For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் ரத்து - தேர் முன்பு நின்று தேவாரம் பாடிய சிவனடியார்கள்

கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறாததால் தேர் முன்பு நின்று சிவனடியார்கள் தேவாரம் பாடினார்கள்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறாததால் தேர் முன்பு நின்று சிவனடியார்கள் தேவாரம் பாடினார்கள். நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஊர் கூடி தேர் இழுப்பது சிறப்பு. அலங்கரிக்கப்பட்ட தேரில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி வீதி உலா வரும் போது இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கையெடுத்து கும்பிடுவார்கள். கொரோனா காலத்தில் கோவில் திருவிழாக்கள் ஆலயங்களுக்குள்ளேயே நடைபெறுவதால் மக்கள் அதிகம் கூடும் தேரோட்டம் போன்ற விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 9ஆம் திருவிழா நாளன்று தேரோட்டம் நடைபெற வேண்டும். கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறவில்லை. இருந்தாலும் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடைபெறாததால் தேர் முன்பு நின்று சிவனடியார்கள் தேவாரம் பாடினார்கள்.

Aani Therottam canceled at Nellaiyappar temple - Sivanadiyars singing Thevaram

ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சுவாமி நெல்லையப்பர் தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர், முருகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களை சுற்றிவந்து வழிபட்டனர். அங்குள்ள தேரடி கருப்பசாமி கோவிலிலும் பக்தர்கள் வழிபட்டனர். ஒருசில பக்தர்களும், சிவனடியார்களும் தேவாரம் பாடிக்கொண்டு ரத வீதியை சுற்றி வந்தனர்.

தேரோட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தை புகைப்படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் புகைப்படக்கலைஞரும் எழுத்தாளருமான பாலமுருகன்.

தூத்துக்குடில இருந்து கெளம்புன ஒடன ராஜேந்திரனுக்கு போன் பண்ணினேன், யோவ் கெளம்பிட்டீரா? னா வந்திட்டு இருக்கேன்னு சொன்னேன். எங்கன வரீங்கனு கேட்டார், வல்லநாடு தாண்டுறேன்னு சொன்னஒடன இப்பதான் வீட்ல இருந்து வண்டிய எடுக்கேன், சமாதானபுரத்துல வெய்ட் பண்றேன்னார். சொல்லி பத்து நிமிசத்துல சமாதானபுரம் போயாச்சு.

Aani Therottam canceled at Nellaiyappar temple - Sivanadiyars singing Thevaram

ராஜேந்திரன் அங்க நின்னார். டீ குடிப்போமான்னு கேட்ட ஒடன, மார்கெட் அன்னபூர்னால குடிப்போமேன்னு சொல்லி நல்ல காப்பி வாங்கி தந்தார். அங்கிருந்து கெளம்பி டவுனுக்கு கெளம்பி போனோம்.

ஆர்ச்ச தாண்டிய ஒடன டிராபிக் ஏட்டையா லெப்ட்ல கைய காட்டி திருப்பி விட்டார். வண்டிய திருப்பி சத்தியமூர்த்தி தெருவுக்குள்ள போய் போத்தீஸ் பார்க்கிங்ல வண்டிய போட்டோம். நேரா தேரடில நின்னுட்டு இருந்த தேருகிட்ட போய் எஸ்.ஐ க்கு ஒரு வணக்கத்த வச்சிட்டு தேருக்கு போயி தம்பதி சமேதராய் வீற்றிருந்த அம்மையையும் அப்பனையும் படம் எடுத்துட்டு கீழ வந்தோம். எட்டு மணி இருக்கும் திர்ணவேலிகாரவுக ஒவ்வொருத்தரா வந்திட்டு இருந்தாக.

யே மயினி வெரசா வாங்க இழுத்துட போராக எனக்கூறி சொந்தகார பெண்ணை அவசரப்படுத்தினர் இன்னொரு பெண். மெய் அன்பர்களே ! நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாக இருப்பதால்... என குழாய் ஸ்பீக்கர் அலறத்தொடங்கியது.

