• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

உதிரத் துடிக்கும் பூக்களே.. இதை ஒருமுறை படித்துப் பாருங்கள்!

சென்னை: உயிரின் கடைசித் துளி வரை வாழ்ந்து பார்க்க வேண்டும்.. அதற்காகத்தான் பிறந்திருக்கோம் ஒவ்வொருவரும்.. இதை பலர் புரிந்து கொள்வதில்லை.. பாதியிலேயே முடித்துக் கொள்கிறார்கள்.. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதையே மறந்து போய் மரணத்தை தாங்கித் தழுவிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு உயிர் உதிரும்போது அதை வெறும் காய்ந்து போன சருகுகளாகப் பார்க்க மனசு ஒப்புக் கொள்வதில்லை.. வருத்தத்தில் தோய்கிறது.. வேதனையில் வீழ்கிறது.. இதோ இன்னும் ஒரு பூ பாதியிலேயே உதிர்ந்து போயுள்ளது. அத்தனை பேரின் கண்ணீரும் கேள்விக் கனைகளாக மாறி.. ஏன் இப்படிப் பாதியில் போனாய் என்ற வேதனைதான் விசும்பி நிற்கிறது.

 Vairamuthus poem on Suicides

இந்த நேரத்தில் நமக்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. 1991ம் ஆண்டு கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல" என்ற தொகுப்பில் இடம் பெற்ற கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை என்ற தலைப்பிலான கவிதைதான் இது.

இன்றளவும் பொருத்தமாக இருக்கும் கவிதை இது. உதிரத் துடிக்கும் எல்லாப் பூக்களும் இதை ஒரு முறை படித்துப் பார்த்தால் நிச்சயம் வாழத் துடிக்கும்..!

 Vairamuthus poem on Suicides

நீங்களும் படித்துப் பாருங்கள்..

கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை

தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே
சொல்
பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது
முள்முளைத்தது உனக்கு?

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே
நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை
உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒரு துளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்
பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?
வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது
கைநிறையப் பூக்கள்
இப்போதென்ன...
பைநிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?
ஓ!
வாழ்க்கையோடு
உடன்பாடு
மனிதரோடுதான்
முரண்பாடா?
மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி

பூமியைக்
கைவிடப் பார்ப்பவனே
பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா
காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?
தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது
நிறுத்திக் கொண்டதா?
பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?
தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது
நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்

உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திரு
என் பின்னால் வா
அதோ பார்
உயிரில் பாதி
ஒழுகிவிட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக்கிடக்கிறானே கிழவன்! ஏன்?
அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே! ஏன்?
பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே! ஏன்?
மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?
வலையறுந்து நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே! ஏன்?
வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்

தம்பி!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்

நன்றி: கவிப்பேரரசு வைரமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X