• search
keyboard_backspace

‘சார்பட்டா பரம்பரை’ பேசுகிற வெவ்வேறு நுண் அரசியல்கள்… நேரடி கட்சி அரசியல்... அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

முன்பு திரைப்படங்களிலும் சிறுகதைகளிலும் சல்பேட்டா என்ற சொல் வந்திருக்கிறது. சல்பேட்டா ஆறுமுகம் என்ற ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கூட நினைவிருக்கிறது. அந்த சல்பேட்டா என்ற சொல் எதைக் குறிக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாமல், அல்லது ஏதோவொரு குழுவையோ செயல்முறையையோ குறிக்கிறது என்று அரைகுறையாகப் புரிந்துகொண்டு கடக்க வேண்டியிருக்கிறது. தற்போது ஓடிடி மேடையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற, பலமுனை விவாதப் பொருளாகவும் மாறியுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், இத்தகைய சொல்லாடல்களின் மூலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக வடசென்னையில் அரைநூற்றாண்டுக்கு முன்பு வரையில் உடற்கட்டு, மோதும் வலிமை, சண்டைத் திறன் இவற்றின் அடிப்படையில் செல்வாக்குச் செலுத்திய குத்துச் சண்டைக் குழுக்கள் இத்தகைய பெயர்களில் இருந்தது பற்றித் தெரியவருகிறது. படத்தின் செய்திகளை ஏற்கிறார்களோ இல்லையோ பலரும் ஆர்வத்தோடு இப்படிப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். மூத்த அரசியல் தலைவர்கள் முதல், இளம் களச்செயல்பாட்டாளர்கள் வரையில் தங்களுடைய சொந்த அவதானிப்புகளிலிருந்து பகிர்கிறார்கள். இந்தப் பின்னணிகளை மறைக்கலாமா என்ற நியாயமான ஆதங்கத்தோடும், இப்படிப்பட்ட நிகழ்வுப்போக்குகளும் இருந்தன என்று தெரிவிக்கும் அக்கறையான தகவல்களோடும் அந்தப் பதிவுகள் வருகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் களத்தில் இறங்கினால், ஒட்டுமொத்த வடசென்னையைப் போலவே இத்தனை காலம் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டு இப்போது ஒவ்வொன்றாகக் கவனத்திற்கு வரத் தொடங்கியிருப்பவை போன்ற பல புதையல்கள் கிடைக்கும்.

கண்ணோட்ட அரசியல்

படத்தில் விடுபட்ட தகவல்கள் பற்றிப் பேசுகிற சிலர், இயக்குநர் பா.ரஞ்சித் தனது அரசியல் - சமூகக் கண்ணோட்டத்திற்கு ஏற்ப வரலாற்றிலிருந்து எடுத்துக்கொள்வது சரிதானா என்று கேட்கிறார்கள். ஆனால், வரலாற்று நிகழ்வுகளிலிருந்தும் வாழ்க்கைக் கதைகளிலிருந்தும் தமது அரசியல் - சமூகக் கண்ணோட்டங்களுக்கு ஏற்ப ஒரு புதிய கதையைப் புனைவது படைப்பாளிகளின் அடிப்படையான சுதந்திரம். ஆவணப்படங்கள் தயாரிக்கிறவர்கள் கூட தங்களின் சித்தாந்தங்களுக்கு ஏற்பவே தகவல்களைத் தொகுத்தளிக்கிறார்கள். அப்படித் தொகுத்தளித்திருப்பதில் உண்மை இருக்கிறதா இல்லையா, அந்த நோக்கம் சரியானதா, தவறானதா என்று வாதிடலாமேயன்றி, அந்தச் சித்தாந்தச் சார்புக்கான உரிமையைக் கேள்வி கேட்பதற்கில்லை. ஒரு திரைப்படமோ புத்தகமோ முன்வைக்கிற கருத்தியலுக்கு நேர்மாறான சிந்தனையுடைய இன்னொரு படைப்பாளி, அவ்வாறு மாறுபடுகிற தனது கண்ணோட்டத்திற்கு ஏற்ப ஒரு படத்தைத்தையோ புத்தகத்தையோ உருவாக்க முயல்வாரானால், அதற்கான படைப்புச் சுதந்திரம் அவருக்கும் முழுமையாக இருக்கிறது.

