For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று மஹா சிவராத்திரி.. சிவனருள் பெறுவோம்.... வாழ்வில் உய்வோம்!

Google Oneindia Tamil News

-கே.ஆர்.சுப்ரமணியம்

இன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தின நாள் சிவராத்திரி என சிவன் கோயில்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும் மாசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் மஹா சிவராத்திரி என வருடம் தோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாவம் செய்யாத மனிதர் என்று உலகில் யாரும் இல்லை. அறிந்தோ, அறியாமலோ அனுதினமும் பாவக்கணக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறோம். எறும்பு, ஈ, கொசு தூசு துரும்பு என எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். அவற்றிற்கு நாம் அறியாமலேயே துன்பம் கொடுக்கும்போது, நம் பாவக்கணக்கும் சேர்ந்துவிடுகிறது. அவற்றைக் களைய இறைவன் நமக்கு பல வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார்.

Today is Sivarathiri

புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை, புனித நீராடல், மகாமகம் நீராடல், கங்கோத்திரி, யமுனோத்ரி போன்ற தீர்த்த யாத்திரைகள் எல்லாம் அதற்கு உதவுவனதான். அதற்காக உயிரினங்களை துன்புறுத்திவிட்டு புனித நீராடலில் ஈடுபட்டால் பாவம் கழிந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற புரிதலே அவசியம். இனியாவது பாவங்கள் செய்யக் கூடாது என்று சங்கல்பம் எடுப்பதும் முக்கியம். அப்படி, பாவக்கணக்குகளை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளும் அற்புதமான நாள்தான் சிவராத்திரி.

சிவராத்திரியின் சிறப்புகள் :

சிவராத்திரிக்கும் மற்ற விழாக்க ளுக்கும் வித்தியாசங்கள் உண்டு. இறைவனின் அவதாரங்களை மையப்படுத்தி கிருஷ்ண ஜயந்தி, ராமநவமி, அனுமன் ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, சங்கரர் ஜயந்தி என விழாக்கள் உள்ளன. ஆனால், சிவபெருமான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற் பட்டவர் என்பதால், அவருக்கு ஜயந்தி என்பது கிடையாது.

மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசிதான் (24-ம் நாள்) சிவராத்திரி. அனைத்துக்கும் ஆதாரமான சிவன், உயிர்களைப் படைத்ததும், ஒடுக்கியதும் (தனக்குள் ஐக்கியப் படுத்தியது) இந்த நாளில்தான். ‘லயக்ரம ஸ்ருஷ்டி தினம்' என்கின்றன சாஸ்திரங்கள். ‘லயம்' என்றால் ‘ஒடுக்குதல்', ‘ஸ்ருஷ்டி' என்றால் ‘படைத்தல்'. அதாவது, படைத்தலுக்கும், அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழா இது. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான். அந்த நாளின், மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.

அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு
எல்லை யில்லதோர் அடிமை பூண் டேனுக்கே.
- அப்பர் சுவாமிகள்

பஞ்சமா பாவங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து விதமான பாவங்கள் கூட அச்சமயத்தில் மன்னிக்கப்படுமாம். அதாவது கொலை, கொள்ளை, பலாத்காரம், பொய் பேசுதல், ஏமாற்றுதல் ஆகிய பாவங்கள் மன்னிக்கப்படுமாம். எனவேதான், அந்நாளில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழ நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர். அது, நிறைந்த புண்ணியத்தையும் நமக்குத் தரும். மூன்றாம் காலம் (நள்ளிரவு) என்பது தீட்டுக்களைக் கூட விலக்கி வைக்கும் நேரம். எனவேதான், சிவபூஜையில் பயன்படுத்தாத ‘தாழம்பூ' அந்த ஒரு தருணத்தில் மட்டும் பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பூலோக உயிர்கள் மட்டுமின்றி தேவர்கள், கிங்கரர்கள், பூதகணங்கள் சுவாமியை ஆராதிக்கும் தினமும் அதுதான் என்பது ஐதீகம்.

