின் வளர்ச்சி..

சீதாவின் தீவிரமான பயிற்சியும் உழைப்பும் அளப்பரியது. முந்தைய ஆண்டுகளின் போட்டிகளிலும் நடுவராக, அவரை பார்த்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கையைக் கூட்டியதோடு, அனைத்து குறள்களையும் பொருள் புரிந்தே படித்து வந்துள்ளார் என்று பழநிசாமி புகழாரம் சூட்டினார்.

Thirukkural Contest in Dallas

ஜெய்சங்கர் வாழ்த்திப் பேசும் போது, 12 வகுப்பு மாணவிக்கு படிப்புச் சுமையும், அடுத்து கல்லூரிக்குச் செல்லத் தயாராக வேண்டிய பணிகளும் நிறைய இருக்கிறது. அதையும் பார்த்துக் கொண்டு திருக்குறளையும் படித்து முடித்துள்ளது வெகுவாக பாராட்டப் படவேண்டிய ஒன்றாகும் என்றார்.

சீதாவின் தமிழ்ப் பள்ளி ஆசிரியையாக,அவரது சாதனையைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அமெரிக்காவில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, அவருடைய பங்கும் நிச்சயம் இருக்கும் என்று சித்ரா மகேஷ் வாழ்த்தினார்.

வேலு ராமன் பேசுகையில், பத்தாவது ஆண்டாக நடைபெறும் திருக்குறள் போட்டிக்கு மகுடமாக சீதாவின் சாதனை அமைந்துள்ளது என்றார்.

அமெரிக்காவில் பிறந்த சீதா, ப்ளேனோ தமிழ்ப்பள்ளியில் தமிழ் படித்து, தற்போது 1330 குறள்களையும் சொல்லி அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். மற்ற குழந்தைகளுக்கும் சீதா ஊக்கசக்தியாக இருப்பார் என்று விசாலாட்சி கூறினார்

Thirukkural Contest in Dallas

படிப்படியாக எட்டிய உயரம்...

இந்த முயற்சிக்கு தனக்கு தமிழ் கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களும், ஒவ்வொரு போட்டியிலும் நடுவர்களாக இருந்தவர்கள் தந்த ஊக்கமும் தான் முக்கிய காரணமாகும்.. ஒவ்வொருவரும் எந்த வகையில் ஊக்கப்படுத்தினார்கள், தனது பெற்றோர் மற்றும் தங்கை எப்படி உறுதுணையாக இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர்ந்தார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை ஏற்படுத்தித் தந்துள்ள இந்த வாய்ப்பு தான் தனக்கு திருக்குறள் மேல் ஆர்வம் ஏற்படக் காரணம் என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தaர்.

சீதாவின் இந்த சாதனை படிப்படியாக, தொடர் முயற்சியால் நிகழ்ந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு போட்டியில் முதன்முறையாக 155 திருக்குறள்கள் சொன்னார். அதற்குரிய அர்த்தத்தை அவரது சொந்த நடையிலேயே கூறி ஆச்சரியப்படுத்தினார். 2013ல் 320, 2014ல் 505 என்று தொடர்ந்தவர் 2015ம் ஆண்டு கொன்றை வேந்தன் மூதுரை என பயணித்தார். மீண்டும் 2016ல் 778 குறள்கள் கூறிய அவர் இந்த ஆண்டு 1330 குறள்களையும் சொல்லி அசத்தியுள்ளார்.

Thirukkural Contest in Dallas

இந்த ஆண்டு பள்ளியில் மிகவும் அதிகமான சுமை இருப்பதால், கல்லூரி சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தான் கூறினோம். சீதாவோ, பள்ளி மாணவியாகவே சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பப் பட்டார். அனைவருடைய நல்லாசியுடன் நிறைவேற்றி விட்டார் என்று தாயார் சாந்தி தெரிவித்தார்.

முதன் முதலாக படித்து ஒப்பித்தத வருடத்திலிருந்தே, விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றை திருக்குறள்களை மேற்காட்டி எங்களையும் ஊக்கப்படுத்துவார். விருந்தினர்கள் வீட்டிற்கு வரும்போது, நம் ஊர் வழக்கப்படி உபசரித்து அவர்களுடன் உரையாடும் வழக்கத்தையும் திருக்குறள் கற்ற பிறகு தானகவே பின்பற்ற ஆரம்பித்தார் என்றும் சாந்தி நம்மிடம் கூறினார்.

73 வயது பாட்டி சொன்ன 20 திருக்குறள்கள்

குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட , சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் திருக்குறள் போட்டி பெரியவர்களுக்கும் விரிவாக்கப்பட்டு, பெரிய விழிப்புணர்வை உருவாக்கி விட்டது.

இந்த ஆண்டு குழந்தைகளுடன், பெற்றோர்களும் சேர்ந்து குடும்பம் குடும்பமாக திருக்குறள் சொன்னதை காண முடிந்தது. 73 வயது பாட்டி ஒருவரும் பங்கேற்று 20 திருக்குறள்களைச் சொன்னார். பெரியவர்கள் மத்தியிலும் திருக்குறள் பயில வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

பெரியவர்கள் பிரிவு ஆரம்பித்த பிறகு, கீதா அருணாச்சலம் அமெரிக்காவிலேயே முதன் முதலாக 1300 குறள்கள் கூறி சாதனை புரிந்தார்., அடுத்ததாக முனைவர் சித்ரா மகேஷ் 1330 குறள்களும் கூறி அமெரிக்காவின் இரண்டாவது சாதனையாளரானார்.

சாஸ்தா தமிழ் அறக்கட்டளைப் போட்டியில் மூன்றாவதாக, பள்ளி மாணவி சீதாவின் 1330 குறள்கள் சாதனை, அடுத்தது யார் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை நடத்த ஏராளமான தன்னார்வலர்களுடன், 51 பேர் நடுவர்களாகவும் பணியாற்றினர். திருக்குறள் மையமாக டல்லாஸ் உருவெடுத்து வருகிறது என்றால் மிகையல்ல.

கருத்தரங்கமும் ஆராதனை விழாவும்..

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுத் தொகையும். வெற்றியாளர்களுக்கு கேடயமும் தமிழ் ஆராதனை விழாவில் வழங்கப்படுகிறது.குழந்தைகள் பிரிவில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு குறளுக்கு ஒரு டாலர்' பரிசுத் தொகை உண்டு.

பெரியவர்கள் பிரிவில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுக் கேடயம் வழங்கப்படும். பிப்ரவரி 11ம் தேதி மாலை 4:30 மணி அளவில் ஃப்ரிஸ்கோ சென்டினியல் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆராதனை விழா நடைபெற உள்ளது.

அன்று காலை 9 மணி அளவில் பேச்சுப் போட்டியும், திருக்குறள் சார்ந்த கருத்தரங்கமும் டிம்பர்ரிட்ஜ் மாண்டிசரிப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.

கருத்தரங்ககத்தில், விழுதுகள் ஆசிரியர் நா.உதயபாஸ்கர், திருக்குறள் திறனாய்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் கரு.மலர்ச்செல்வன் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர்.க.சுபாஷினி பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சியில் கேள்வி பதில் பகுதியும் கலந்துரையாடலும் இடம்பெறுகிறது.

-இர தினகர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
High School Senior Seetha recited all 1330 Thirukurals in Sastha Tamil Foundation's 10 th annual competition held at Dallas TX. 219 children and 41 adults participated and recited over 9000 times, from 9 am till 5.30 pm. At the end of the event, Seetha was conferred the title ‘Kural Ilavarasi' and was poured with appreciations of her efforts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more