For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடவுள் போட்ட தப்புக்கணக்கு?

Google Oneindia Tamil News

- சுஜாதா ஜெயராமன்

பிறக்கும் முன்னே கடவுள் தண்டித்தார் ...
வளர்ந்த பின் பெற்றவர் தண்டித்தனர் ...
போகும் வழிப் பாதையெல்லாம்
கண்டவர் எல்லாம் தண்டிக்கின்றனர் ..
எங்களைக் குறையுடன் கடவுள் ஏன் பிறப்பித்தான் ?
எங்கள் குறைகளைக் கேட்டால்
கடவுள் எங்கே இருக்கிறார் எனத் தோன்றும் உங்களுக்கே ..
உடல் ஊனமாய் பிறந்திருந்தாலும்
கருணை கொண்டு உதவி செய்வார்கள் பலர் ..
எங்கள் பிறப்பே கோணலாய் போனாலும்
எங்கள் மேல் கருணை கொள்ள இங்கு ஒருவருமில்லை ..

Our Reader's poem

பிறந்து பத்து வருடங்கள் வரை
பெற்றவர்களுக்கு நாங்களும் செல்லப் பிள்ளைகள்தான்
அதன் பின் ஆரம்பிக்கிறது
எங்கள் வாழ் நாள் முழுதும் கேடு காலம் ..
பத்து வயது வர ஆண்பிள்ளையாய் இருந்தேன்
அதன் பின் நான் நானாக இல்லை
ஒரு பெண் பிள்ளை போல் பாவிக்கத் தொடங்கினேன்
உடல் ஒன்று சொல்ல; உள்ளம் ஒன்று நினைக்க ..
என் தோற்றத்துக்கும் செய்கைக்கும்
எந்தவொரு ஒற்றுமையும் இல்லை
என் ஆண்மைக்குள் பெண்மை பூத்ததை
கொஞ்சம் கொஞ்சமாய் உணர ஆரம்பித்தேன்

பெண்களுடன் நடக்க ஆசை;
அவர்கள் போலவே நடக்க ஆசை
சடைப் பின்னல் வளர்க்க ஆசை
சாந்துப் பொட்டு வைக்க ஆசை
புடவை உடுத்த ஆசை;
பூக்கள் அணிய ஆசை
என் ஆண் தன்மை அடியோடு மாற
அடிமேல் அடி வைத்து
நளினமாய் நடந்தேன் பெண்களைப்போல
தோற்றத்தில் ஆணை ஒத்ததால்
விலகி ஓடினர் பெண்கள்
பாவனையில் பெண்களை ஒத்ததால்
விலக்கி ஒதுக்கினர் ஆண்கள்
அப்போதுதான் வாழ்வில் முதல் வலியை உணர்ந்தேன்

உண்மையில் நான் ஆணா பெண்ணா
என்னால் என்னையே உணர முடியவில்லை
பெண்ணின் வலி என்றால் தாயிடம் சொல்லலாம்
ஆணின் அல்லல்கள் என்றால் தந்தையிடம் சொல்லலாம்
நான் ஆணா பெண்ணா என்று உணர முடியாத
அந்த கொடிய வலியை
நான் யாரிடம்தான் சொல்வது
பள்ளியில் நண்பர்கள் இல்லை
வீட்டில் சுற்றங்கள் இருந்தும் இல்லை
உறக்கம் வராத கொடிய இரவுகளை
எத்தனை நாட்கள் கழித்திருக்கிறேன்
என் எதிரிக்கும் வரக்கூடாத வேதனைகள் அவை

வீட்டுக்குள்ளே சுதந்திரமாய் இருந்தாலும்
மனதுக்குள்ளே சிறைப்பறவையாய் வாழ்ந்தேன்
வெளியோருக்குத்தெரியாமல்
மனதிற்குள் உகுத்த கண்ணீர் ஏராளம்
பெட்ரா தாயிடம் கூட சொல்ல முடியாத ஒரே வலி
என்னுடைய வலியாகத்தானிருக்கும்
பெட்ரா தாயிடம் கூட பாசத்தைப்பெற முடியாத இனம்
என் இனமாகத்தானிருக்கும்
நான் ஒரு பேடியான ஆண் என்று
தெரிந்த நாள் முதல் என் பெற்றோருக்கே
நான் வேண்டாத பொருளாகி விட்டேன்
தந்தையை விடுங்கள் - பெற்ற தாய்க்கே என்னைப் பிடிக்கவில்லை

