For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தையர் தினம் 2020 : எப்பிறவி நான் எடுத்தாலும்.. என் "அப்பா" என்றும்.. நீ மட்டுமே..!

Google Oneindia Tamil News

சென்னை: இது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஆஸ்டின் நகரில் வசித்து வரும் நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ள ஒரு உருக்கமான மடல்.

அந்த மடல் அவரது வார்த்தைகளிலேயே...

Fathers Day 2020: You are always my father

தந்தையர் தினத்திற்காக, அண்மையில் மறைந்த என் தந்தையின் நினைவாக...ஒரு கவிதை.!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மருத்துவராக 55 ஆண்டுகள் பணிபுரிந்து, பல இலவச மருத்துவ சேவைகளை என் பள்ளி பருவம் தொட்டு பல கிராமங்களில் செய்தவர் என் அப்பா - Dr.M.விஜயபானு. கடந்த 2019 நவம்பரில் திடீரென எதிர்பாராமல், 84 வயதில் எங்களை விட்டு மறைந்து விட்டார். அவர் அன்பும், வழிகாட்டுதலும் என்றும் என் நினைவு விட்டு நீங்காது. அவர் நினைவில் இந்த அஞ்சலி.!

தந்தையர் தினம் 2020 : ஒவ்வொரு அப்பாக்களுக்கும் இதுபோல ஒரு கதை உண்டு!தந்தையர் தினம் 2020 : ஒவ்வொரு அப்பாக்களுக்கும் இதுபோல ஒரு கதை உண்டு!

அப்பாவும்...நானும்

அப்பா...
நீயற்ற ஒரு நீண்ட...தனிமைக்கு பின்
தம்பி எழுதுகிறேன்.!

நான்
விழும் போது எழ வைத்து..
அழும் போது தோள் கொடுத்து..
சிரிக்கும் தருணத்தில் சிந்திக்க வைத்து..
கோபக் கொப்பளிப்பில் அரவணைத்து..
நட்பு..உறவு..நேசம்..மொழி உணர்த்தி..
உலக உருண்டை உள்ளங்கை தூரமென காட்டி..
"முடியாது" - "முயற்சி செய்யாதது" எனவுரைத்து..
நமக்கிடையே சுவரின்றி எப்போதும் பாதுகாத்து..
உருண்டு புரண்டு..கட்டி கதைபேசி..
"எளிமை" என்பதை அதைவிட
எளிதாக வாழ்ந்து பிரதிபலித்து..
என்னை இப்போதும்... எப்போதும்
பிரமிக்க வைக்கும் பிரபஞ்சம்
நீ மட்டுமே..!

நான் காண.. நீ எடுக்காத
அவதாரம் ஏது?
எழுதி தீரவில்லை என் எழுதுகோலுக்கு..!

தந்தையாய்... தோழனாய்..
ஆசிரியனாய்... தாயாய்..
தாரமாய்... சகோதரியாய்..
மகளாய்... மகனாய்..
கதை சொல்லியாய்..
மருத்துவ சேவையாய்... அன்பு கானகமாய்..
எனக்கு நீ வாழ்ந்து காட்டாத
கவிதை படிமம் ஏதும் உண்டா?

ஆயிரம் முறை கோவில் வலம் வந்தும்..
கடவுள் ஏன் பேசுவதில்லை என்றெண்ணி..
பின் பள்ளி வயதில் கண்டறிந்தேன்..!
எப்போதும் என்னுடனே பயணித்த
கடவுள்.. நீ மட்டுமே.!

உன் கரம் பற்றிய பால்யம் தொட்டு..
நேற்று உன்னை
முத்தமிட்டு வழியனுப்பும் வரை..
இருவரும் கலக்காத உரையாடல் ஏது இங்கே?
எல்லாம் அடியுணர்வோடு கலந்துவிட்ட
ஆழ் படிமங்கள்...!

என் வாழ்வின் ஒவ்வொரு பருவம்
கடக்கும் போதும்..
நீ.. அள்ளி தெளித்த அனுபவங்கள்..
ஒன்றா.. இரண்டா..?!
புத்தகமும்.. நூலகமும் ஒன்றிணைந்த பேரேடு..!

