For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்ல சிட்டுக் குருவிகளே!

Google Oneindia Tamil News

- சுஜாதா ஜெயராமன்

சிட்டுக்குருவிகளே எங்கள் செல்ல குருவிகளே
குட்டி குட்டியாய் கூடுகள் கட்டி
வீட்டிற்குள்ளே வாடகை இல்லாமல் வசித்தீர்களே
மொட்டை மாடியில் காய வாய்த்த
தட்டைப்பயறு தவிட்டரிசி உண்டு
சீட்டி அடித்து திரிந்தீர்களே
சூரியன் உதித்து கண் விழித்த நாட்களை விட
உங்கள் கீச்சு சத்தம் எங்களை
எழுப்பிய நாட்கள் என்றும் அதிகமே
விட்டத்தில் பரணில் ஓட்டு இடுக்கில்
வாசக்காலில் வேப்ப மரத்து கிளையில்
என்று கண் படும் இடத்தில் ஆனால்
கை படாத தூரத்தில்
உங்கள் சின்ன சின்ன மூக்கினில்
சிறிது சிறிதாக சருகுகள் சேர்த்து
சத்தமில்லாமல் கூடுகள் கட்டி
சோடிப்பறவைகளாய் குடி புகுந்த
உங்களை வேடிக்கை பார்த்து
வளர்ந்த கூட்டம் நாங்கள்
பகலில் நீங்கள் இரை தேடி போன இடைவெளியில்
ஏணி மேல் வேகமாய் ஏறி
உங்கள் வீட்டை நோட்டம் விட்டு
உள்ளே மூன்று முட்டைகள் உள்ளன
என்று எங்கள் நட்பு வட்டாரத்தையே கூட்டி
தொட்டிடாமல் எட்டி எட்டி பார்த்தே
சுட்டியாய் வளர்ந்த கூட்டம் நாங்கள்
வெள்ளை அடிக்கும் காலத்தில் கூட
உங்கள் வீடு என்ற சிறு கூடு
சிறிதும் கலைந்திடாமல்
சுற்றி சுற்றி வண்ணம் அடித்து
உங்களை எங்கள் உயிராய் நினைத்து
போற்றிய கூட்டம் நாங்கள்
புடைத்த முறத்திலே இருந்து
வயிறார உண்பதற்கென்றே
சிறிது தானியங்களை
தரையிலே இறைத்து
சின்ன அலகால் நீங்கள்
கொத்தி தின்னும் அழகை கண்டு
சிரித்து மகிழ்ந்த கூட்டம் நாங்கள்
அழையா விருந்தாளியாய் வந்து
எங்கள் குடும்பத்தில் ஒன்றி
எங்களை இன்பத்தில் ஆழ்த்தி
எங்களுடனே வளர்ந்த நீங்கள்
இன்று எங்களை விட்டு விட்டு
எங்கே சென்று விட்டீர்கள்
பசுமை குறைந்தது
பரண் வீடு காணாமல் போனது
முற்றத்து வீடுகள் எல்லாம்
அடுக்கு வீடுகளாய் ஆனது
வீட்டை சுற்றி ஒரு
பசுமரமும் இல்லை
பற்றாக்குறைக்கு
செல் பேசிகளின் கோபுரம்
உங்களை எங்கள் அண்டை விட்டே
முற்றிலும் விரட்டி விட்டதா
சின்ன செல்லங்களே
உங்கள் கதைகளை
எங்கள் வாய்மொழியில் கேட்டு
வளர்ந்தன எங்கள் பிள்ளைகள்
உங்களை பாட புத்தகங்களின்
படங்களில் மட்டும் பார்க்கின்றன
எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள்
என்னே எங்கள் வாழ்க்கையின்
சுயநல சரித்திரம்
உங்கள் இனத்தையே அடியோடு
வெகு தூரம் விரட்டி விட்டு
இயற்கையை காக்கிறோம்
என்று கொடி பிடித்து கொண்டிருக்கிறோம்
எங்களை மன்னித்து விடுங்கள்
என்று உங்களிடம் வேண்டுவதற்கு
கூட எங்களுக்கு அருகதையில்லை
ஆனால்
ஒன்று மட்டும் நிச்சயம்
இன்றும் உங்கள் கீச்சு சத்தத்தை கேட்க
காதுகளை தீட்டி வைத்து
உங்களை மீண்டும் எங்களுடன் வாழ வைக்க
இயற்கையை கண்ணீருடன்
வேண்டி கொள்ளும் கூட்டம் நாங்கள்

English summary
The world is celebrating the "World Sparrow day" today. Our reader Sujatha Jayaraman has written a poem on this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X