காவியத் தாயின் இளைய மகன்.. காதல் பெண்களின் பெரும் தலைவன்.. நீ நிரந்தரமானவன்!
"நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது...
நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது..
நீ காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை"
இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்.

காதல், தத்துவம், சோகம், கொண்டாட்டம், சந்தோஷம், துக்கம், விரக்தி, வேதனை, நக்கல் நையாண்டி என எந்தப் பொருளை எடுத்தாலும் அங்கு கண்ணதாசனின் கவி வரிகள் விளையாடிய விளையாட்டை இதுவரை யாரும் செய்ததில்லை என்பதே கவியரசின் மிகப் பெரிய சாதனை.
எதை எடுப்பது.. எதை விடுவது.. எங்கு தொடங்குவது.. எங்கு முடிப்பது.. சத்தியமாக கண்ணதாசனை ஆய்வு செய்து எழுதவே முடியாது.. காரணம் நுகர்ந்து அனுபவிக்க வேண்டிய அரும் பெரும் உற்சாகம் அவர்.
படிக்காத பாமரர்களையும் பாட வைத்தவர் கவியரசு. அதற்கு முக்கியக் காரணமே அவரது பாடல்களில் உள்ள எளிமையும், மேதமையும்தான். கலாச்சாரத்தையும், இலக்கியத்தையும், வாழ்வியலோடு கலந்து கொடுத்து அமிர்தமென இனிக்க இனிக்க தந்து தமிழர்களை மகிழ்வித்தவர் கண்ணதாசன்.
பாசமலர் பாடல் கேட்டு அழாதவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்.. நிச்சயம் ஒருத்தர் கூட இருக்க முடியாது.. இலக்கியச் சுவை கொட்டும் எத்தனை பாடல்களை வடித்துக் கொடுத்தார் இந்த "முத்தையா".. முத்து முத்தான தனது வரிகளால்.. !
காதலன் காதலியை திருமணம் செய்து கொண்டு வருகிறான். காதல் மனைவியுடன் தனித்திருக்கிறான்.. அப்போது மனைவியைப் பார்த்து கணவன் பாடுகிறான்..
"முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா"
காதல் வாழ்வியலின் பெருமையை எப்படி மணக்க மணக்க கொடுத்துள்ளார் பாருங்கள் கவிஞர். முத்தமிழ் போல நமது உறவு திகழட்டும்.. முக்கனி போல நமது வாழ்வு சுவைக்கட்டும்.. என்பதே இதன் பொருள். இவரைப் போல சொற்களை எடுத்தாண்ட ஆளுமையான கவிஞன் முன்பும் இல்லை.. பின்பும் இல்லை.
இன்னொரு பாடல் வரியைப் பாருங்க
"இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகதானா ..
இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா?
சொல்லில் அடங்காத எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோ
தூக்கம் வராமல் பாக்கி தெரியாமல்
ஏக்கம் அடைந்தாயோ"
என்ன ஒரு காதல் சுவை பாருங்க.. தத்துவத்தை கரைத்துக் கொடுக்கும் இதே கவிஞன்தான்.. காதலையும் பிழிந்து கொடுத்து இதயங்களை இனிக்க வைத்து விட்டுப் போயுள்ளார்.. கவிஞரே, நீங்கள் இல்லாத இந்த கவி உலகை நினைத்துப் பார்க்கக் கூட முடியலை கவிஞரே!
காதல்... கவிஞர்கள் பலரும் விளையாடிய சவுகரியமான களம் தான்.. ஆனால் கவியரசின் வரி பட்டு.. வார்த்தை தொட்டு.. தனித்து நிற்கும் சுவை எப்போதுமே ஸ்பெஷல்தான்.. அதனால்தான் அவரது பாடல்களில் மட்டும் ரசனையும், சுவையும் "சேர்ந்தே நடக்கும் அழகாக".. அதுதான் கண்ணதாசன்!
விளக்கம் தேவையா இதற்கு.. கண் என்றால் சுட்டும் சூரியன்.. நிலவென்றால் அது பெண்.. செவ்வாய் என்றும் கோவைப் பழம்தான்.. கவிஞர்கள் பலரும் விளையாடிய சவுகரியமான களம் தான் இது.. ஆனால் கவியரசின் வரி பட்டு.. வார்த்தை தொட்டு.. தனித்து நிற்கும் சுவை எப்போதுமே ஸ்பெஷல்தான்.. அதனால்தான் அவரது பாடல்களில் மட்டும் ரசனையும், சுவையும் "சேர்ந்தே நடக்கும் அழகாக".. அதுதான் கண்ணதாசன்!
கண்ணதாசன் கவிதைகளையும் பாடல்களையும் கேட்காதவர்கள் அபாக்கியவாதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் கண்ணதாசனின் கவி இன்பத்தை நுகர வேண்டும். பிறப்பின் பெருமையை அப்போது அடைவீர்கள்.. கடல் உள்ளவரை.. தமிழ் உள்ளவரை.. வானம் உள்ளவரை.. இந்த காவியத் தாயின் கலை மகன் .. தமிழின் தலைமகன் புகழ் நீடித்திருக்கும்...
இவன் நிரந்தரமானவன்
என்றும் இவனுக்கு அழிவே இல்லை!