பள்ளி வயதில் நீ சொல்லி சிரித்து கேட்ட
முல்லா.. தெனாலி கதைகள்..!
பாரதி.. பாரதிதாசன்.. கவிதை..கட்டுரைகள்.!
சத்யஜித்ரே.."பதேர் பாஞ்சாலி" நாட்கள்..!
ஞாயிறு மெட்ரோ வேற்று மொழி விருது திரைப்படங்கள்.!
அக்பர்..பீர்பால் நகைச்சுவை நொடிகள்..!
அகிரா குரசவா..முபஸ்ஸன்ட்..ஆண்டன் செகாவ்
கதை..கவிதை..காவியங்கள்..!
மு.வ வும்..ஜெயகாந்தனும்..சுஜாதாவும் கலந்த
மதிய.. இரவு மேசை நாட்கள்..!
நம் கணியூர் திரையரங்கு ஆரம்ப நிகழ்வுகள்..!
திராவிட தொடக்கம் - கே.ஏ.மதியழகன் நீண்ட நட்பு உறவு..
அரசியல் உரையாடல்கள்..!
சண்டிகர்..பிலாய்.. கான்டீன் வாலிப பருவம்..
பீம்சிங்... சேது மாதவன்.. ஜூபிடர் பிக்ச்சர்ஸ்..
சின்னப்பா தேவருடன்
உன் கதை விவாத சென்னை நாட்கள்..
கஞ்சம்பட்டியிலும்.. பொள்ளாச்சியிலும்..
தொட்ட கிராமங்களிலும்
இலவச மருத்துவ சேவை தினங்கள்..!
இன்னும்.. இன்னும்..
இந்த காகித பரப்பு போதவில்லை எனக்கு..!

"பிரமிப்பு" என்ற வார்த்தையின் வீரியத்தை..
உன் "எளிய வாழ்க்கை"
தடப்பதிவில் கண்டு பிரமிக்கிறேன்..!
"வெற்றி-தோல்வி"களை கையாண்ட விதம் கண்டு..
உன் கரடு முரடான பயணத்தின் "வலிமை" கண்டு.!

நீ சொல்லிய ஒரு வார்த்தை..
அடி நெஞ்சில் ஆழமாய் விதைத்து இருக்கிறேன்..
இப்போதும்..!

"வெற்றி பெறுவது மட்டும் வாழ்க்கை அல்ல..!"
வாழ்க்கை பாதை அனுபவங்களை
அதன் போக்கிலேயே
அனுபவித்து கடப்பது தான்
ஆத்மார்த்த பயணம் என்பதை..!

உன் அறுபதுகளில் கண்ட
முகச் சுருக்க கோடுகள்..!
அது.. வறண்ட வயோதிக கோடுகள் அல்ல..!
வலுவான வாழ்க்கை பயணத்தின்
மேடு..பள்ள வலிகள்..!
அதில் தளராது நீ
கண்டெடுத்த வெற்றிகளின்..அழுத்த சுவடுகள்.!

இனி
நீயற்ற என் தனிமை பயணம்..
உண்மையில்... கடப்பது மிகக் கடினம்..!

இருண்ட மழைநாளில்..
திசையற்று.. ஒற்றையாய் தனித்து பறக்கும்
சிறு பறவை போல்..
இலக்கின்றி திரியும் மனதை
கட்டி இழுக்க முயற்சிக்கிறேன்..!

அதற்கும் ஒத்திகை நடத்தி..
அழுத்தமாக சொல்லிவிட்டு தானே
பயணித்திருக்கிறாய்.!

கடைசியாய் நாம் பேசிய
ஒலிநாடா பதிவை பலமுறை
ஒலிக்க கேட்டு என்னை
நகர்த்த முயலுகிறேன்..!

நீ ரசித்து.. கடந்த வாழ்க்கையின்
அர்த்தமுள்ள பயணத்தை..
விட்டு சென்ற பாதச் சுவடுகளின் மீது
முடிந்தவரை பயணிப்பேன்..!

நீ என்னோடில்லை என்பது..
"கனவாகி" பொய்க்காதா
என்று இப்போதும் விம்முகிறேன்..!
உன்னை இனி எங்கு காண்பேன்.."அப்பா"..?!

பரந்த பால்வெளியில்..
எங்கு நீ இருந்தாலும்..
மகிழ்ச்சியும்.. சந்தோஷமும் பூத்து மலரட்டும்.!
அங்கும் அதன் "முதல் விதை"
உன்னுடையதாவே இருக்கும்..!

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு"

என்ற.. வள்ளுவனின் குரலாய் வாழ்ந்து
பயணித்த உன்னை..
ஆரத் தழுவி முத்தமிடுகிறேன்..!

எப்பிறவி நான் எடுத்தாலும்..
என் "அப்பா" என்றும்..
நீ மட்டுமே..!

பொங்கி வழியும் கண்ணீரோடு...
உன் நினைவில்...
தம்பி..!

English summary
Father's Day 2020: Our reader Manicka Vijayabanu has remembered his late father on this Father's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X