• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 17 #Margazhi,#Thiruppaavai

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
மார்கழி மாதம் 17 வது நாளில் திருப்பாவை, திருவெம்பாவையின் 17வது பாசுரத்தை பாடலாம். இந்தப் பாசுரம் ஸ்ரீநந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும்.

மார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 16 #Margazhi,#Thiruppaavaiமார்கழி நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 16 #Margazhi,#Thiruppaavai

Margazhi Month Special Prayers Tirupavai, Tiruvempavai songs 17

திருப்பாவை - 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

பாடல் விளக்கம்:

ஆயர்பாடி மக்களுக்கு ஆடையையும், தண்ணீரையும், உணவினையும் குறைவில்லாது தானம் தருமம் செய்யும் எங்கள் தலைவராகிய நந்தகோபரே பள்ளி எழுந்தருள வேண்டும். பூங்கொடி போன்ற ஆயர்குலப் பெண்களின் கொழுந்து போன்ற தலைவியே, எங்கள் குலத்திற்கு விளக்கு போன்றவளே, எங்கள் இறைவியான யசோதையம்மையே எழுந்திருக்க வேண்டும்.

வாமன அவதாரத்தின் போது மூன்று அடி நிலத்தை மாபலியிடம் தானமாகப் பெற்று, பின்னர் வானளவு உயர்ந்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை ஒரு அடியாகவும் அளந்த தேவர்களின் தலைவனான கண்ணனே, உறக்கத்தை விடுத்து எழ வேண்டும்.சிவந்த பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடைய பலராமனே எழ வேண்டும். நீயும் உன் தம்பியுமான கண்ணனும் எழுந்து எங்களுக்கு சேவை தரவேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

திருவெம்பாவை - 17

செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!

விளக்கம்:

சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர். நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல். பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக.

English summary
Margazhi Month Special Prayers Tirupavai, Tiruvempavai songs 17
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X