For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீசை..!

Google Oneindia Tamil News

பால்யம் தொட்டா...இல்லை..
பள்ளிப் பருவம் தொட்டா..
சரியாக நினைவில் இல்லை..
எப்போது அதன் மீது
ஆர்வம் வந்ததென்று..
மீசை..!!

அப்பா உடைந்த கண்ணாடி வைத்து
முகச் சவரம் செய்ய..
சுவரோரம் ஓரக்கண்னால் பார்ப்பேன்.
எனக்கு எப்பப்பா மொளைக்கும்?!
அப்பத்தாவின் ஆடு மேய்க்கும் குச்சியில்
செல்லமாய் ரெண்டு கெடைக்கும்..!

பள்ளி சென்றேன்..தனபால் வாத்தியார்..!!
கரு கருவென்று காதுவரை வைத்து இருப்பார்.
மீசைய விரலால நீவி "கதிரு" இங்க வாடணு சொன்னா..
காலு ரெண்டும் தடதடன்னு ஆடும்.!
வகுப்புல ஒரு பய பேச மாட்டான்..!!

பருவ வயது வந்தது..பூனை மயிர்
மேலுதடு தட்ட..கொஞ்சம் கர்வம் வந்தது..
அட..நமக்கும் மொளைக்குது டோய்..!
எட்டுக்கு மேலே தேறலே..! படிச்சா தானே..!

A poem on Moustache

சைக்கிள்ல ரெண்டு பக்கம்
குடம் போட்டு..தண்ணிக்கு போவேன்..
பக்கத்துக்கு தெரு "முத்துமலர்" வீட்ட பார்த்துகிட்டே..!!

"முத்து" வாசல்ல தண்ணி தெளிச்சா..
ஈரம் ஆகுறது என்னவோ..என் மனசுதான்..!
சைக்கிள் பெடல்ல கால் நிக்காது..
எப்படி அவ கிட்டே இத சொல்றது..?!

மேலுதட்டு மசுர தடவிட்டே
அவள பார்த்து சிரிச்சேன்..
ரோட்டுல படுத்திருந்த கோபால் கவுண்டர்
வீட்டு நாய பார்க்காம..!!

சைக்கிள் டயர் மேலேறி அது ஊளையிட..
நா செவுத்தோரம் கால் பரப்பி நேரம்மாச்சு..!!

"ஏம்ப்பா.." கண்ண எங்கவெச்சு ஓட்டற?"
கோபால் அண்ணன் குளிச்ச தலையோட
வெள்ளை மீசை நீவி கண் உருட்ட..
எங்கண்ணுக்கு பத்து தல இராவணனா தெரிஞ்சாரு..!!

அன்னிக்கு முத்துமலர் சிரிச்சதுல
போன மானம்...திரும்ப வரும்னு தோனல...!!
எப்படியாவது அவகிட்டே சொல்லிடனும்..
இந்த எழவு மீசை எப்பத்தான் நல்லா
வளருமோ..?!

கிடாய் மீசையோட மலை கோடங்கி வந்தான்..!
கரும் கொரங்கு எண்ணை தேய்...அடுத்த பொங்கல்ல
சைடு ஒதுக்குற அளவு வளரும்னு சொல்லி...
அம்பது ரூவாய ஆட்டைய போட்டான்..
வாகாய் ஒரு மயில் இறகு..! எண்ணை தடவ....!!
கையிலே தடவுணா.. கைமுடி மொளைக்குமாம்..!

படுபாவி போனவன் போனவன்தான்...!
எண்ணை வெச்ச நாத்ததுல..அப்பா அடிச்ச அடி...
ஒரு வாரம் சைக்கிள்..கொடம் தொட முடியலே...!!

இது நடந்து ஆச்சு வருஷம் பத்து..!
எனக்கு இப்போ 27..!.
டவுன் உரக் கடையிலே லோடு கணக்கு பாக்கறேன்..
ஆனா..பொழப்பு தான் இனிப்பா இல்லை..!!

ஆலமரம்..கருவேலம் காடு..ஆத்தோரம்...அய்யனாரு பின்னாடி
மலர் கூட பேசாத எடம் இல்லை..!
"கதிரு...அந்த மீசைய எதுக்கு நீவிட்டே இருக்கேனு?"
அவ கேக்காத நாளும் இல்லே...
இத்தனை பேசி என்ன..?!

சாதிசனம்..உறவுக்காரன் பேச்சை கேட்டு
அவ அப்பன் கூட சண்ட முத்த..
போன வருஷம் மலர் என்ன விட்டு போயே போய்ட்டா..
அப்பன் கட்டி வெச்ச கணியூர் வாத்தியோட..!
பொறகு என் பாதி நேரம் போச்சு பாட்டிலோட..

"ஏங்க.."..அடுத்த நோம்பிகுள்ள இவனக்கு
பார்த்து வெரசா முடிக்கணும்..
அம்மா கார செவுத்துக்கு அப்பால பொலம்பறது
அப்பா இருமலோட கேட்டது..!

மீசைய தடவிட்டே கூரைய பார்த்து
நான் மூச்சு விட...
"மலர்" கண்ணு முன்ன வந்து நின்னா..!!
எல்லாம் கனவா போச்சு..!

மீசை மசுரு நல்லா வந்து என்னசெய்ய..
கொல தெய்வம் காளியத்தா எனக்கு குடுத்து
வெச்சது இது தான்...!!

இப்பவும் மீசைய தடவர ஒவ்வொரு நாளும்
இனிப்பா கேக்குது அவ கொரலு நெஞ்சுக்குள்ள...

"கதிரு...அந்த மீசைய எதுக்கு நீவிட்டே இருக்கேனு?"

மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின். டெக்சாஸ்

English summary
A poem on Moustache sent by our reader Manickam Vijayabanu from the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X