எல்லோருக்கும் பொதுவான திரைப்படத்தில் குறிப்பிட்ட சாதியைப் பற்றிப் பேசுவது தவறு என்ற கோணத்திலும் விமர்சனங்கள் வருகின்றன. தனது முந்தைய படங்களைப் போல இல்லாமல் ரஞ்சித் இந்தப் படத்தைப் பொதுவானதாக, சாதிய அரசியல் பேசாமல் உருவாக்கியிருக்கிறார் என்று ஒரு பகுதியினர் பாராட்டுகிறார்கள். சில படங்கள் கதை நாயகனின் சாதிப்பெயரோடு வருகிறபோது மௌனமாக இருப்பவர்கள், படத்தில் தலித் மக்களின் பிரச்சினைகள் இடம்பெறுகிறபோது மட்டும் இவ்வாறு "பொது சினிமா" பற்றிய அக்கறையை வெளிப்படுத்துவதன் நுட்பமான சாதிய அரசியல் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

Article on Sarpatta Parambarai Films Politics

நுண்ணரசியல்

ஆனால், இந்தப் படமும் சாதிய அரசியலைப் பேசவே செய்கிறது. நேரடியாகவோ, வெளிப்படையாகவோ இல்லாமல் நுட்பமாக உணர்த்தும் வகையில் பேசுகிறது. குத்துச்சண்டைக் களத்தில் தனது வாத்தியாருக்காக வாதாடும் கதாநாயகன் கபிலனைப் பார்த்து ஒருவன் "நீயெல்லாம் இங்கே வந்து நிற்கவே கூடாது," என்று இளக்காரமாகக் கூறுவது, குடியிருப்பு நடுவில் புத்தர் சிலை இருப்பது, கபிலன் வேலை செய்கிற இடத்தில் அம்பேத்கர் படத்துடன் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது என்று அந்த நுட்பம் பொதிந்திருக்கிறது. இந்த நுட்பத்தோடு அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் பார்க்கத்தக்க "பொதுவான" படமாக உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு.

ஏன், கபிலனின் அம்மா பாக்கியம், மனைவி மாரியம்மாள், மருமகள் லட்சுமி, குடியிருப்பின் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்து மிஸ்ஸியம்மா ஆகியோர் பேசுவதில் சுயமரியாதை, முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளிட்ட பெண்ணுரிமை அரசியல் இருக்கிறது. நிறைய இடங்கள் தரப்படவில்லை என்றாலும் நிறைவான இடங்கள் அந்தப் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது, ரஞ்சித்தின் முந்தைய படங்களது நீட்சியே.

சார்பட்டா பரம்பரை, இடியாப்பப் பரம்பரை என்று ஒரு தற்காப்புக் கலைப் பயிற்சிக்கான பெருமிதங்கள் வறட்டு மானப்பிரச்சினையாக மாற்றப்பட்டதைப் படம் உணர்த்துகிறது. முகங்களில் ரத்தம் கொப்பளிக்க வைப்பதிலும், அடித்து வீழ்த்துவதிலுமே பரம்பரைப் பெருமை இருப்பதாக உசுப்பேற்றி உசுப்பேற்றி உடற்திறனாளர்களை அடியாட்கள் போலாக்கப்பட்டதைச் சித்தரிப்பது, வன்முறைக் கும்பல்கள் வளர்க்கப்பட்டதன் பின்புலங்களில் ஒன்றைப் பேசுகிற நுண்ணரசியலே. வடசென்னையின் அரசியல் களத்தில் நீண்டகாலச் செயல்பாட்டு முத்திரை பதித்தவரான மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வே. மீனாட்சிசுந்தரம், அற்புதமான தற்காப்புக் கலைக் குழுக்களாக வளர்ந்திருக்க வேண்டியவர்கள் கும்பல் அரசியலுக்காக இழுக்கப்பட்டதால் படிப்படியாக இந்தப் பரம்பரைகளின் குத்துச்சண்டைப் பயிற்சிமுறைகள் முக்கியத்துவம் இழந்துபோனதாகத் தெரிவிக்கிறார். பின்னாட்களில், முறையான பாக்ஸிங் குழுக்கள் உருவாகி முறையான போட்டிகள் நடத்தப்படுவது பற்றிய தகவல்களும் உள்ளன.

