For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி

By BBC News தமிழ்
|
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்
BBC
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளையை வளர்ப்பதே வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு வாழ்ந்துவருகிறார் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராணி(48).

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பிற்கு திருமண வாழ்க்கை தடையாக இருக்கும் என்பதால், அவரது முழுகவனமும் காளை ராமுவை வளர்ப்பதில் செலவிட உறுதிகொண்டு திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறுகிறார் செல்வராணி.

''என் தாத்தா முத்துசாமி, அப்பா கனகராசு ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்தார்கள். என் அண்ணன் ,தம்பிகளுக்கு அவர்களின் குடும்பத்தை பார்த்துக்கொள்வதே பெரிய வேலையாக இருந்தது. நானும் திருமணம் முடித்து வேறு வீட்டுக்குப் போய்விட்டால், எங்கள் வீட்டில் ஜல்லிக்கட்டு காளையே வளர்க்கப்படாமல், எங்கள் குடும்பப்பெருமை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் திருமணம் தேவையில்லை என்று முடிவுசெய்தேன்,'' என செல்வராணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குடும்பத்தின் ஒரே பெண்ணாக இருந்தபோதும், திருமணம் வேண்டாம் என்று செல்வராணி முடிவு செய்ததற்காக தற்போதும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். ஆனாலும் தனது முடிவுக்காக ஒருநாளும் வருத்தப்படவில்லை என்கிறார் அவர்.

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்
BBC
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்

தனிப் பெண்ணாக இருக்கும் செல்வராணி, காளையை வளர்ப்பதில் சிரமங்கள் இருந்தாலும், தன்னுடைய ஆர்வம் காரணமாக அனைத்து பிரச்சனைகளையும் கையாள மனத்திடத்துடன் இருப்பதாக கூறுகிறார்.

''காளையை வளர்ப்பது குழந்தை வளர்ப்பதற்குச் சமம். காலையில் தண்ணி, வைக்கோல் கொடுக்கவேண்டும், குளிப்பாட்டுவது, சத்தான உணவு கொடுப்பது என உடல்நலனில் முழுஅக்கறை செலுத்தவேண்டும். மூன்று வேளையும் நல்ல உணவு, செவ்வாய் மற்றும் வெள்ளியன்று பூசை செய்யவேண்டும். காளை நிற்கும் இடம் எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். அதற்கு காலில் புண் ஏற்படக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும்,'' என ராமுவைப் பார்த்துக்கொள்ளும் விதம்பற்றி விரிவாக பேசினார் செல்வராணி.

பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், தனது வாழ்க்கை தேவைகளை குறைத்துக்கொண்டு காளையை வளர்ப்பதில் கவனமாக இருக்கிறார் செல்வராணி.

''நான் உழைப்பதுமட்டும்தான் எனக்கும், ராமுவுக்கும். நான் முழுநாள் வேலைகளுக்குச் சென்றால், ராமுவை சரியாக வளர்க்கமுடியாது என்பதால் வெளிவேலைகளுக்குச் செல்வதில்லை. தேவையான சமயத்தில் அருகில் உள்ள வயல்களில் கூலி வேலைக்குச் சென்று சேர்க்கும் காசை சேர்த்து ராமுவை 18 ஆண்டுகளாக வளர்க்கிறேன். அவ்வப்போது உறவினர் உதவுவார்கள்,'' என்கிறார் செல்வராணி.

எளிமையான ஓட்டுவீட்டில் வசிக்கும் இவருக்கு ஒரே ஆசை, தனது காளை ராமுவுக்கு ஒரு கூரைவேய்ந்த கட்டாந்தரை ஒன்றை கட்டவேண்டும் என்பதுதான்.

''சீக்கிரம் கூரை போட்டு விடுவேன்டா. உனக்கு வெயில் படாது,'' என அவ்வபோது ராமுவுக்கு சமாதனம் செய்கிறார் செல்வராணி.

ஒரு மணிநேரம் அழுத காளை

''2009ல் இருந்து பங்கேற்ற எல்லா போட்டிகளிலும் என் காளை ராமு வெற்றிபெற்று எனக்கு பெருமைதேடி தந்துள்ளது. என் வீட்டில் உள்ள வீட்டுஉபயோகப் பொருட்கள், பட்டுச்சேலை, ஒரு தங்ககாசு போன்றவை ஜல்லிக்கட்டில் ராமு பரிசாக பெற்றவைதான். எனக்கு ஒரு மகன் இருந்தால் செய்யும் உதவிகளை ராமு செய்கிறான். ராமுவால் என் வீட்டுக்கும், என் கிராமத்திற்கும் பெருமை,'' என ராமுவின் கதைகளை பேசினார்.

