For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது" - பார்வதி அம்மாள் பேட்டி

By BBC News தமிழ்
|
பார்வதி
BBC
பார்வதி

நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படம் பல கோணங்களிலும் ஆக்கபூர்வமான விவாதங்களையும் அதே சமயம் குறிப்பிட்ட சாதி சார்ந்த நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.

படத்தின் கதைநாயகியான நிஜ பார்வதியின் தற்போதைய பொருளாதர நிலையை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பார்வதி அம்மாளுக்கும் அவருக்கு பிறகு அவரது குடும்பத்திற்கும் 10 லட்ச ரூபாய் தொகையை வங்கியில் டெபாசிட் செய்வதாக நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து நேற்று அதை நேரிலும் வழங்கினார்.

'ஜெய்பீம்' படத்திற்கு பிறகு பார்வதியின் நிலை, சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்ன? என்பது குறித்து பிபிசி தமிழுடனான பேட்டியில் பார்வதி கலந்துரையாடினார். அதில் இருந்து,

'ஜெய்பீம்' படம் மூலமாக பார்வதியை பலருக்கும் தெரிய வந்திருக்கிறது. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

என் மகள், மருமகன், பேரப்பிள்ளைகளோடு வசித்து வருகிறேன். அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள். மற்றபடி வயது, உடல்நிலை காரணமாக என்னால் இப்போது எதுவும் செய்ய முடிவதில்லை.

நேற்று நடிகர் சூர்யா உங்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து காசோலை வழங்கினார் இல்லையா? என்ன பேசினீர்கள்?

மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடிகர் சூர்யாவை சந்தித்தபோது பெரிதாக எதுவும் பேசவில்லை. காசோலையை என் கையில் கொடுத்து, வங்கியில் போட்டு கொள்ளுங்கள். 'உங்கள் காலம் வரை இதில் வரும் பணத்தை உபயோகித்து கொள்ளுங்கள், பிறகு என் மகள், பேரப்பிள்ளைகள் வைத்து பிழைத்து கொள்ளட்டும்' என சொன்னார்கள். இப்படி பல பேருடைய உதவி வந்து கொண்டிருக்கிறது.

'ஜெய்பீம்' படம் பாத்தீங்களா?

பேரப்பிள்ளைகள் தொலைபேசியில் போட்டு வந்து காண்பிப்பார்கள். ஆனால், என்னால் முழுதாக பார்க்க முடியவில்லை. மனம் வெறுத்து விட்டது. உயிரே போய் விட்டதே, இனிமேல் படம் பார்த்து என்ன செய்ய போகிறேன்?.

உண்மையிலே அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது?

ஒத்த கோபாலபுரம் ஊரில் நெல் அறுக்கும் வேலைக்காக சென்றிருந்தேன். அங்கே நான்கு மாடி கொண்ட பக்கத்து வீட்டு பெண் ஒருத்தி இருந்தார். அவர் அந்த ஊரில் இருந்த ஒருவரை காதலித்தார். அப்படி இருக்கும்போது, ஒருநாள், அந்த பெண் 40 பவுன் நகையும், ஐம்பதாயிரம் பணத்தையும் எடுத்து கொண்டு அவர் அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

அன்றிரவு பத்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு காவல் வேன் வந்தது. எஸ்.ஐ. எங்களிடம் வந்து, 'ஐயா, பேச வேண்டும் என சொல்கிறார். ஸ்டேஷனுக்கு வாங்க!' என்று அழைத்தார். என் வீட்டுக்காரருக்கு போலீஸ் என்றாலே பயம். சண்டை, வம்புக்கெல்லாம் போகாத ஆள் அவர். அந்த நேரத்தில் அவர் போலீஸ் வந்தது தெரியாமல் வெளியே கோவில் பக்கம் சென்று விட்டார். இவர் எங்கே என போலீஸ் விசாரிக்க, நான் தெரியாது என சொன்னேன். உடனே அவர்கள் என் பெரிய மகன், கணவரின் இரு தம்பிகளுடன் என்னையும் கூட்டிக்கொண்டு கோபாலபுரம் சென்றார்கள். அங்கு எங்கள் மீது பெரிய நாய்களை வைத்து மோப்பம் பிடிக்க விட்டார்கள்.

