For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன் சக்கர நாற்காலியின் சப்தம் கேட்பது எப்போது?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: புகழ் மாலைகள் மட்டுமல்ல எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகள் என எல்லாவற்றையும் ததும்ப ததும்ப எதிர்கொண்டவர் கருணாநிதி.

அவருக்கு அரசியலை தாண்டி இலக்கியம் பெரிதும் பிடிக்கும். அதிலும் கவிதையென்றால் உயிர். அவரே பெரும் கவிஞர்தான். சங்க கால தமிழில் துவங்கி சாஃப்ட்வேர் காலத்து தமிழ் வரை அத்தனை நிலை தமிழை கொண்டும் அழகு கவிதைகள் படைத்திருக்கிறார்.

Poets remember Karunanidhi

கருணாநிதிக்கு கவிதைகள் பிடிக்கும். கவிஞர்களுக்கோ கருணாநிதையை பிடிக்கும்.

அவரைப் பற்றி! அவர் இருந்த காலத்திலும், இறந்த பின்னரும் சில சூழல்களில் முக்கிய நபர்களால் எழுதப்பட்ட கவிதைகளின் சில வரிகள் இதோ....
கருணாநிதியின் பேரன்பை பெற்ற மகளும், கவிதாயினியுமான கனிமொழி!...

"பேசுவதை நிறுத்திக் கொண்டாய்....
உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது
என்று நினைத்துவிட்டாயா?
பேசிப்பேசி அலுத்துவிட்டதா?
சொல்வதற்கு இருந்ததை எல்லாம்
சொல்லிவிட்டேன் என்றா?
உன் வார்த்தைகளின் எஜமானர்கள்
நாங்கள் என்று உனக்கு தெரியாதா?
கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற
கிழவனை பறித்துச் சென்றது யார்?
உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்...
வண்டியில் இருந்து இறங்கி நீ
வீசும் சினேகப் புன்னகை...
அதற்குப் பின்னால் எப்போதும்
ததும்பும் நகைச்சுவை...
இதற்கெல்லாம் மாற்றாய் எதைத் தருவாய்?
நாளை முதல் சூரியன் உதிக்காது
என்றால் இந்த பூமி எப்படி சுழலும்?
நீ பேசுவதில்லை,
ஆனால் நாங்கள்
உன்னைப் பற்றியே தான்
பேசிக் கொண்டிருக்கிறோம்.
வா!
வழியெங்கும் பூத்துக் கிடக்கிறது
நீ வருவாய் என்ற நம்பிக்கை
நீயின்றி இயங்காது எம் உலகு"
- என்று கையறு நிலையில் கலங்குகிறார்.

கருணாநிதியால் பேச இயலாமல் போன சூழலில் கவிஞர் ஈரோடு தமிழன்பன்....

"உங்களின் சொரசொரப்பான கம்பளிக்குரலில்
உச்சரிப்பாகத்
தவம் கிடக்கின்றன தமிழ்ச்சொற்கள்.
காதுகள் கோடி
காத்துக் கிடக்கின்றன தேன்
தாதுகள் கொட்டும் மலர்வனம்
மவுனம் சாதிப்பதென்ன நியாயம்?
பேசுங்கள் கலைஞரே"
- என்று கண்ணீர் வடிக்கிறார்.

அதே சூழலில் சுப. வீரபாண்டியனோ...

"நீ என்றன் பள்ளிக்கூடம்-
இப்போது ஏன் இந்த மெளனப் பாடம்?
ஏங்கும் தமிழினம் பார்த்திடு தலைவா.
உன் குரல் கேட்க
குவிந்திருக்கின்றன கோடானு கோடி காதுகள்.
எத்தனை கோடிச் சொற்கள் இருந்தென்ன
'உயிரினும் மேலான உடன்பிறப்புகளே' என்னும்
ஒற்றைத் தொடருக்கு ஈடாகுமா அவை?
பேசு தலைவா பேசு.
உன் நாவை அசை - எங்கள்
கண்ணீரை துடை."
- என்று ஏங்குகிறார்.

கவிஞர் மு.மேத்தாவோ...

"வரலாற்று நூல்களில் - ஒரு சில தாள்களில்
வாழ்கின்ற தலைவர் உண்டு!
வரலாறு தானாக....வாழ்க்கையே நூலாக...
வாழ்பவர் கலைஞர் அன்றோ?"
- என்று சிலிர்க்கிறார்.

இப்படி தொகுத்துக் கொண்டே போகலாம்.

கருணாநிதி தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றி, அரசியல் முதல்வராக இல்லாத காலங்களில் எப்போதையும் விட ஒரு நொடியாவது கூடுதலாக இலக்கியங்களில் செலவிடுவார். அதாவது வழக்கமான இருபத்து நான்கு மணி பிளஸ் ஒரு நொடி என இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்! என்பார்கள். இதன் மூலம் முழு நேர அரசியல்வாதியான அவர், தன்னை அதற்கு இணையாக முழு நேர இலக்கியவாதியாகவும் வடிவமைத்துக் கொண்டது புரியும்.

தமிழக முதல்வர்! என்பதை விட தன்னை 'இலக்கிய முதல்வர்' என்று பிறர் விளிப்பதை பெரிதும் விரும்பியவர் கருணாநிதி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

- ஜி.தாமிரா.

English summary
Late DMK president Karunanidhi was a pet for poets during his days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X