For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

119. பசப்புறு பருவரல்

By Staff
Google Oneindia Tamil News

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

(1181)

விளக்கம்:

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்றுஎடுத்துச் சொல்வேன்.


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

(1182)

விளக்கம்:

அவர் தந்தார் என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும் என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும்நிறைகின்றதே.


சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

(1183)

விளக்கம்:

என் அழகையும், நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காம நோயையும் பசலையையும்எனக்கு தந்துள்ளார்.


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

(1184)

விளக்கம்:

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான்பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது.


உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

(1185)

விளக்கம்:

அதோ பார் என் காதலர் என்னை பிரிந்து போகின்றார் ; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது பற்றிபடருகின்றது.


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

(1186)

விளக்கம்:

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப்பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

(1187)

விளக்கம்:

தலைவனை தழுவிய படியே கிடந்தேன் ; பக்கத்தில் சிறிது புரண்டேன் ; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல,என்மீது மிகுதியாக பரவி விட்டதே.


பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

(1188)

விளக்கம்:

இவள் பசந்தாள் என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும்இல்லையே.


பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

(1189)

விளக்கம்:

பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர், நல்ல நிலையினர் ஆவார் என்றால், என்னுடைய மேனியும் உள்ள படியே பசலை நோயினைஅடைவதாக.


பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

(1190)

விளக்கம்:

பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார் என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X