பார்வதியின் வீடு
BBC
பார்வதியின் வீடு

நாங்கள் திருடி இருந்தால்தானே நாய் எங்களை காட்டி கொடுக்கும்? அது சாதுவாக நின்று கொண்டு திருடு போன வீட்டை மோப்பம் பிடித்து கொண்டு சென்றதே தவிர எங்களிடம் வரவில்லை. அப்போதே ஊர்மக்கள், 'நாங்கள் அப்பாவி, அப்படி எல்லாம் திருட மாட்டோம்' என சொன்னார்கள். பிறகு, காவல் நிலையம் கூட்டிப்போய் எங்கள் நான்கு பேரையும் ஒவ்வொரு அறையில் விட்டு பயங்கரமாக அடித்தார்கள். இன்னும் கூட என்னால் கையை தூக்க முடியாது.

'நாங்கள் என்ன செய்தோம்? எதற்கு எங்களை போட்டு அடிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, 'திருடிய பணத்தையும் நகையையும் கொண்டு வந்து வைத்து விடுங்கள்' என சொன்னார்கள்.

அதன் பிறகு, கட்சிக்காரர்கள், ஊர்க்காரர்கள் எல்லாம் என் கணவரிடம் 'மனைவி, பிள்ளைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். நீ போய் ஆஜராகு' என சொன்னார்கள். அதற்குள் அவரை எங்கள் ஊர் தலைவர் வேனில் பிடித்து வந்து விட்டார். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் முள்வேலி காடு. அங்குள்ள முள் மரத்தில் கட்டி உடைகளை அகற்றி அடித்து துன்புறுத்தி, பின்பு காவல் நிலையம் கூட்டி வந்தார்கள்.

அங்கு காவல் நிலையத்தில் நான் இருக்கையில் அமர்ந்திருந்த எஸ்.ஐ.-யிடம் 'ஒரு தப்பும் பண்ணல சார்' என காலில் விழுந்து கெஞ்ச, உட்கார்ந்த நிலையிலேயே என்னை செருப்பு காலால் எட்டி உதைத்தார். அதன் பிறகு, என்னை விடுவித்துவிட்டு என் கணவர், குள்ளன், கோவிந்தராஜன் என மற்றவர்களை காவல் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள். என் கொழுந்தனார்களை அடித்து கை விரல்களை வளைத்தனர். அப்போது அடித்தது இப்போது வரைக்கும் அவர்களுக்கு அந்த பாதிப்பு இருக்கிறது.

பிறகு மாலை நான்கு மணிக்கு என் மகன், கொழுந்தனார்கள் என எங்களை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் என்னை சாப்பாடு செய்து எடுத்து வர சொன்னார்கள். நானும் சோறு, கருவாட்டு குழம்பு செய்து கொண்டு காவல் நிலையம் சென்றேன். அங்கே என் கணவரை உடம்பில் துணி இல்லாமல், ஜன்னலில் கட்டி வைத்து அடித்தார்கள். அதில் ரத்தம் பீய்ச்சி காவல் நிலைய சுவர் எல்லாம் அடித்து இருந்தது. 'ஏன் இப்படி அடித்து கொடுமைப்படுத்துகிறீர்கள்? நாங்கள் திருடவில்லை' என கெஞ்சினோம். 'எடுத்த பணத்தையும், நகையையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு கூட்டிப்போ' என சொன்னார்கள்.

பிறகு, அவரை கட்டி, சிண்டை பிடித்து இழுத்து எட்டி எட்டி உதைத்தார்கள். அங்கேயே அவர் உயிர் போய் விட்டது. அப்போதும் அவர் நடிக்கிறார் என்று சொல்லி மீண்டும் மீண்டும் உதைத்தார்கள். சோறு அள்ளி அவர் வாயில் வைத்தால் சாப்பிடவில்லை. அவரது ஒரு கண்ணை குத்தி விட்டார்கள். மருத்துவரை பார்த்து விட்டு, மெடிக்கலில் கொடுத்த மாத்திரையையும் சாப்பிடவில்லை. அந்த நேரத்தில் எஸ்.ஐ. குடித்துவிட்டு, என் கணவர் நடிக்கிறார் என அவரது வாயிலும் மூக்கிலும் மிளகாய்த்தூளை கரைத்து ஊற்றி அடித்தார்கள். அவருக்கு உயிர் இருந்தால்தானே? அப்போதே உயிர் போய்விட்டது.

