For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாசகர்களே,பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள்மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. இன்றைய எழுத்தாளர்கள் பலரின் ஆதர்சமாக திகழ்பவர்கல்கி. அவரது படைப்புகளை வாசகர்களாகிய நீங்கள் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பார்த்திபன்கனவு புதினத்தை வாரா வாரம் நமது இணைய தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிட உள்ளோம். இதோமுதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.

By Staff
Google Oneindia Tamil News

இரண்டாம் பாகம்

21. வள்ளியின் சாபம்

Kalkiபொன்னனுடைய குற்றச்சாட்டைக் கேட்டபோது மாரப்பன் திடீரென்று ஆயிரம் தேள் கொட்டியவனைப்போல் துடிதுடித்தான். பொன்னனைப்பார்வையாலேயே எரித்து விடுகிறவனைப்போல் ஒருகண நேரம் கடூரமாய்ப் பார்த்தான். பின்னர் திரும்பித் தலையைக் குனிந்து கொண்டான்.

"பூபதி!இதற்கு என்னச் சொல்கிறாய்?" என்று சக்கரவர்த்தி இடிக் குரலில் கேட்கவும், மாரப்பனுக்கு மறுபடியும் தூக்கிவாரிப்போட்டது.ஆத்திரத்தினாலும், கோபத்தினாலும் அவனுக்கு அழுகை வந்துவிட்டது.

"பிரபோ! இவன் சொல்வது பொய், பொய், பொய்! இளவரசனை நான் தூண்டிவிடவில்லை. இவர்களுடைய சதியாலோசனையைப் பற்றி நன்றாய்த் தெரிந்துகொள்வதற்காகச் சிறிது காலம் இவர்களுக்கு உதவியாயிருப்பது போல் நடித்தேன்; அவ்வளவுதான். உடனுக்குடனே, தங்களுடைய தளபதி அச்சுதவர்மபல்லவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தேன்...."

அப்போது, "பாவி! துரோகி!" என்ற மெல்லிய பெண் குரல் கேட்டது.

சக்கரவர்த்தி "யார் அது?" என்று அதட்டிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். அந்தக் குரல் வள்ளி நின்ற திசையிலிருந்துதான் வந்தது. ஆனாலும் வள்ளிசக்கரவர்த்தி அந்தப் பக்கம் பார்த்தபோது பரம சாதுவைப் போல் நின்றாள்.

மாரப்பன் சிறிது தைரியமடைந்து, "பிரபோ! விக்கிரமனை இந்த அடிமைத் தூண்டிவிடவில்லை; இது சத்தியம். அவனைத் தூண்டிவிட்டது யார் என்றும்எனக்குத் தெரியும்! சத்தியமாய்த் தெரியும்! சமூகத்தில் கட்டளை பிறந்தால் சொல்லுகிறேன்" என்றான்.

"சொல்லு; தைரியமாய்ச் சொல்லு!" என்றார் சக்கரவர்த்தி.

"ஜடாமகுடதாரியான ஒரு சிவனடியார் அருள்மொழி ராணியையும் விக்கிரமனையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மையில் சிவனடியார்இல்லை; கபட சந்நியாசி. அவர் தான் விக்கிரமனை இந்தப் பயங்கரமான காரியத்தில் தூண்டிவிட்டார்."

இதுவரை மெளனமாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவி இப்போது குறுக்கிட்டு "உமக்கு எப்படித் தெரியும்? அந்த கபட சந்நியாசியை நீர்பார்த்திருக்கிறீரா?" என்று கேட்டாள்.

"ஆமாம், தேவி! இந்தக் கண்களாலேயே பார்த்திருக்கிறேன். இதோ சாதுபோல் நிற்கிறானே, இந்தக் ஓடக்காரனுடைய குடிசையில்தான் அவர்கள்அடிக்கடி சந்தித்துச் சதியாலோசனை செய்து வந்தார்கள். அந்தக் கபட சந்நியாசியின் சடையைப் பிடித்துக் குலுக்கி அவனை இன்னாரென்று வெளிப்படுத்த நான்பிரயத்தனம் செய்தேன். இந்தப் பொன்னனும் வள்ளியும் தான் அதைக் கெடுத்தார்கள்."

"என் பேச்சை எடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன்" என்று வள்ளி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

சக்கரவர்த்தி அவளைப் பார்த்துப் புன்னகையுடன், "பெண்ணே! அடிக்கடி உன் உதடுகள் அசைகின்றன. ஆனால் வார்த்தை எதுவும் வெளியில் வரக் காணோம்!உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் பயப்படாமல் சொல்லு!" என்றார்.

உடனே வள்ளி சக்கரவர்த்தியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு, "பிரபோ! இவர் சொல்வதெல்லாம் பொய். சிவனடியார் இளவரசரைத் தூண்டிவிட்டார்என்பது பெரும் பொய். சாமியார் பெரிய மகான், அவர் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபடியால் தான் எங்கள் மகாராணி இன்னும்உயிரோடிருக்கிறார். அவர் இளவரசரை "இந்தக் காரியம் வேண்டாம், வேண்டாம்" என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். இளவரசருடைய மனத்தைமாற்ற முடியவில்லை. சாமியார் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் பாவிகள், சண்டாளிகள், அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்...."என்றாள்.