மேலும் இந்த தினம் குற்றங்களைப் போக்கும் தினம் என்பதால், சிவனைச் சரணடைந்து, அடுத்த பிறப்பு என ஒன்று வேண்டாம். இந்தப் பிறப்போடு மோட்சகதி பெற வேண்டும் என்கிற வேண்டுதலை முன்வைத்து வணங்க வேண்டும்

சிவராத்திரியின் வரலாறு :

சிவராத்திரி கொண்டாட்டத்தின் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது யதார்த்தமாக ஒரு வில்வ இலை கீழேயிருந்த சிவன் மீது விழ, அதுவே அவருக்கு அர்ச்சனையானது. அதனால், அகமகிழ்ந்த சிவனார், அவரை அடுத்த பிறப்பில் சக்கரவர்த்தியாக அவதரிக்கச் செய்தார். அவரே, முசுகுந்தச் சக்கர வர்த்தி. மன்னரான பின்னும், சிவ பக்தனாக இருந்து, இந்திரன் பூஜித்த விடங்க லிங்கத்தைப் பெற்று சிவனின் அருள் பெற்றார். குரங்கு வடிவில் இருந்த மன்னன் வரலாறு, கயிலாயத்தில் நடந்ததாகவும், காட்டில் வேடன் ஒருவனிடமிருந்து தப்பி காட்டில் இருந்தபோது இவ்வாறு செய்ததாகவும் இரு வேறு புராணங்கள் சொல்லப்படுகின்றன.

திருவண்ணாமலையின் தல வரலாறு நூலில் அடிமுடி காண முடியாதபடி உயர்ந்த சிவன், ‘லிங்கோத்பவர்' வடிவம் எடுத்து பக்தர்களை உணர வைத்த நாள் சிவராத்திரி என காணப்படுகிறது. சிவராத்திரியை ‘லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வர். ‘மகாநிசி காலம்' (நள்ளிரவுக்கு முன்னும், பின்னுமான ஐந்து நிமிடங்கள். அதாவது, நள்ளிரவு 11.55 - 12.05 வரை) என்று சாஸ்திரங்கள் சொல்லும் நள்ளிரவு நேரத்தில், சிவனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும். சிவராத்திரி, நான்கு காலங்களிலும் நான்கு விதமான அபிஷேகங்கள் சிவனாருக்குச் செய்யப்படும். முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம்; இரண்டாம் காலத்தில் பால், பஞ்சாமிர்தம்; மூன்றாம் காலத்தில் பழச்சாறுகள், நான்காம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது விசேஷம்.

சிவராத்திரி அன்று எல்லா சிவாலயங்களிலும் உள்ள சிவபெருமானை வழிபடுவது புண்ணியத்தைத் தரும். ஆனாலும், சிவராத்திரியின் மகிமையால் உண்டான சப்தவிடங்கத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், பஞ்ச சபைகள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவஸ்தலங்களை சிவராத்திரி அன்று ஒரே நாளில் தரிசிப்பது சிவாலய ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.

முடிந்தவரையில் வில்வ இலைகளால் சிவனாரை அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை அவருக்கு உகந்தது என்பதால், அதனையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால் ‘சுபிட்சம்' உண்டாகும். அந்நாளில் முழு இரவும் கண் விழித்திருந்து, சிவனாரை மனதில் தியானிக்க வேண்டும். தேவாரம், திருவாசகப் பதிகங்களை பாராயணம் செய்து அவரை வழிபட வேண்டும். மறுநாள் காலையிலும் கண் விழித்திருந்து, மாலை ஏழு மணிக்கு மேல் உறங்கச் செல்லலாம். முடியாதவர்கள், மதிய உணவுக்குப் பிறகு உறங்கிக் கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது

சிவனருளைப் பெற ஆண்டிற்கு ஒருநாள் வரும் மஹாசிவராத்திரியன்று சிவபெருமானை மனதில் நினைத்துத் தொழுவோம். தீராத பாவங்களும் பிணிகளும் தீர்ந்து, அவரின் பரிபூரண அருள் பெற்று வாழ்வில் உய்வோம்.

English summary
Today is Sivarathiri and Hindus are observing this day with praying Lord Shiva
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X