For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்கா தங்கைகள் ஏழு பேர்... ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் - கல்லுப்பட்டியில் ஒற்றுமை விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தே. கல்லுப்பட்டியில் ஏழு கிராமங்கள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட திருவிழா ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக அமைந்திருந்தது.

Google Oneindia Tamil News

மதுரை: ஏழு கிராமங்கள் இணைந்து ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ஒரு திருவிழா நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆறு சப்பரங்கள் அட்டகாசமாக பவனி வர அமர்களமாக நடந்து முடிந்துள்ளது.

சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா என்று பாட்டு அமர்களப்பட... ஏழு கிராம மக்களும் கல்லுப்பட்டியில் குவிய 40 அடி உயரத்தில் ஆறு சப்பரங்கள் வரிசை கட்ட அம்மாபட்டிக்கு சென்று அம்மனை அழைத்து வந்ததை குலவை போட்டு பக்தர்கள் கொண்டாடினர்.

திருவிழாவிற்காக காப்புக்கட்டியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களின் தலையில் சப்பாரத்தை தூக்கி வருவதை பார்க்கவே கண் கோடி வேண்டும். சப்பரத்தின் முன் உற்சாகமாக நடனமாடியபடி வரும் இளசுகளும், பாவாடை தாவணியிலும், சுடிதாரிலும் வலம் வரும் இளம் பெண்களும், பட்டு சரசரக்க சப்பரத்தை பார்க்க வந்த பெண்களும் என கல்லுப்பட்டியே நிறைந்திருந்தது.

அம்மனை தரிசிக்க வந்த மக்கள்

அம்மனை தரிசிக்க வந்த மக்கள்

தேவன்குறிச்சி, தே. கல்லுப்பட்டி, சத்திரபட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி,காடனேரி, கிளாங்குளம் ஆகிய ஏழு ஊர்கள் இணைந்துதான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் முத்தாலம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர்.

அக்கா தங்கைகளின் ஆசி

அக்கா தங்கைகளின் ஆசி

ஆறு பெண் பிள்ளைகளுடன் ஆந்திராவில் இருந்து அம்மாபட்டிக்கு வந்த பாட்டியுடன் தொடங்குகிறது இந்த கதை. தண்ணீரின்றி தவித்த மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஆசி தரும் வகையில் வந்தனர் ஏழு பேரும். அவர்கள் வந்த நேரம் நல்ல நேரம்தான் எனவேதான் கிராமங்களில் பஞ்சம் தீர்ந்து செழிப்பானது. அது முதல் ஏழு பேரையும் குலம் காக்க வந்த குல தெய்வமாகவே வணங்கத் தொடங்கிவிட்டனர் ஏழு கிராம மக்களும்.

கண் திறந்த அம்மன்கள்

கண் திறந்த அம்மன்கள்


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டு நடத்த உத்தரவு கிடைத்தது. கடந்த வாரம் புதன்கிழமையே காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கி விட்டனர் சப்பரம் தூக்குபவர்கள். புதன்கிழமை இரவே ஏழு அம்மன்களை அலங்கரித்து அம்மாபட்டியில் வைத்திருந்தனர். அம்மன் கண் திறப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டம் கூட்டமாக சென்று

ஏழு அம்மன்களுக்கும் மாலை வாங்கி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள் கிராம மக்கள்.

மழையிலும் தொடர்ந்த அலங்காரம்

மழையிலும் தொடர்ந்த அலங்காரம்

அம்மாபட்டி தவிர ஆறு ஊர்களிலும் புதன்கிழமை காலையில் இருந்தே சப்பரம் செய்யும் வேலை தொடங்கி விட்டது. மாலையில் இடி மின்னலுடன் தொடங்கி மழை இரவு வரை கொட்டித்தீர்த்தது. ஆனாலும் அடாது மழையிலும் விடாது சப்பரம் செய்து அலங்கரிப்போம் என்று இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்தனர். ஆறு ஊர் சப்பரத்தில் எந்த ஊர் சப்பரம் அழகு, கம்பீரம் என்பதை காட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும்.

பவனி வந்த சப்பரங்கள்

பவனி வந்த சப்பரங்கள்

வியாழக்கிழமை அதிகாலையிலேயே அதிர்வேட்டுகள் முழங்க சப்பரங்கள் அம்மாபட்டிக்கு சென்றன. தங்கள் ஊர் அம்மனை தலையில் சுமந்த படி ஆடி வர கிராம மக்கள் தங்கள் ஊர் சப்பரத்தின் பின்னேயே நடந்து சென்று ஆனந்த கண்ணீர் மல்க தங்கள் ஊர்களுக்கு அம்மனை அழைத்து சென்றனர். கல்லுப்பட்டிக்கு வந்ததும் அக்கா தங்கைகள் கட்டித்தழுவி பிரியா விடை கொடுப்பதை பார்ப்பது தனி அழகு.

 கறி சோறு விருந்து

கறி சோறு விருந்து

அம்மனை அழைத்துக்கொண்டு சப்பரம் ஊருக்கு வந்த உடனேயே கிடா வெட்ட ஆரம்பித்து விட்டார்கள். அம்மனுக்காக நேர்ந்து கிடா பிடித்து விட்டர்கள். சொந்த பந்தங்களை அழைத்திருந்தவர்கள் என கிடாவை வெட்டி சோறு சமைத்து விருந்து பரிமாறினார்கள். காணும் இடமெங்கும் நேற்று கிடாவெட்டு விருந்தாகவே காட்சியளித்தது. அம்மனுக்கும் கறிசோறு விருந்து படைந்து நள்ளிரவில் அம்மனை நீர் நிலையில் கரைப்பதுடன் விழா நிறைவடைகிறது.

ஒன்று சேரும் விழா

ஒன்று சேரும் விழா

இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக எங்கு சென்றிருந்தாலும் ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் சிறப்பம்சம். தீபாவளி, பொங்கல் எல்லாம் எங்களுக்கு அப்புறம்தான் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். ஜாதி பேதமின்றி, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழா என்பது இந்த விழாவின் சிறப்பு. இந்த ஆண்டு விழா சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. முத்தாலம்மனைப் பார்க்க இன்னும் 2 வருஷம் காத்திருக்கணுமே என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர் இளைஞர்கள்.

படங்கள் உதவி:சுபா ஸ்டூடியோ சங்கர் கல்லுப்பட்டி நண்பர்கள்

English summary
In Madurai District T.Kallupatti Muthalamman temple 7 Villages Sapparam Festival held on November 1. Muthalamman temple festival famous festival celebrated once in 2 years between 7 villages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X