For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல் 63: சுவாரஸ்ய தகவல்கள்

By BBC News தமிழ்
|
கமல் ஸ்ரீதேவி ரஜினி
Getty Images
கமல் ஸ்ரீதேவி ரஜினி

கமலின் 63-வதுபிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் இங்கே.

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.

2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.

3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.

5. கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.

கமல்
Getty Images
கமல்

6. அதன் பின் குழந்தை நட்சத்திரமாக கமல் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தார்.

7. குழந்தை நட்சத்திரமாக அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.

8. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.

9. நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.

10. கமல் கதாநாயகனாக உருவெடுத்தது ஒரு மலையாள படம் மூலம் தான். அந்த திரைப்படத்தின் பெயர் கன்னியாகுமரி. அந்த படம் வெளியான ஆண்டு 1974.

11. 1970 களில் கமல் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அவை நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது. இவை அனைத்தும் வெற்றி படங்கள்.

12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

13. கமல் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியது அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாகதான். கே. பாலசந்தர் இந்த திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்காக, கமலுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.

14. ராஜபார்வை திரைப்படம் வெற்றிபடமாக அமையாவிட்டாலும், கமலுக்கு பரவலான பாராட்டையும், விருதுகளையும் பெற்றுதந்தது இந்த திரைப்படம்.

15. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிபடங்களாகவும் அமைந்தன.

கமல்
Getty Images
கமல்

16. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமலின் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல், அண்ணா... நீங்களும் வாங்க என்று கொள்ளி வைக்க அழைக்கிறார். இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.

17. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன்.

18. கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.

19. ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.

20. ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமலஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம்; மூன்றாம் பிறை; சனம் தேரி கஸம்; சகலகலா வல்லவன்; ஹே தோ கமல் ஹோகயா

21. எண்பதுகளின் மத்தியில் மய்யம் என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.

22. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல்.

23. தொடக்கத்தில் சிவாலயா என்ற நடனக் குழுவை நடத்தினார் கமல்.

24. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல். அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு நான் ஏன் பிறந்தேன், சிவாஜிக்கு சவாலே சமாளி, ஜெயலலிதாவுக்கு அன்புத்தங்கை.

25. தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.

கமல்
Getty Images
கமல்

26. கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டுள்ளது.

27. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.

28. கமல் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

29. கமலின் ஆத்மார்த்தமான நண்பராக இருந்தவர் மறைந்த அனந்து.

30. கமல் இப்போது அரசியல் பேசவில்லை எண்பதுகளிலேயே பேசி இருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.

31. கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.

32. கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து 2005-ம் ஆண்டு கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.

33. கமலின் அற்புதமான நடிப்புதிறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

34. கமல் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது மலையாளபடமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.

35. தமிழில் முதல் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கித் தந்தப் படம் அபூர்வராகங்கள்.

36. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்.

37. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரன் என்ன்வென்றால், பிரச்னையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் மெகா ஹிட்.

38. உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்று கேட்டால், நான் நடிக்கப் போகும் அடுத்த படம் என்பார் கமல்.

39. பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா ஆகிய இரண்டு திரை ஆளுமைகளின் முதல் பட நாயகன் கமலஹாசன்தான். பாலுமகேந்திராவின் முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா. பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.

40. கமல் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் தேடி தீர்ப்போம் வா.

கமல்
Getty Images
கமல்

41. ரஜினிக்கு பிடித்தபடமான முள்ளும் மலரும் வெளியாவதற்கு காரணமாக இருந்தவர் கமல். அந்த படத்திற்கு பொருளாதார உதவிகளை செய்திருக்கிறார்.

42. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் தாயம் என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக உருமாறியது.

43. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமலஹாசன். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்.

44. சினிமா சென்டிமென்ட்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, "சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்". பேக் அப் என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுனமாக பார்க்கப்படும்.

45. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.

46. முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்கு பிடித்தமான உணவு. கமல், பிளாக் டீ பிரியரும் கூட.

47. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

48. உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.

49. கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.

50. கமல் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.

51. கமலுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.

52. கமல் கோலிவுட் என்ற வார்த்தையை உச்சரிக்கமாட்டார். எப்போதும் தமிழ் திரையுலகம்' என்று அழுத்தி உச்சரிப்பதே கமலின் வழக்கம்.

53. கமல் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார். பின் அந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

54. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கமல்.

55. தற்போது ஆனந்த விகடனில் கமல் எழுதி வரும் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தொடர் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

கமல்
Getty Images
கமல்

56. கமல் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவார். அதுபோல, திரைப்பட தொழிற்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கமல்.

57. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.

58. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் திரைப்படமும் ஒன்று.

59. பாலசந்தர் கமலுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், "மை டியர் ராஸ்கல்" என்று தொடங்கும்.

60. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் கமலுக்கு உள்ளது.

61. பாலச்சந்தரை அப்பா என்றும் பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல் அழைப்பார்.

62. கடந்த ஓராண்டாக சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்வீட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல்.

63. ட்வீட்டரில் 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கிறார் கமல்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Kamal Haasan turns 63 today. Here is a collection of interesting facts about the legend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X