For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டடி கொட்டடி குருவக்கா...

By Staff
Google Oneindia Tamil News

"எங்கடீ ஒம்புருசன்?"

"தெரியாது சாமீ ..! கைக்குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது. போலீஸ் ஸ்டேசன் வாசலில் அருந்ததியர் காலனி ஆண்களும்,பெண்களும் தேங்கிக் கிடந்தனர். வெயில் நெரு நெருவென்றிருந்தது.

"புருசன் போன எடந்தான் தெரியல. அவன் குடுத்த பணத்தை எங்க வச்சிருக்கிற? "

"ஏஞ்சாமீ .. இப்பிடி அடிதெண்டமா பேசுறீக? ஆன நேரத்துக்கு அன்னந் தண்ணி கொள்ளாம, கட்டின பொண்ாட்டியக் கூடகண்ணெடுத்துப் பாராம, ஊனு, ஒறக்கம் மறந்து எம் புருசன் ஈசலாப் பாடுபட்டிச்சே .. அதுக்கா இப்படி பழி போடுறீக?

ரெண்டு நாளா வெங்காம்பை சுவைத்து வாய் ஓய்ந்து போய், மடிக்குள் கிடந்து வீர் வீரென அலறிக் கொண்டிருந்த பச்ச மண்ணைகுலுக்கிச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் குருவக்கா.

புருசன் குருவன் போயி மூணு நாளாச்சு. எங்கே போச்சுன்னே தெரியல. ரெண்டு நாளா பல்லுல பச்சத் தண்ணி கூடப் படலே.

"சாமீ ..! நாங்க ஏழைக சாமீ ..! எங்க பொண்ணு புள்ளைகள போலீடேசன்ல வச்சு இம்ச பண்றது அந்த நெறகுளத்தாளுக்கேபொறுக்காது சாமீ ..! " தண்ணியில் உமையணன் தடுமாறினான்.

"ரெண்டு பொழுதா போலீஸ்டேசன்ல இருக்கிற குருவக்காவக் கெடுத்திருப்பான்களோ .. புலம்பியபடி இருந்த பெண்களைபோங்க கழுதங்களா என விரட்டியும் மண்டிக் கொண்டு வந்தனர். குருவக்கா சின்ன வயசுப் புள்ள. அடிபட்டுக் கிடக்கும்குஞ்சுக்காக கரைந்து கொண்டே காக்கைகள் பறப்பதைப் போல, போலீஸ் ஸ்டேசனைச் சுற்றி சுற்றி வந்தனர்.

ஸ்டேசனைக் கூட்டிப் பெருக்கி, கக்கூஸ் கழுவி தண்ணி எடுத்து வைக்கிற காளி இன்றைக்குக் காலையில் வரவில்லை.

இன்னைக்கு சாயங்காலம் ராணி டாக்கீஸில் சிவாசி கணேசன், சிரிப்பிரியா, தேங்காய் சீனிவாசன் நடித்த ஜிரஞ்ஜீவி. எல்லோரும்பார்த்து மல்லாருங்கள் - சினிமா விளம்பரம் செய்ய சூரி போகவில்லை.

செருப்பு தைக்க யாரும் போகவில்லை.

பஞ்சாயத்து போர்டு தோட்டிகள் தெருக்கூட்டப் போகவில்லை.

"சாதி சனத்தப் போல எம்புள்ளயும் பிஞ்ச செருப்பு தச்சோ, பொணம் விழுந்தோ .. கொட்டடுச்சோ பொழச்சிருந்தா, இந்தக் கெதிவருமா? நான் பெத்த பிள்ளைய நாலெழுத்து படிக்க வச்சதுனால வந்த வெனயா இது? " குருவின் தாயார் குமைந்து குமைந்துமூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்.

குருவன் நாலெழுத்துப் படித்திருந்தான். சினிமாக் கொட்டகைக்காரருக்கு எல்லாம் வாய்க் கணக்கு மனக்கணக்குதான். சினிமாக்கொட்டகை, பால் பண்ணை, ஏழெட்டு ஊர்களில் ரேசன் கடைகள், சுத்துப்பட்டியெல்லாம் கொடுக்கல் வாங்கல். எல்லாக்கணக்கும் குருவன் பொறுப்புதான்.