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்
BBC
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்

முதல்முறை 2009ல் செக்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் ராமு தோற்றபோது ஒரு மணிநேரம் அழுததாகக் கூறும் செல்வராணி, முதல் தோல்வியில் பாடம் கற்றுக்கொண்டதுபோல அடுத்துவந்த போட்டி நடந்த ஆறு ஆண்டுகளிலும் எல்லா போட்டிகளிலும் ராமு வெற்றிபெற்றது என்று கூறுகிறார்.

ராமு பரிசு பெறவேண்டும் என்பது தனது நோக்கம் இல்லை என்றும் போட்டியில் வென்ற வீரியமுள்ள காளையாக ராமு இருக்கவேண்டும் என்பதுதான் அவரது விருப்பம் என்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு முன் விரதம்

ஜல்லிக்கட்டுக்கு ராமு செல்லும்போது, செல்வராணி விரதம் மேற்கொள்கிறார். பொங்கலிட்டு, பூசைசெய்து வண்டியில் ராமுவை ஏற்றி வாடிவாசலுக்கு காளையை கொண்டுசெல்வதும் அவரே.

''ஜல்லிக்கட்டுக்கு ஒருவாரம் இருக்கும்போதே மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எந்த உடல் உபாதைகளும் ராமுக்கு இருக்கக்கூடாது. தூய்மை அவசியம். குழந்தை பிறந்த வீடோ அல்லது யாரவது இறந்துபோனவர்களின் வீட்டுக்கு நான் போகாமல் இருப்பேன். ஜல்லிக்கட்டு போட்டி முடிந்தபிறகுதான் என் விரதம் முடியும்,'' என்கிறார் செல்வராணி.

தொடர் வெற்றியை ராமு பெறுவதால், ராமுவை விலைக்குவாங்க, சிலர் லட்ச ரூபாய்க்கு மேலும் பணம் கொடுப்பதாக சொல்லியபோதும், செல்வராணி ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் அவரது உறவினர் இந்திரா செல்வராஜ்(52).

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்
BBC
ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தவிர்த்த பெண்

''பல முறை செல்வராணியிடம் ராமுவை விலைக்கு கொடுத்துவிடுமாறு கூறிவிட்டோம். ஜல்லிக்கட்டு காளை வளர்க்கவேண்டும் என்பதுதான் தனது வாழ்க்கை என்று உறுதியாக சொல்லிவிட்டார். சிறுவயதில் இருந்தே இவருக்கு இதில்தான் ஆர்வம். இவரை மாற்றமுடியவில்லை, வறுமையிலும் இதுபோல காளையை வளர்ப்பது அதிசயம்தான்,'' என்கிறார் இந்திரா நம்மிடம் தெரிவித்தார்.

குழந்தையும் தெய்வமுமான காளை

ஜல்லிக்கட்டில் ராமு பங்கேற்க மருத்துவப் பரிசோதனைகளை முடிந்துவிட்டது என்று கூறியவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல்கொடுத்த விலங்குநல ஆர்வலர்கள் குற்றஞ்சுமத்தியது போல மதுவோ பிற போதைப்பொருளோ காளைகளுக்கு கொடுக்க காளையை வளர்ப்போர் அனுமதிக்கமாட்டார்கள், உண்மையான உணர்வுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதும், காளையின் மீதும் மதிப்புகொண்டவர்கள் விதிகளை மீறமாட்டார்கள் என்கிறார்.

''எங்கள் வீட்டின் செல்வமாக, குழந்தையாக, கடவுளாக ஜல்லிக்கட்டு காளையை வணங்குகிறோம். குடும்பத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் காளையைப் பார்க்கக் கூட நாங்கள் அனுமதிப்பதில்லை. மது, போதை பயன்படுத்துபவர்கள் அருகில் நின்றாலே எங்கள் ராமு தள்ளிவிடப் பார்க்கும். என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவேண்டும், விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதை தவிர வேறெந்த சிந்தனையும் எனக்கு இல்லை,'' என்கிறார் செல்வராணி.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பிற்கு திருமண வாழ்க்கை தடையாக இருக்கும் என்பதால், அவரது முழுகவனமும் காளை ராமுவை வளர்ப்பதில் செலவிட உறுதிகொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் செல்வராணி.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X