அதை பார்த்து, போலீஸ்காரர்கள் ஏதோ இந்தியில் பேசினார்கள். எனக்கு புரியவில்லை. என்னை அடித்து ஊருக்கு அனுப்பி விட்டார்கள். நான் பஸ் பிடித்து விருத்தாச்சலம் சென்று அங்கிருந்து எங்கள் ஊர் பேருந்துக்கு காத்து கொண்டிருந்தேன். அதற்குள் காவல் நிலைய வேன் ஒன்று எங்கள் ஊர் நோக்கி போனது. அந்த வேனில் இருந்த காவலர்கள் அந்தோணிசாமி, வீராசாமி, ராமசாமி இவர்கள் மூன்று பேரும் ஊருக்குள் சென்று, ராஜாகண்ணு தப்பித்து விட்டான் என்று சொன்னார்கள்.

அதற்குள் நான் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்குள் வெளியே விட்ட என் கொழுந்தனார்களை மீண்டும் அழைத்து போய் விட்டார்கள். இந்த செய்தி எல்லாம் ஊர் மக்கள் என்னிடம் சொல்ல, வந்த பேருந்திலேயே மீண்டும் ஏறி சென்றேன். காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது, அடிக்கிற சத்தம் கேட்கிறதா என பார்க்க சொல்லி கட்சிக்காரர்கள் எங்களிடம் சொல்லி அனுப்பினார்கள். அங்கு ஆள் இருந்தால்தானே? ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் அங்கு வாசலில் கட்டில் போட்டு தூங்கி கொண்டிருந்தார். வேறு சத்தமே இல்லை. கதவு திறந்திருக்கிறது. அவரது உடலை தூக்கி ஜெயங்கொண்டாம் பகுதியில் போட்டு விட்டார்கள். நாங்கள் கிளம்பலாம் என அங்கு பக்கத்தில் இருந்த டீக்கடையில் டீ குடித்தால் கிளாஸ்ஸில் ஒரே இரத்த வாடை. குடிக்க முடியவில்லை. டீயை கீழே உற்றிவிட்டு ஊருக்கு கிளம்பினால் அங்கு கட்சிக்காரர்கள், ஊர்மக்கள் என கூட்டம் நிற்கிறது.

பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் மயங்கி விழுந்த எங்களை எழுப்பி என்ன நடந்தது என கேட்டார்கள். நாங்கள் சொன்னதை கேட்டு உடனே எல்லாரும் கிளம்பி காவல் நிலையம் சென்றார்கள். அங்கே ஏற்கனவே இருந்த இரண்டு பேரையும், 'ராஜாகண்ணுவை கொலை செய்ததை வெளியே சொல்ல கூடாது, சொன்னால் உங்களுக்கும் இதுதான் நடக்கும்' என மிரட்டி வேறு ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள். சம்பவத்தை கண்ணால் பார்த்த அவர்களும் பயந்து விட்டார்கள்.

போலீஸ்காரர்கள் கண்ணில் படக்கூடாது என எங்களை கட்சி அலுவலகத்தில் உட்கார வைத்து விட்டார்கள். பிறகு நாங்கள் கடலூருக்கு மனு கொடுக்க சென்று விட்டோம். இந்த பக்கத்தில் காவல் துறையினர் 'தப்பித்து போன' ராஜாகண்ணுவை தேடிக்கொண்டிருந்தார்கள். பிறகு வழக்கு நடந்தது.

சம்பவம் நடக்கும் போது உங்களுடைய வயது என்ன?

சின்ன வயதுதான். ஆனால், வழக்கின் சமயத்தில் கோவிந்தன் (முதனை கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்) எனக்கு 40 வயது என்றும், என் கணவருக்கு 35 வயது என்றும் கொடுத்து விட்டார். அந்த சமயத்தின் அதிர்ச்சி காரணமாக எதுவும் சொல்ல முடியவில்லை. 13 வருடங்கள் நடந்த வழக்கிலும் தீர்ப்பு வந்துவிட்டது. வழக்கில் இரண்டு லட்சத்திற்கும் கிட்ட வந்த பணத்தில் ஒரு லட்ச சொச்சத்தை வங்கியில் போட்டு விட்டார்கள். அதில் வரும் பணத்தை மாத மாதம் வாங்கி கொள்வேன்.

மீதி பணம், என் கொழுந்தனார்களுக்கு. இப்போது கோவிந்தராஜன், குள்ளன் என எல்லாரும் இறந்துவிட்டார்கள். எனக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பையன் அவரது அப்பா இறந்த அதிர்ச்சியில் அவனும் இறந்து விட்டான். பெரிய மகன் போலீஸ் அடியால் பாதிக்கப்பட்டு காது சவ்வு அறுந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான். மகள் மட்டும்தான் என்னுடன் இருக்கிறாள்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
I could not watch the whole Jaibhim picture, says Parvathi Ammal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X