அதிகாலையில் பால் பண்ணையில் ஆரம்பித்து இரவு ரெண்டாம் ஆட்டம் சினிமா விடுற வரை ரொக்கம் போட்டு வாங்கியஇயந்திரமாய் திரிவான். மதியம் மட்டும் காலனிக்கு ஓடி வந்து ஈயத்தட்டில் வாய் வைத்து உறிஞ்சி வயிற்றை நிரப்பிக் கொள்வான்.

"பொண்டாட்டி, புள்ள மொகம் பார்க்கக் கூட நேரமில்லாம .. சீ ..! இதென்னய்யா பொழப்பு ?..." மனைவி குருவக்கா திட்டுவதைஇந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு ஒருச்சாண் வீட்டுக்குள் ஊர்ந்து திரியும் பச்சை மண்ணை அள்ளித் தாறுமாறாககொஞ்சிப் போட்டு விட்டு, ஓடி வந்து சினிமாக் கொட்டகைக்காரர் காலடியில் அமர்ந்து, அவர் சொல்லச் சொல்ல நெளிவுசுளிவோடு கணக்கு எழுதனும்.

ஏழெட்டு ஊர்களில் ஏதாவதொரு ரேசன் கடைக்குப் போய், திறந்து, ஊர்ச்சனங்களுக்கு அரிசி, மண்ணெண்ணை வாடை காட்டி,வழக்காடிச் சமாளிச்சு சைக்கிளில் ஏறித் தப்பி வரணும்.

கொல்லையில் வளரும் மா, தென்னங்கன்றுகளை குளிர, குளிர குளிப்பாட்டி, சீக்கிரம் சீக்கிரமாக தோப்பு ஆக்கணும்.

மாலைக் கறவைக்கு பால் பண்ணையில் மாடுகள் வந்து அலறும். கறந்து அளந்து டீக்கடைகளுக்கு அனுப்பி விட்டு, அலசி,கழுவிப் போடணும்.

பொழுது மயங்க விடாமல், விநாயகனே! வல்வினையை வேரறுக்க வல்லாய் ... என முதல் ஆட்டம் சினிமாவுக்கு சீர்காழிகோவிந்தராஜன் அழைத்ததும் ஓடணும். ரெண்டாம் ஆட்டம் சினிமா விட்டதும் கணக்கு முடித்து, கல்லாக் கட்டி விட்டு, சின்னக்கோழித் தூக்கந்தான் தூங்கி இருப்பான். பண்ணைக்கு மாடுகள் வந்து விடும். மாசச் சம்பளம் முந்நூறு.

கஷ்டத்தை சொல்லி வேலையை விட்டு நின்று கொள்ள தைரியமில்லை.

மனைவி குருவக்காவிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகி விட்டான்.

சினிமாக் கொட்டகைக்காரர் ஆடிப் போய் விட்டார். மூன்று நாளா எந்தக் கணக்கும் எழுதல. யாரை வச்சு எழுதறது? சினிமாக்கொட்டகை, ரேசன் கடை, பால் பண்ணை எதிலயும் நெசக் கணக்கு எழுத முடியாதே, எப்படியும் குருவனைக் கொண்டுவந்திறணும்.

ஐயாயிரத்தோடு தலைமறைவாகி விட்டதாகப் புகார் கொடுத்தார். போலீஸுக்கு உண்மை தெரியுது. நியாயத்தைச் சொன்னாவெள்ளை வேட்டித் தொந்தரவு. ஊருக்கு ஏத்தபடி உடுப்பை மாட்டிக்கிற வேண்டியதுதான். அதிலேயும் சினிமாக்கொட்டகைக்காரர் வலுத்த பார்ட்டி, எதுக்கு வம்பு?

"ஏய் .. கருப்பா! அய்யா கூப்பிடுறாரு!"

கருப்பன் முன்னாள் பஞ்சாயத்து போர்டு மெம்பர். தோளில் கிடந்த துண்டு நழுவ கருப்பன் வந்தான்.

"சேவிக்கிறேன் சாமீ!"

"என்னப்பா .. என்ன முடிவு பண்ணீங்க? "

"முடிவு .. சாமிதான் சொல்லணும். எங்க சனம் ஏழைப்பட்டதுக. தெருக்கூட்டி, செருப்பு தச்சு, கொட்டடுச்சாத்தான் கஞ்சி .. சனச்செருக்கோ, பணச் செருக்கோ இல்லாத அநாதைக. எசமான்தான் ஞாயஞ் சொல்லணும்."

