For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சினிமா விமர்சனம் - ஜூங்கா

By BBC News தமிழ்
|

திரைப்படம்

ஜூங்கா

நடிகர்கள்

விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி

இசை

சித்தார்த் விபின்

இயக்கம்

கோகுல்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு கோகுலும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் இரண்டாவது படம். சூதுகவ்வும் படத்தைப் போல இதுவும் ஒரு 'டார்க் காமெடி'.

ஜூங்காவின் (விஜய் சேதுபதி) தந்தை ரங்காவும் தாத்தா லிங்காவும் மிகப் பெரிய டான்கள். ஆனால், டானாக இருப்பதற்காக பெரும் செலவு செய்து சொத்துக்களை அழித்தவர்கள். ஆகவே அவர்களைப்போல ஜூங்கா வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த வரலாறே தெரியாமல் வளர்க்கிறார் ஜூங்காவின் தாய் (சரண்யா). ஒரு நாள் இந்தக் கதை ஜூங்காவுக்குத் தெரியவருகிறது. இதையடுத்து, தானும் ஒரு டானாக மாறி, பணம் சம்பாதித்து தந்தை இழந்த பாரடைஸ் சினிமா தியேட்டரை மீட்க முடிவு செய்கிறார்.

ஆனால், அதற்குள் அந்த தியேட்டரை வைத்திருக்கும் சோப்ராஜ் (ராதாரவி), செட்டியார் (சுரேஷ் மேனன்)என்பவரிடம் அதனைக் கொடுத்துவிடுகிறார். செட்டியார் தியேட்டரை ஜூங்காவிடம் விற்க மறுப்பதோடு அவமானப்படுத்திவிடுகிறார். இதையடுத்து, பாரீஸில் உள்ள செட்டியாரின் மகள் யாழினியை (சாயிஷா) கடத்தி தியேட்டரை மீட்க முயல்கிறார் ஜூங்கா.

படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில், படுவேகமாகவும் சுவாரஸ்யமாகவும் பறக்கும் திரைக்கதை ரொம்பவுமே ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக சலிப்பூட்டும் விதத்தில் அமையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இந்தப் படத்தில் கலகலப்பூட்டுகின்றன.

பணம் சேகரிப்பதற்காக டானாக உருவெடுக்கும் ஜூங்கா, அந்தப் பணத்தைச் சேமிக்கக் காட்டும் கஞ்சத்தனமும் அதனால் ஜூங்காவின் அடியாட்கள் படும் அவதியும் தியேட்டரை குலுங்க வைக்கிறது.

தவிர, சின்னச்சின்னதாக பல படங்களையும் நடிகர்களையும் ஸ்பூஃப் செய்வதும் ஜாலியாக இருக்கிறது.

ஆனால், செட்டியாரின் மகளைத் தேடி ஜூங்கா பாரீசுக்குப் போனதும் படத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அதற்குப் பிறகு க்ளைமாக்ஸ் வரும்வரை இலக்கில்லாமல் செல்லும் திரைக்கதை சலிப்பூட்டுகிறது.

ஆண்டவன் கட்டளை போன்ற ஒரு சில திரைப்படங்களைத் தவிர, பெரும்பாலான படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும். அது சில கதைகளுக்குப் பொருந்தும். வேறு சில கதைகளுக்குப் பொருந்தாது. இந்தப் படத்திற்கு ரொம்பவுமே பொருந்துகிறது என்பதால், விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளுக்கு திரையரங்கு அதிர்கிறது.

ஜூங்காவின் நண்பனாக வரும் யோகிபாபு வழக்கம்போது தனது 'ஒன்லைன்கள்' மூலம் பட்டையைக் கிளப்புகிறார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலிருந்தே வசீகரிப்பவர் சாயிஷா. இந்தப் படத்திலும் பின்னியிருக்கிறார். குறிப்பாக பாடல்களில் அவரது நடன அசைவுகள் வியக்கச்செய்கின்றன. ஜூங்காவின் தாயாக நடித்திருக்கும் சரண்யாவும் அவரது பாட்டியாக வரும் பெண்மணியும் துவக்கத்திலிருந்தே திரைக்கதைக்கு ஈடுகொடுக்கிறார்கள்.

சித்தார்த் விபினின் இயக்கத்தில் சில பாடல்கள் பரவாயில்லை ரகம்.

கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் எல்லாம் படத்தின் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். அந்த பலவீனம் இந்தப் படத்திலும் இருக்கிறது. மற்றபடி, ரசிக்கத்தக்க படம்தான்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில், படுவேகமாகவும் சுவாரஸ்யமாகவும் பறக்கும் திரைக்கதை ரொம்பவுமே ஈர்த்துவிடுகிறது. வழக்கமாக சலிப்பூட்டும் விதத்தில் அமையும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இந்தப் படத்தில் கலகலப்பூட்டுகின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X