இந்தப் பிள்ளைக்கு எப்படி ஆறுதல் சொல்லலாம் என நினைக்காமல்
இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக வருந்தினாள்
நான் எல்லோருக்கும் அருவருப்பான பொருளாகி விட்டேன்
அதற்கு மேல் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை
தற்கொலை செய்து கொள்ளவும் எனக்கு தைரியமில்லை
வீட்டை விட்டு வெளியே வந்தபின்
என்னைப்போலவே இருப்பவர் கூட்டத்தில் ஒருத்தியாய் ஐக்கியமானேன்
என் தோற்றத்தை முழுமையான பெண்வடிவில் மாற்றிக்கொண்டேன்
ஆனால் இத்துடன் முடியவில்லை என் கண்ணீர் வாழ்க்கை
என் போல் இருக்கும் ஏராளமானோர்
உலகின் பழமையான தொழிலை செய்து
உயிர் பிழைக்கும் அவலத்தைக் கண்டேன்

எனக்கு அத்தொழில் செய்து வாழப் பிடிக்கவில்லை
வேறு எந்த வேலையும் எனக்கு கிடைக்கவில்லை
நான் என் தோழியருடன் விழாக்களில் நடனமாடி
என் வயிற்றைக்கழுவிக்கொண்டிருக்கிறேன்
எனக்கு உடலை விற்று வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை
நான் பெண்ணாக மாறிய ஆண்தான் இல்லை என்று சொல்லவில்லை
ஆனால் - எனக்கும் மற்றவரைப்போல ஆசைகள் ஏக்கங்கள் பல உண்டு
அலுவலகம் சென்று உத்தியோகம் செய்ய ஆசை
அல்லது வியாபாரம் செய்ய ஆசை
இல்லை உணவு கடை வைக்க ஆசை
அதுவும் இல்லை வேறு ஏதாவது ஒரு
கண்ணியமான வேலை செய்து உயிர் பிழைக்க ஆசை

இதை உணராத பலரும் என்னைப்பார்த்து
"வந்துடுச்சிடா ..." என்றும்
"உன் விலை என்னம்மா ?.. என்றும்
கேலி பேசி என் உடைகளைப் பிடித்திழுக்கும்
வக்கிரமான ஆட்களை பார்க்கிறேன்
ஒருத்தர் கூட என்னை மற்ற பெண்களைப்போல
மதிப்பாய் இல்லை மனுஷியாய் கூட பார்த்ததில்லை
ஏளனப்பேச்சுக்களும் எகத்தாளமும்
என்னை ஏன்தான் பிறந்தேனோ என்று எண்ணி எண்ணி
என்னை அனுதினமும் கண்ணீர் விட வைக்கின்றன

நான் இப்படிப் பிறந்ததது என் குற்றமா ?
இப்படிப் பிறந்தும் கண்ணியமாக வாழ நினைப்பது குற்றமா?
என் பிறவி கடவுள் தப்பாகப்போட்ட ஒரு கணக்கு
அடுத்த முறை உங்கள் எதிரே என் போன்ற ஒரு திருநங்கை வந்தால்
எள்ளி நகைக்காதீர்கள், ஐயோ பாவம் என்றும் இரக்கப்படாதீர்கள்
முடிந்தால் எங்களையும் உங்களைப் போலவே ஒரு
சாதாரண சக மனிதராகவே பாருங்கள் - இல்லையேல்
நீங்கள் எங்களை ஆணாகவும் நினைக்க வேண்டாம்
பெண்ணாகவும் பார்க்க வேண்டாம்
கடவுள் படைத்த ஓர் உயிரினம் என்றே நினைத்து
எங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு விட்டு விடுங்கள்..

English summary
Oneindia Tamil reader Sujatha Jayaraman's poem on Transgenders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X