காக்கி உடுப்புக்குள் ரோமக் கால்கள் சிலிர்த்தாலும் தோரணையை விட்டுக் கொடுக்காமல், "என்ன செய்வியோ தெரியாது. நாளைஒரு பொழுதுக்குள்ளே குருவனைக் கொண்டு வரலேன்னா .. அவன் பொண்டாட்டிய ரிமாண்டு பண்ணிக் கோர்ட்டுக்குஅனுப்பிருவேன். "

"எசமான்! ஐயாயிரத்தை திருடுற அளவுக்கு தயிரியம் ..? " இழுத்தான்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது.. குருவனைக் கொண்டு வா. அவன் வந்து சொல்லட்டும்" பூட்ஸ் லாடத்தைத் தேய்த்தார்.

தலைக்கு மேல் கை கூப்பியபடி கருப்பன் பின் வாங்கினான்.

மதியம் மூணு மணிவாக்கில் போலீஸ் ஸ்டேசன் வாசலில் யாருமில்லை. உள்ளே சப் இன்ஸ்பெக்டருக்கு சினிமாக்கொட்டகைக்காரர் யோசனை சொல்லிக் கொண்டிருந்தார். கண்ணியில் பிடிபட்டு கடை வீதிக்கு வந்த காட்டு முயலைப் போல்,வேப்பமரத்தடியில் குருவக்கா உடம்பு முழுக்க இழுத்து மூடிக் கொண்டு குறுகிக் கிடந்தாள்.

போலீஸ் ஸ்டேசனுக்கும், பஸ் நிலையத்துக்கும் இடையில் தடுப்புச் சுவர் கூட இல்லை.

குருவக்காவின் மடியில் பிள்ளை கிடந்தது. அப்படியே குருவனின் ஜாடை.

"இந்த மனுசன் இந்நேரம் எந்த ஊர்லே, எந்த தேசத்துல அநாதையா அலையுதோ, ஊரு விட்டு ஊரு போனா, உக்கார வச்சு சோறுபோட எந்தச் சாதி சனம் நமக்கிருக்கு? " சேலைத் தலைப்புக்குள் அழுதாள்.

இரண்டு நாளாய் எல்லா உறவின் முறையிலும் போய் கருப்பன் மன்றாடிப் பார்த்து விட்டான்.

எல்லோரும் தலையைக் கழற்றிக் கொண்டு விட்டார்கள்.

"ஏட்டய்யா ...! அதென்ன கொட்டுச் சத்தம்?"

"தெரியலேய்யா .. "

குருவக்காவுக்கும், கொட்டுச் சத்தம் கேட்டது. பஸ் நிலையத்தைத் தாண்டி ஊருக்கு வெளியே அருந்ததியர் காலனிப் பக்கம்தான்கேட்டது, இழவு கொட்டு.

நம்ம வீட்டுப் பக்கம் கேக்குதே!

கொட்டுச் சத்தம் உக்கிரமாய் கேட்டது.

"யாரு செத்தது?"

வடக்கே இருந்து வந்த பஸ்ஸிலிருந்து கல்லூரணிச் செட்டும், பரளச்சி செட்டும் வந்திறங்கின. கூடவே காளியும் இறங்கினான்.கல்லூரணிச் செட்டும், பரளச்சிச் செட்டும் சுற்று வட்டாரத்தில் பேர் போன செட்டுகள்.

பஸ்ஸை விட்டு இறங்கியதுமே ஆரம்பித்து விட்டார்கள்.

காளி ஓட்டம் நடையுமாக காலனிக்குக் கிளம்பினான்.

பஸ் ஸ்டாண்டே புழுதி கிளம்பிக் கொண்டிருந்தது.

உள்ளூர் கொட்டுக்காரர்கள் கருப்பன் தலைமையில் உருட்டிக் கொண்டு வந்து பஸ் நிலையத்தில் சேர்ந்து கொண்டார்கள்.பெண்களுக்கு நிலை கொள்ளவில்லை.

"ம் .. அடி... ம்"

உறுமியும், கொட்டும் பஸ் நிலையத்தைத் தகர்த்துக் கொண்டிருந்தன. எழவு வீட்டில் அடிக்கிற அடி.

