For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சேர சோழ பாண்டிய பல்லவர்கள்' நாடகம் - அமெரிக்கத் தமிழர்கள் அமோக வரவேற்பு

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): ப்ளேனோ தமிழ்ப்பள்ளி 13ம் ஆண்டு விழாவுக்காக, மாணவர்கள் நடத்திய சேர சோழ பாண்டிய பல்லவர்கள் நாடகம் அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தன்னார்வத்துடன் பணியாற்றும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு உதவியாளார்கள் என 40 பேர் கொண்ட குழு நான்கு நாடகங்களையும் வடிவமைத்து, இயக்கி இருந்தார்கள்.

மழலை முதல் 7 ம் வகுப்பு வரை

மழலை முதல் 7 ம் வகுப்பு வரை

மழலை வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் 220 மாணவர்களும் இடம்பெறும் வகையில் காட்சிகளும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்டு விழா நிகழ்ச்சியில் அனைத்து மானவர்களுக்கும் மேடையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 13 ஆண்டுகளாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

குழந்தைகளே நடித்திருந்தாலும் முழு நீள பொழுது போக்கு அம்சங்களுடன் , திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் நடனங்களுடன் மூன்று மணி நேரமும் விறுவிறுப்பாக சென்றது. குழந்தைகளின் சொந்த குரலில் தெளிவான வசன உச்சரிப்பைக் கேட்ட போது, இது அமெரிக்காதானா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. புற நானூற்று பாடலைக் கூட பாடி கைத்தட்டல்களை அள்ளிச்சென்றனர்.

வந்தியத் தேவன் வந்த சோறுடைத்த சோழ நாடு

வந்தியத் தேவன் வந்த சோறுடைத்த சோழ நாடு

தாத்தா பாட்டியை பார்க்க தஞ்சாவூர் வரும் அமெரிக்கப் பேரக் குழந்தைகளுக்கு பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத் தேவன் அறிமுகக் காட்சிகளை நாடகமாக்கியிருந்தார்கள். பின்ணணியில் பழங்காலத்தையொட்டிய புகைப்படங்களை திரையிட்டு, காட்சிக்கு மெருகேற்றி இருந்தார்கள்.

பொன்னியின் செல்வர் அரசவை, வயல்வெளிகள், வீட்டின் முன் கோலமிடும் பெண்கள், நெல்லை திண்ணும் கோழியை விரட்டாமல் விளையாடும் சிறுமிகள், பொம்மை முதலைக் காட்டி தோழிகளுடன் வந்தியத்தேவனை பரிகாசம் செய்யும் குந்தவை பிராட்டியார் என காட்சிகளுடன் குடவோலை முறை, ஒரே கல் நந்தி, பெரியகோயில் உள்ளிட்ட முக்கிய தகவல்களுடனும் சோழர் நாடகம் அமைந்திருந்தது.

மெகஸ்தனிஸ் மற்றும் மார்கோ போலோ வந்த பாண்டியர்கள் காலம்

மெகஸ்தனிஸ் மற்றும் மார்கோ போலோ வந்த பாண்டியர்கள் காலம்

பாண்டியர்கள் காலத்தில் கிரேக்க நாட்டின் மெகஸ்தனிஸ் வருகை, வழுவா மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன் அவையில் நீதி கேட்டு வந்த கண்ணகி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர்கள், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன், மார்கோ போலோ வருகை உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றன. கூடவே மீனாட்சி அம்மன் ஆலய சிறப்பு, கொற்கை துறைமுகம் உட்பட பல சிறப்புத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

இரும்பொறையும் சேரன் செங்குட்டுவனும்

இரும்பொறையும் சேரன் செங்குட்டுவனும்

மானமே பெரிதென்று உயிர் நீத்த கணைக்கால் இரும்பொறை, பெரும் புலவர் மோசி கீரனார்க்கு விசிறி வீசிய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, கண்ணகிக்கு சிலை வடிக்க இமயம் சென்று கல் எடுத்து வந்த சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட காட்சிகள் சேர ஆட்சி காலத்தை எடுத்துரைத்தன.

கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஐரோப்பாவுடன் மிளகு ஏலம் கிராம்பு வணிகம் உள்ளிட்ட செய்திகளையும் ஆதாரங்களுடன் புகைப்படமாக காட்டினார்கள். சேர நாட்டு பெண்கள் இல்லாமல் எப்படி? சேர நாட்டிற்கேற்ற் உடையலங்காரத்துடன் நடனமும் இடம்பெற்றிருந்தது

சீனாவின் ஹியுன் செங் வந்த பல்லவர்கள் ஆட்சி

சீனாவின் ஹியுன் செங் வந்த பல்லவர்கள் ஆட்சி

மாமல்லபுர கைடுகளுக்கே வரலாற்றை சொல்லித்தரும் டூரிஸ்ட் குழந்தைகள் விவரிக்க பல்லவர் ஆட்சி காலம் அரங்கேறியது. சீனாவிலிருந்துஹியுன் செங் வருகிறார். வாதாபி யுத்தம், காஞ்சியின் மாட்சி, ,மாமல்லபுர சிற்பங்கள் என பல்லவர்கள் ஆட்சியின் சிறப்புகள் இடம்பெற்றன.

சிலம்பாட்டத்துடன் நடனங்கள்

சிலம்பாட்டத்துடன் நடனங்கள்

ஒவ்வொரு ஆட்சியின் சிறப்புகளை போற்றும் விதமாக நடனக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடன ஆசிரியைகள் சூரியா ரவி, ஹேமா ஞானவேல், அன்னபூரணி வைரவன், கல்பனா ரவிசங்கர் ஆகியோர் நடனங்களை அமைத்திருந்தனர். சிறப்பு அம்சமாக சிலம்பாட்டமும் இருந்தது. குழந்தைகளின் உடையலங்காரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் பெற்றோர்களின் பங்களிப்பும் தமிழுக்கு சிறப்பு செய்வதாக உள்ளது.

கலாச்சாரம், பண்பாடு, வரலாறு முக்கியமல்லவா?

கலாச்சாரம், பண்பாடு, வரலாறு முக்கியமல்லவா?

தமிழில் எழுதப் பேச படிக்க தெரிந்தால் மட்டும் போதாது, நமது தமிழர் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் குழந்தைகள் அறிந்து கொண்டால் தான் அவர்களுக்கு தாய்மொழி மீது ஆர்வம் அதிகரிக்கும், அந்நிய மண்ணில் தமிழ் மொழியை பேணிக்காப்பார்கள் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நாடகங்கள், மேடைப் பேச்சு உள்ளிட்டவற்றையும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் கற்றுத் தருகிறார்கள்.

ஆசிரியர்களின் ஈடுபாடு

ஆசிரியர்களின் ஈடுபாடு

ஆசிரியர்களும், மொழி பால் கொண்ட் ஈடுபாட்டினால் தங்கள் வார இறுதி நாட்களில் தமிழ்ப் பள்ளியில் தன்னார்வத்துடன் எந்த சன்மானமும் இன்றி பணியாற்றுகிறார்கள். நாடகங்களுக்காக மிகுந்த சிரத்தையுடன் ஆராய்ச்சி செய்து அரிய தகவல்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். நாடகப் பயிற்சியின் போது இந்த மாணவர்கள் செய்திகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். பண்டைய தமிழர்களின் சிறப்பை அறிந்து வியப்படைகிறார்கள்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

நன்றியுரை வழங்கிய சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் -இயக்குனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு கூறுகையில் மாணவர்களும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்படுவதால் தான் இத்தகைய சாதனைகள் சாத்தியமாகிறது. இது அனைவருடைய கூட்டு முயற்சியின் வெற்றி என்றுரைத்தார்கள்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

நிகழ்ச்சியில் ஆசிரியை ஹேமா ஞானவேல் வரவேற்புரை ஆற்றினார். விசாலாட்சி வேலு தொகுத்து வழங்கினார். நாற்பது பேர் கொண்ட ஆசிரியர் குழு மற்றும் 15க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

பெற்றோர்கள் தவிர மற்றவர்களும் பார்வையாளராக கலந்து கொண்ட இந்த விழாவிற்கு 800க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

English summary
US Tamils have performed Chera-Chozha-Pandia-Pallava dynasty drama in Plano Tamil school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X