For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

109. தகையணங்கு உறுத்தல்

By Super
Google Oneindia Tamil News

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

(1081)

விளக்கம்:

இவ்வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண்தானோ? புரியாமல் என் நெஞ்சம் மயங்கின்றதே.


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.

(1082)

விளக்கம்:

என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள். அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டதுபோல் உள்ளதே.


பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

(1083)

விளக்கம்:

"கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன். இப்போது அறிந்து விட்டேன். அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.


கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

(1084)

விளக்கம்:

தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே.


கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.

(1085)

விளக்கம்:

இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ? பிறழும் கண்ணோ? மருளும் பிணையோ? இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே.


கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

(1086)

விளக்கம்:

வளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால் அவற்றைக் கடந்து இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே.


கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

(1087)

விளக்கம்:

இந்த மாதின் சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால் மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.


ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

(1088)

விளக்கம்:

போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம் இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே.


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

(1089)

விளக்கம்:

மானின் பிணைபோன்ற மடநோக்கினையும் உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்துதல் ஏனோ?


உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

(1090)

விளக்கம்:

தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல் அடப்பட்ட நறாவானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X