"என்ன கொட்டுச் சத்தம்! யாரு செத்தது?" ஊரே பஸ் நிலையத்தில் கூடி விட்டது.

நேர் பார்வையில் போலீஸ் ஸ்டேசன்.

கொட்டுக்காரர்கள் யாரையும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. தோலை உரித்துக் கொண்டிருந்தார்கள்.

மூன்று ஊர்க் கொட்டுச் சத்தம் பஸ் நிலையச் சுவர்களை "வந்து பார்" என்றது!

ஊர் மரியாதை காரேறிக் கொண்டிருந்தது.

தார்ப் பாய்ச்சிக் கட்டிய வேட்டி, கை வைத்த வாயல் பனியன், உடம்பெல்லாம் வியர்வை, காலில் சலங்கை கட்டிக் கொண்டுபாய்ச்சல் காட்டினார்கள்.

"பொம்பளப் புள்ளைய போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்தது தப்புத்தான். அதுக்காக .. இந்த ஏழைப் பயலுக, ஊரைக் கூட்டிகொட்டடுச்சு கேவலப்படுத்துனா .. என்ன திமிரு ! போலீஸ்காரன் லத்திக் கம்புட்டே போடப் போறான் பாரு" ஓரத்தில் நின்ற ஒருபெருசுக்குப் பொறுக்கவில்லை.

பொழுது இறங்க இறங்க கொட்டுச் சத்தம் கூடிக் கொண்டே போனது.

"ம் ..அடி.. ம்"

"ஏய் கருப்பா! "

கொட்டுச் சத்தத்தில் கேட்கவில்லை.

போலீஸ் விசில் கேட்டது. கருப்பன் திரும்பினான்.

போலீஸ் ஸ்டேசன் விளம்பில் சப் இன்ஸ்பெக்டர். அருகில் கைக் குழந்தையோடு குருவக்கா.

சினிமாக் கொட்டகைக்காரர் ஸ்டேசனை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்.

கருப்பன் கொட்டுக்காரர்களைப் பார்த்துக் கை உயர்த்தினான். கொட்டுச் சத்தம் நின்றது.

"ஏய் கருப்பா! இந்தாப்பா .. ஒங்க பொம்பளயாளை கூட்டிக்கிட்டுப் போய்ச் சேருங்கப்பா , மானத்தை வாங்காதீங்க .. "

குருவக்கா கையில் பச்ச மண்ணை ஏந்தியபடி ..

"ஹேய் ... ய்..." குதித்தார்கள். ஆண்களே குலவையிட்டார்கள். கொட்டுச் சத்தம் அடிமாறிக் கேட்டது.

நிறைகுளத்தம்மன் கோவில் திருவிழா எருது கட்டில், காளை பிடிபட்டதும் அடிக்கும் அடி.

கொட்டுச் சத்தத்துக்கும் குலவைச் சத்தத்துக்கும் இடையே குருவக்காவின் கையில் இருந்த பச்ச மண்ணு சிலிர்த்துச் சிலிர்த்துப்பார்த்துக் கொண்டிருந்தது.

வேல. ராமமூர்த்தி :- "பேரன்பும், பெருங்கோபம் கொண்டவை என் எழுத்துக்கள்" என்று தனது படைப்புகளுக்கான அறிமுகப்பிரகடனம் செய்திருக்கும் இவர் கருவக்காட்ட இலக்கியத்தின் பிதாமகர். ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் பாதிப்புக்குள்ளாகி நைந்துபோயிருக்கும் இனங்களே (பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்கள்) தமக்குள்ள பகைமைகளை வளர்த்துக் கொண்டு மேலும்நசிந்து போகும் அவலங்கண்டு கோபாவேசங் காட்டும் வேல. ராமமூர்த்தி, மதுரை அஞ்சல்துறை பயிற்சி மையத்தில்கண்காணிப்பாளராக இருக்கிறார். இவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பு புதுமைப்பித்தன் பதிப்பக வெளியீடாக மலர்ந்துராமநாதபுரத்துச் சீமையின் மணத்தைத் தமிழுலகெல்லாம் பரப்பி நிற்கிறது.

நன்றி: கதாயுதங்கள்.

ஆசிரியர்: பேராசிரியர் இராஜ. முத்திருளாண்டி.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X