For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்

நவராத்திரி நாளில் ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

Google Oneindia Tamil News

சென்னை: நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் கொலு வைக்கலாம்.

கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. இருக்கும் வசதிகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி பண்டிகையில் படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

பராசக்தியின் அம்சம்

பராசக்தியின் அம்சம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். நவராத்திரி பண்டிகை கொண்டாடும் ஒன்பது நாட்களும் கொலு வைத்து பூஜித்தால் எல்லா தெய்வ வடிவங்களிலிருந்தும் பராசக்தி வெளிப்படுவாள் என்பது ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்.

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு

அனைத்திலும் தேவியே இருக்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.

விக்னங்கள் தீர்க்கும் விநாயகர்

விக்னங்கள் தீர்க்கும் விநாயகர்

பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது.

படி தத்துவம்

படி தத்துவம்

கொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள். கீழிருந்து மேலாக படிகளும் அவற்றில் வைக்கப்படும் பொம்மைகளும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புல் முதல் மிருகங்கள்வரை

புல் முதல் மிருகங்கள்வரை

முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம். இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். நான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள். ஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம்.

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆறாம்படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள். ஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம். எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம். ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.

English summary
Navratri puja is one of the most popular pujas done by Hindu households.Navratri puja vidhi and rituals are considered to be very auspicious as they bring the blessings of Goddess NavDurga. Here is Step by step Navratri Puja Vidhi.The festival includes placing dolls of a multitude of gods, goddesses, men, animals, and children on a steps-like set-up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X