For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாசகர்களே,பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான புதினங்கள் மூலம் தமிழ் வாசகர்கள்மத்தியில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் அமரர் கல்கி. இன்றைய எழுத்தாளர்கள் பலரின் ஆதர்சமாக திகழ்பவர்கல்கி. அவரது படைப்புகளை வாசகர்களாகிய நீங்கள் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பார்த்திபன்கனவு புதினத்தை வாரா வாரம் நமது இணைய தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிட உள்ளோம். இதோமுதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.

By Staff
Google Oneindia Tamil News

முதல் பாகம்

6. போர் முரசு

Kalkiவீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக்கையில் எடுத்துக் கொண்டு "தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம்? நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக்கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டு விட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

"ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்? நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று?" என்றான்கிழவன்.

"சேச்சே ! நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா? சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்!" என்று வள்ளி சொன்ன போது அவள்கண்களில் நீர் ததும்பிற்று.

"ஆமாம், வள்ளி! அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீதுபடையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா? அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்மசக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போதுநமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார்.

அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிடவேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்திகவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம்அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி! இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப்பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா? நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக்கொடியை மறுபடியும் பறக்க விடலாமா? அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்?"

"அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா! நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப்பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயேஎன்று எனக்கு இருக்கிறது தாத்தா! நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா....?"

"ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடினார்!"

"என்ன சொல்லுகிறாய், தாத்தா?"

"சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல்சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின்பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக்கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் யுவராஜாவாக விளங்கினான். பார்த்திபமகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கெளரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்டபாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்?"

"இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா? இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது?"

"உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி!" என்றான் கிழவன்.

வள்ளி திடுக்கிட்டு "என்னால் ஏற்பட்டதா? நன்றாயிருக்கிறதே கதை!" என்றாள்.

"உன்னால் ஏற்பட்டதுதான். இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி! காலம் ரொம்பஅபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப்போகமாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்."

"என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய்? இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்?" என்று வள்ளி கேட்டாள்.

"நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா! ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக்கொண்டிருந்தான்..."

"அவன் தலையிலே இடி விழ!" என்றாள் வள்ளி.

"அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா! என் தலையிலே அல்லவா விழுந்தது! கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரியவிபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக்கொண்டு போவதாக இருந்தான் இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக்களரியாகுமென்றுஎண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் உள்ள கலியாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான்.உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள். சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்...."

இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சு விட்டான். காயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வள்ளி, "இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா? இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன்? அப்புறம் என்ன நடந்தது?"என்று கேட்டாள்.

"நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம்என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். நீ பெரிய சக்கரவர்த்தியின் மருமகன் ஆகப்போகிறாய், அப்பா! இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு" என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள்கட்ட ஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்."

"இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா! ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன்? நீதான்என்னைக் காப்பாற்றவேணும்?" என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

கிழவன், "பைத்தியமே! ஏன் இப்படி நடுங்குகிறாய்? பொன்னன் சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார்.என் குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான்பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார். நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்!" என்றான்.

அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- "வெற்றிவேல்! வீரவேல்! யுத்தம் வருகுது! யுத்தம் வருகுது!சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது! படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒருதாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல்!வீரவேல்!" - இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது.

இந்தப் போர்முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள். முரச யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க்கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல் இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும்பேத்தியும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான்:- "வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும்காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்"என்றான்.

தெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி வேகமாய்ப் பிரயாணம்செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.

இதை பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது.

அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான்.

அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.

பெளர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்துகொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன.

"ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்" என்று சொல்வதுண்டல்லவா? இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும் உறையூர்சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர் தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடைவீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்குமுன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.

மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பதுஅவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கே தான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்மசக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாகஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கு இரத்தம் கொதித்தது."சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத்துடைத்துக் கொள்ள வேண்டாமா?" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான்மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா?- இவ்விதம் யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X