"நிறுத்து பெண்ணே! போதும் சாபம் கொடுத்தது!" என்று சக்கரவர்த்தி சொல்லி, குந்தவியை நோக்கிப் புன்னகையுடன் "பார்த்தாயா அம்மா!"என்றார்.

"பார்த்தேன்; அந்தச் சாமியாரின் மந்திரத்தில் இந்தப் பெண்ணும் நன்றாய் மயங்கிப் போயிருக்கிறாள்! இவர்களில் ஒருவராவது முழுதும் உண்மைசொல்வதாக எனக்குத் தோன்றவில்லை அப்பா! ஒவ்வொருவரும் மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள்" என்றாள் குந்தவி.

அப்போது சக்கரவர்த்தி மாரப்ப பூபதியைப் பார்த்து, "பூபதி! உன்மேல் ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை. போனால் போகிறதென்று இந்தத் தடவைமன்னித்து விடுகிறேன். சேனாதிபதி பதவிக்கு நீ இப்போது ஆசைப்படுவது வீண். அந்தப் பதவிக்கு உன்னுடைய தகுதியை இனிமேல் தான் நீ நிரூபிக்கவேண்டும். அதுவரையில் உன் பேரில் வேறு குற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிந்ததா, இப்போது நீ போகலாம்!" என்று மிகக்கடுமையான குரலில் கூறினார். மாரப்ப பூபதி சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெளியேறினான்.

அந்தச் சமயத்தில் ஒரு சேவகன் உள்ளே வந்து சக்கரவர்த்திக்கு அடிபணிந்து ஒரு ஓலையை நீட்டினான். சக்கரவர்த்தி அதை வாங்கிப் படித்ததும் "ஓடக்காரா!நீயும் உன் மனைவியும் இப்போது போகலாம், பிறகு உங்களைக் கவனிக்கிறேன். உன் மனைவியை அந்தச் சிவனடியார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம்ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லு! அவருடைய மந்திரத்தில் அவள் ரொம்பவும் மயங்கியிருக்கிறாள்போல் தோன்றுகிறது" என்றார்.

அப்போது வள்ளியின் முகத்திலே நாணத்தின் அறிகுறி தோன்றியது. திடீரென்று அது புன்னகையாக மாறியது.

தலை குனிந்த வண்ணம் சக்கரவர்த்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் பொன்னனைத் தொடர்ந்து வெளியே சென்றாள்.

சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறிய திசையைப் பார்த்த வண்ணம் "நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன் இந்த வள்ளியைப்போல்..." என்றுஏதோ சொல்ல ஆரம்பித்தார்.

"அது இருக்கட்டும், அப்பா! ஏதோ ஓலை வந்ததே? அது என்ன!" என்று குந்தவி கேட்டாள்

. "போலிச் சிவனடியாரைப்பற்றி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தோமல்லவா? உண்மையான சிவனடியார் இப்போது வருகிறார். நகருக்கு வெளியேசென்று அவரை நாம் எதிர்கொண்டழைத்து வரவேணும்" என்றார் சக்கரவர்த்தி.

"அவர் யார், அப்படிப்பட்ட உண்மையான சிவனடியார்? அப்பா! ஒருவேளை நமது அப்பர் பெருமானோ? அவரைப் பற்றி அன்று கொஞ்சம் அபசாரமாகநினைத்தேன். அடிகளை மறுபடியும் தரிசித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றாள் குந்தவி.

"குழந்தையாகிய நீ அபசாரமாக நினைத்ததனால் அவருக்கு என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? எப்போதும் சிவானந்தத்திலே திளைத்திருக்கும்மகான் அவர். கொஞ்சங்கூட அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். குழந்தாய்! இப்போது வரப்போகிறவர் அப்பர் பெருமான் அல்ல; பரஞ்சோதிஅடிகள்."

"யார்? உங்களுடைய பழைய சேனாதிபதியா? உங்களுடன் வாதாபிக்கு வந்து புலிகேசியை வெல்ல உதவி புரிந்தவரா?"

"அவர் உதவி புரியவில்லை, குந்தவி! அவர்தான் புலிகேசியை வென்றவர்; புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிய சளுக்கர் படைகளைத் துவம்சம்செய்தவர். அந்த மகாவீரர்தான் இப்போது அரையில் உடுத்திய துணியுடன், விபூதி ருத்திராட்சதாரியாய் ஸ்தலயாத்திரை செய்து கொண்டு வருகிறார். தமதுபெயரைக் கூட அவர் மாற்றிக் கொண்டு விட்டார். "சிறுத் தொண்டர்" என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்."

"அவர் ஏன் சேனாதிபதி பதவியை விட்டார்? அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டதா?" என்று குந்தவி கேட்டாள்.

"இல்லை; அவருக்கு அப்படி ஒன்றும் வயசாகவில்லை. அவர் சேனாதிபதி பதவியை விட்ட காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன். இப்போது அவர்வரும் நேரம் ஆகிவிட்டது" என்றார் சக்கரவர்த்தி.

பிறகு, "குந்தவி! பரஞ்சோதியுடன் கூட அவருடைய தர்மபத்தினியும் யாத்திரை செய்து வருகிறார். அவர்களை எதிர்கொண்டழைத்து வரலாம்; நீயும்வருகிறாயா?" என்று கேட்டார்.

"அவசியம் வருகிறேன், அப்பா! அவர்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு எத்தனையோ நாளாக ஆசை!" என்றாள் குந்தவி.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X