அங்கங்க நின்னு கத பேசிட்டு இருந்தவுக எல்லோரும் வடத்த பிடிக்க தயாரானாக. எட்டு நாப்பத்தஞ்சு மணிக்கு தேர் நிலையத்த விட்டு வெளிய வந்துச்சி. எல்லோரும் கைதட்டினாக. இடைல போலீசும் அம்மணிகள் எவ்வாறு தங்க நகைகளை பாதுகாக்கணும்னு அட்வைஸ் கொடுத்தாங்க.

Aani Therottam canceled at Nellaiyappar temple - Sivanadiyars singing Thevaram

முந்தாணி எதுக்கு கடவுள் கொடுத்திருக்காருன்னா கழுத்துல கெடக்குற தங்க நகைகள மூடுறதுக்கு தான் கொடுத்திருக்காருன்னு ஒரு அருமையான வெளக்கத்த கொடுத்தாரு.

மப்டில நிறைய போலீஸ் நின்னாக. அவுகளும் அவுக கடமைக்கு அம்மணிகளை எச்சரிச்சாங்க. வர்சா வர்சம் வரோம் இதுகூட தெரியாமயா இருப்போம் என யாருமே கண்டுகொள்ளல போலீஸ் அறிவிப்பை. யாராச்சும் காதுகொடுத்து கேக்காங்களா பாருங்க, ஒரு வேள கவரிங்கா இருக்குமோ என மப்டி போலீஸ் என்கிட்டே கேட்டார். இருக்கும் சார் என சொல்லிட்டு நகண்டுடேன்.

ஏல அங்க பாருல...மீசை முளைக்க ஆரம்பித்த விடலைகளின் சீரியஸ் சம்பாசனைகள். கல்யாணம் முடியும் வயதில் உள்ள மங்கைகளுக்கு துணையாக டீன் ஏஜ் மங்கைகள். ஏங்க பிள்ளைய யான மேல ஏத்தி விடுங்கங்க...சிறு வயது குழந்தைக்கு தாய் தன் கணவனிடத்தில் அன்பு கட்டளை. அடைய பார்த்து கட்டு... தொடர்ச்சியாக மைக்கில் அறிவிப்பு செஞ்ச அண்ணாச்சி...

Aani Therottam canceled at Nellaiyappar temple - Sivanadiyars singing Thevaram

தேர் வடம் பிடிச்சவங்களுக்கு வழி நெடுக தண்ணீர் சப்ளை செய்த தொண்டர்கள். கோலாட்டம் ஆடிய சிறுமிகள்... சார், னா ரெடியா இருக்கேன். பத்து மணிக்கு தான சார் லைவ் ? சிக்னல் சரியா இருக்கா பார்த்துக்கோ என கேமராமேனை உஷார் படுத்திய டிவி நிருபர்கள்.

பஞ்சவாத்தியம் வாசித்த இளைஞர் மற்றும் சிறுவர் பட்டாளத்தை பார்க்கும் போது நம்பிக்கை வந்தது. பண்டைய கால இசைக்கு என்றும் அழிவில்லை என்று. அப்பனின் தோல் மீது நின்று தேரை ரசித்த சிறுசுகள்... அன்னதானம் வழங்கிய அன்பர்கள்... ரசிக்க ருசிக்க ஏராளம் நிறைந்த தேர் திருவிழா... இந்த ஆண்டு இல்லாமல் போனது ஏக்கமான விசயம்தான். அடுத்த ஆண்டாவது தேரோட்டம் நடைபெற நெல்லையப்பர் அருள்புரிய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

English summary
Nellaiyappar Gandhimati Amman Temple Anithi festival is held inside the temple without the participation of devotees. The Sivanadiyars stood in front of the chariot and sang Thevaram as the corona procession did not take place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X