நேரடி அரசியல்

இப்படியான நுண்ணரசியல் வெளிப்பாடுகள் மட்டுமல்லாமல், நேரடியான கட்சி அரசியலையும் இந்தப் படம் காட்டுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் அரை நூற்றாண்டு வயதை அடையப்போகிற அவசர நிலை ஆட்சியின் பின்னணியோடு, வட சென்னையின் திமுக-அதிமுக அரசியலின் ஒரு பக்கம் காட்டப்படுகிறது.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹமது மூலமாக அவசர நிலை ஆட்சியை அறிவித்தது வரலாறு. 1975-1976 ஆண்டுகளின் அந்த 21 மாத அவசரநிலை ஆட்சி அதிகார பீடத்தால் ஜனநாயக நாட்டின் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டே ஜனநாயகத்தை எப்படி எளிதாகத் தூக்கி எறிய முடியும் என்ற மோசமான அரசியலுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தில் ஜனநாயக சக்திகளுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருந்தது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. படத்தில் சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன், திமுக-வின் உள்ளூர்த்தலைவர். அவசரநிலை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மேடையில் பேசுகிறார். எதிரணியான இடியாப்பப் பரம்பரையின் வாத்தியார் துரைக்கண்ணு அதிமுக தலைவராகக் காட்டப்படவில்லை என்றாலும், உடனிருப்போர் சிலர் அந்தக் கட்சியினர்தான்.

திமுக அரசு கலைக்கப்படுகிறது. ரங்கன் வாத்தியார் உள்பட பலர் கைது செய்யப்படுகிறார்கள். எம்ஜிஆர் கை ஓங்கத் தொடங்குகிறது, சிலர் தங்களுக்குக் கிட்டத்தட்ட அடியாட்களாக வேலை செய்வதற்கு ஆள்பிடிக்கிற வேலைகளில் இறங்குகிறார்கள். குத்துச் சண்டை மோதல் களம் இதற்கான வேட்டைக் காடாகவும் மாற்றப்படுகிறது. அதிகாரத் தொடர்பின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற சிலர் கள்ளச்சாராயத் தயாரிப்பில் இறங்குகிறார்கள். அதையொட்டி ரவுடிக் கும்பல்கள் வளர்த்துவிடப்படுகின்றன. இந்தப் போக்குகளில் இழுக்கப்படுகிற சிலர் தங்கள் சொந்தத் திறன்களையும் அடையாளங்களையும் இழக்கிறார்கள்.

இத்தகைய அரசியல் பதிவுகளுடன், திருமண இணையருக்குப் பரிசாக அம்பேத்கர் படத்துடன் பெரியார், கலைஞர் படங்களும் வழங்கப்படுவதிலும் ஒரு நுட்பமான செய்தி. இன்றைய அரசியல்-சமூக நிலைமைகளில், தமிழகத்தின் ஜனநாயக, முற்போக்குப் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது, அதற்கு இப்படிப்பட்ட நுட்பச் செய்தி துணையாக அமைகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.ஜெ

எம்ஜிஆரை இழுப்பதன் அரசியல்

ஆனால் இது எம்ஜிஆரை அவதூறு செய்கிற படம் என்று அதிமுக தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு திரையரங்க வாயிலில் உயர்த்திக் கட்டப்படும் எம்ஜிஆர் கட்டவுட் அவருடைய செல்வாக்கு உயரத் தொடங்கியதன் குறியீடுதான். அவர் அன்று தொடங்கிய பாத யாத்திரை சுவரொட்டி அவருடைய அரசியல் பயணம் முன்னேறத் தொடங்கியதன் குறியீடுதான். அவரைப் போல் உடையணிந்து நடமாடி, கபிலனுக்கு மாலை போட்டு இழுக்கப் பார்க்கிற மாஞ்சா கண்ணன் உள்ளிட்டோர் அப்போது எம்ஜிஆர் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயநலத்தை நிறைவேற்றிக்கொள்ளத் தொடங்கியதன் குறியீடுதான். இந்தக் குறியீடுகள் இவ்வாறு எம்ஜிஆர் புகழைத் தங்களுக்கான ஆதாயமாக்கிக் கொள்ள முயன்றவர்களைத்தான் சுட்டுகின்றனவேயன்றி, படத்தில் நேரடியாக எம்ஜிஆரைத் தாக்குகிற காட்சியமைப்போ வசனமோ இல்லை. அப்படியிருக்க, எம்ஜிஆரை அவதூறு செய்வதாகக் கூறுவது, அதிமுக தொண்டர்கள் இந்தப் படத்தை ஓடிடி-யில் தரவிறக்கம் செய்ய விடாமல் தடுக்கிற உத்தியா? அது எடுபடுமா?

ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு பற்றிக் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்ளுக்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், படத்திலிருந்து வெட்டப்பட்ட காட்சிகளில், ஜெயக்குமாரே சித்தரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்று கூறியிருக்கிறார். இதுதான் முழுப்படைப்பு என்று நம் கையில் தரப்படுவது எதுவோ அதிலிருந்துதான் எடுத்துக்காட்ட வேண்டுமேயன்றி, அதிகாரப்பூர்வமாகத் தெரியாத, நமக்குத் தரப்படாத, மக்கள் பார்க்கவியலாத காட்சிகளைச் சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கதல்ல.

இது திமுக சார்புப் படம் என்று அவர்களும் ஒரேயடியாகக் கொண்டாட வேண்டியதில்லை. சிறையிலிருந்து விடுதலையாகும் ரங்கனை வரவேற்கக் கட்சிக்காரர்கள் மிகக் குறைவாகவே வருகிறார்கள். வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகும் வேறொரு தலைவரை வரவேற்க மற்றவர்கள் போயிருக்கிறார்கள் என்று வந்தவர்களில் ஒருவர் தெரிவிக்கிறார். இது, அப்போது நிலவிய சாதிப்பார்வையை உணர்த்துகிற நுட்பம்தான் என்றும் படத்திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். ரங்கன் வாத்தியாரே, வரவேற்க வந்த கட்சிக்காரர் அணிவித்த மாலையைக் கழற்றிக் கொடுக்கிறாரே! திராவிட இயக்கம் குறித்த ரஞ்சித்தின் விமர்சனப் பார்வையோடு கலந்த சித்தரிப்புதான் இது என்றும் எடுத்துக்கொள்ள முடியும். இத்தகைய கருத்துகளோடு ஒருவர் உடன்படலாம், முரண்படலாம். ஆனால் தமிழ் சினிமாவில் அறவே இல்லாத, அல்லது மிக அரிதாகவும் மேலோட்டமாகவுமே இருந்துவந்திருக்கிற நேரடிக் கட்சி அரசியல் வெளிப்பாடு இந்தப் படத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை. கட்சிகளை புனைப்பெயர்களில் காட்டுவதுதான் இதுவரை நடந்திருக்கிறது.

அந்த வெளிப்பாட்டில் அவசர நிலை ஆட்சியைக் கொண்டுவந்த காங்கிரசை, அதை எதிர்த்த திமுக-வை, ஆதரித்த அதிமுக-வை அடையாளப்படுத்துகிற படம், அதே காலத்தில் அவசரநிலை ஆட்சியைத் துணிவுடன் எதிர்த்து நின்ற, சிறை சென்ற மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களின் சிவப்புத் துண்டையாவது அடையாளப்படுத்தியிருக்கலாமே என்ற ஆதங்கம் எனக்கிருக்கிறது. ஆயினும், ஒரு படைப்பில் என்ன கொடுக்கப்படுகிறதோ அதைத்தான் விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டுமேயன்றி, கொடுக்கப்படாத ஒன்றைப் பற்றியே விரிவாக விமர்சித்துக்கொண்டிருப்பதில் பொருளில்லை. இதுவொரு திறனாய்வு நெறி.

எப்படியோ, தமிழ் சினிமாவில் தலித் மக்களின் அரசியலைப் பேசுவதற்கு ஒரு முன்பாதை அமைத்தவரான ரஞ்சித், இனி நேரடிக் கட்சி அரசியலைப் பேசுவதற்கான முதல் பாதையையும் அமைத்திருக்கிறார். படைப்பாளிகள் நிறையப் பேர் துணிந்து இந்தப் பாதைகளில் நடக்கட்டும். அது புதிய பாதைகளை அமைக்கும், மாற்றங்களை நிகழ்த்தும்.

English summary
Here is an article on Sarpatta Parambarai Film's Politics has written by Writer Kumaresan.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In