• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"ஜெயலலிதா" ஆக கங்கனா: விறுவிறுப்புடன் நடக்கும் "தலைவி" படப்பிடிப்பு - விரிவான தகவல்கள்

By BBC News தமிழ்
|

பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிப்பில் வெளிவரவிருக்கும் தலைவி படத்தில், மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக அவர் தற்போது தமிழ்நாட்டில் முகாமிட்டிருக்கிறார்.

இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக முக்கிய காட்சிகளின் படப்பதிவு, கடந்த ஏழு மாதங்களாக தள்ளிப்போடப்பட்டு வந்தது.

Thalaivi

இந்த நிலையில், திரைப்படங்களுக்கான ஷூட்டிங்கை, இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக இடைவெளி வழிகாட்டுதல்களுடன் நடத்த இந்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கங்கனா ரனாவத் நடித்து வரும் தலைவி பட ஷூட்டிங்கும் தொடங்கியிருக்கிறது.

இந்த படத்தில் தான் நடித்து வரும் சில காட்சிகளை கங்கனா ரனாவத் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1312922840753004545

அதில், காலை வணக்கம் நண்பர்களே, முற்றிலும் திறமையான மற்றும் மிகவும் பாசமுள்ள இயக்குநர் ஏ.எல். விஜய் உடனான நேற்றைய அதிகாலை காட்சி விவாதத்தின்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இவை, இந்த உலகில் பல அற்புதமான இடங்கள் உள்ளன, ஆனால் எனக்கு மிகவும் இனிமையான மற்றும் ஆறுதல் தரும் திரைப்பட செட் தலைவி படத்தின் செட்தான் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆறு முறை மொத்தம் 14 ஆண்டுகளுக்கு மாநில முதல்வராகவும் இருந்தவர் ஜெ. ஜெயலலிதா. 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்த அவர், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தனது மரணத்தின் கடைசி மாதங்களில் ஜெயலலிதா எதிர்கொண்ட உடல் சுகவீனம், அவரது மரணத்துக்கு அடுத்த சில வாரங்களில் அவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை, ஆளும் அதிமுகவின் தலைமையை அவரது நெருங்கிய தோழி வி.கே. சசிகலா ஏற்று ஆட்சியில் முதல்வராக அமரவிருந்த சூழலில் அவருக்கு உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய விசாரணை நீதிமன்ற தண்டனை என 2016இல் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக இருந்தது.

இதேபோல, அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி, அதன் பிறகு தனியாக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரன், ஜெயலலிதா போட்டியிட்ட சென்னை ஆர்.கே. புரம் தொகுதி இடைதேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனது, அதிமுகவை தன்வசப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தேர்தல் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லட்சம் கொடுத்ததாக அவர் மீது டெல்லி காவல்துறை வழக்கு தொடர்ந்தது, பிறகு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஆட்சியையும் கட்சியையும் நடத்தியது, சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து அவரது விடுதலை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என நிலவும் எதிர்பார்ப்பு, மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஆட்சியிலும் கட்சியிலும் இணக்கமாக செயல்படுவார்களா என தொடரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெயலலிதா தொடர்புடைய தலைவி படத்தின் திரைப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த படம் வெளிவரும் நேரமும், தமிழக அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கும் நேரமும் ஒரே நேரத்தில் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்பின்னணியில் கங்கனா ரனாவத் நடித்து வரும் தலைவி ஷூட்டிங் அதிக முக்கியத்துவதைப் பெற்றிருக்கிறது.

ரம்யா கிருஷ்ணனின் "Queen" Vs கங்கனா ரனாவத்தின் "தலைவி"

எம்எக்ஸ் பிளேயர் செயலியில் ஏற்கெனவே ஜெயலலிதாவின் சிறு வயது முதல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் காலம் வரையிலான நிகழ்வுகளை ஒத்துப்போகும் காட்சிகளைக் கொண்ட வெப் சீரிஸ் "Queen" என்ற பெயரில் இயக்கி எம்எக்ஸ் பிளேயர் செயலியில் வெளிவந்தது. அதில் எம்ஜிஆர் மீதான ஜெயலலிதாவின் பார்வை, அவரை அரசியல் ஆசானாக ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட சூழ்நிலை, அரசியலிலும் திரையுலகிலும் தமது ஆளுமையை நிரூபிக்க ஜெயலலிதா எதிர்கொண்ட சவால்கள் படமாக்கப்பட்டிருந்தன. பிரபல திரை இயக்குநர் கெளதம் மேனனும் பிரசாத் மேனனும் அதை இயக்கிருந்தனர். கெளதம் மேனன், உள்ளிட்ட பிரபலங்கள் அந்த படத்திலும் நடக்கவும் செய்திருந்தனர். அந்த வெப் சீரிஸ் தொடரில் ஜெயலலிதாவை சித்தரிக்கும் கதாபாத்திரம் ஷக்தி சேஷாத்திரி என்ற பெயரில் இடம்பெற்றிருக்கும். எம்ஜிஆருக்கு பதில் பிகேபி என்றும், வி.கே. சசிகலாவின் பெயர் செல்வி என்பது போலவும் தொடரில் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அந்த படத்தில் இடம்பெற்றவர் ஜெயலலிதா என உங்களுக்கு தோன்றினால் அது நல்லது, ஆனால், என்னைப் பொருத்தவரை அந்த தொடர், அனிதா சிவகுமார் எழுதிய The Queen புத்தக கதையை அடிப்படையாகக் கொண்டது என்று ரம்யா கிருஷ்ணன் கூறினார்.

சசிகலா வேடத்தில் நடிகை ப்ரியாமணி

இதே வரிசையில் தலைவி படம் அமைந்திருந்தாலும், அதை ஜெயலலிதாவின் சுயசரிதை போன்ற படமாகவே அதன் தயாரிப்பாளர் எடுத்திருக்கிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா, எம்ஜிஆர் வேடத்தில் பிரபல நடிகர் அரவிந்த்சாமி, சசிகலா வேடத்தில் நடிகை ப்ரியாமணி நடித்து வருகின்றனர்.

இந்த படம், ஜெயலிலதாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிந்தைய சூழல்களை விவரிக்கும் படமா இருக்கும் என்று தெரிய வருகிறது. இருப்பினும், இந்த படத்தின் ஷூட்டிங் முழுமை பெற்று அது எப்போது திரைக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஜெயலலிதாவை சித்தரிக்கும் மற்றொரு படம் "Iron lady" என்ற பெயரில், நடிகை நித்யா மேனன் ஜெயலலிதா பாத்திரத்தில் நடிக்க, ப்ரியதர்ஷினி இயக்கி வருகிறார்.

தற்போதைய அரசியல் சூழலில் "தலைவி" படம் திரைக்கோ ஓடிடியிலோ வெளிவர அரசியல் ரீதியில் ஆட்சேபம் எழுந்தாலும் அதை ஒதுக்கி விட முடியாது என்று திரைத்துறையினர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

BBC Tamil

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Bollywood actress Kangana Ranaut is playing the role of the late Chief Minister of Tamil Nadu and AIADMK General Secretary Jayalalithaa in the upcoming film Talaivi directed by Vijay and produced by Vishnu Vardhan. She is currently camping in Tamil Nadu for this film.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X