For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாவங்களில் இருந்து நம்மை பாதுகாத்து செளபாக்யங்கள் தரும் வருதினி ஏகாதசி!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று வருதினி ஏகாதசி விரதத்தை முன்னிட்டு அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது, சித்திரை மாத்தில் தேய்பிறையில் அதாவது வைகாச மாதத்தில் வரும் ஏகாதசி வருதினி ஏகாதசி எனப்படுகின்றது. வருதினி ஏகாதசியில் செய்யப்படும் தானதருமங்கள் பண்மடங்கு உயர்ந்தது என புராணங்களில் போற்றப்படுகிறது. இன்று பகவான் ஸ்ரீ மஹா விஷ்னுவை தரிசிப்பதும், விஷ்னு சஹஸ்ரநாம பாராயணம் செய்வதும், தான தருமங்கள் செய்வதும் பாவங்களை போக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

பஞ்சாங்கத்தில் ஏகாதசி:

பஞ்சாங்கத்தில் ஏகாதசி:

திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் இவை ஐந்தும் ஒரு நாளிற்குரிய முக்கியமான ஐந்து அங்கங்கள். இந்த ஐந்தையும் நமக்குத் தெரிவிப்பதுதான் பஞ்சாங்கம். அதாவது பஞ்ச அங்கம். திதி என்பது சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், சந்திரன் சஞ்சரிக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவைக் குறிப்பது

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பர். அமாவாசை நாள் தொடங்கி பிரதமை, த்விதியை என்று ஒவ்வொரு நாளாக சூரியனின் பாகையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகி பௌர்ணமி நாளன்று நேர் எதிர் பாகையில் அதாவது சூரியன் இருக்கும் பாகையில் இருந்து சரியாக 180வது பாகையில் சந்திரன் சஞ்சரிப்பார்.

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப் படுகின்றன. அமாவாசை நாளையும், பெளர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று எனப் பொருள்படும். பதினைந்து நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

முப்பது நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பெளர்ணமி வரை உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பெளர்ணமி அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக்காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பெளர்ணமி

அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்:

வானியல் விளக்கம்:

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு:

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு:

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப் படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

வருதினி ஏகாதசி

வருதினி ஏகாதசி

மாதத்தில் இரண்டு ஏகாதசிதிதிகள் வருகின்றன. இந்த ஏகாதசி நாளில் உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது. ஏகாதசியன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியில் அதிகரிக்கின்றது. இதனால் நமது ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அதுசமயம் உபவாசம் இருப்பது உடலுக்கும் நல்லது; இறைவனின் அருளுக்கும் பாத்திரமாகலாம்.

வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது. பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வருதினி ஏகாதசி மகிமை:

வருதினி ஏகாதசி மகிமை:

ஓர் ஏழை அந்தணர் கால்நடையாக காட்டு வழியில் தீர்த்த யாத்திரை சென்றுகொண்டிருந்தார். நல்ல வெயில். களைப்பு மேலிட்டதால் அவர் ஒரு மரத்தடியில்அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன்அந்த அந்தணரை ஏளனமாகப் பேசி, அவரிடம் இருந்த சில பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு அவரை விரட்டினான்.

கடும்வெயிலில் சுடுமணலில் மிகவும் சிரமப்பட்டு அவர் மெதுவாக நடந்து சென்றார். அதைப் பார்த்த வேடனின் மனதில் சிறிதளவு இரக்க உணர்ச்சி தோன்றியது. தனக்குப் பயன்படாத கிழிந்துபோன செருப்பையும் நைந்துபோன பழைய குடையையும் அந்தணரிடம் கொடுத்தான். பின் அவன் தன் வழியே செல்லும்போது ஒரு புலி அவனைத்தாக்கிக் கொன்றது. அப்போது வானுலகிலிருந்து எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எமதூதர்களைத் தடுத்தார்கள்.

"இவன்மகாபாவி! இவனை நரகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எங்களைத்தடுக்காதீர்கள்'' என்றனர் எமதூதர்கள்.

"எமதூதர்களே! இந்த வேடன் வைகாச மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்தபாவங்கள் அவனை விட்டு அகன்று விட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம்'' என்று கூறி, அவ் வேடனின் உயிரைக் கொண்டுசென்றார்கள் விஷ்ணு தூதர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாச மாதம்.

உலகை ரட்சிக்கும் பகவான் தேவகணங்களுடன் இந்த மகிமை மிகுந்த வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தருகிறார். அதுசமயம் நீராடி இறைவனைப்பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும் இம்மாதத்தில் செய்கின்ற எல்லாவிததானங்களுக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஆன்றோர்கூற்று!

பிரம்மதேவனின் ஐந்தாவது தலையைக் கொய்த பாவத்திலிருந்து விடுபடவேண்டி சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவ விமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம். தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது வித்யாதானம். அந்த வித்யாதானப்பலனை அளிக்கக் கூடியது இந்த வருதினி ஏகாதசி விரதம். அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

குதிரைகளை தானம் அளிப்பதை விட யானைகளை அளிப்பது மேலானது. அதை விட மேலானது நிலத்தை தானமாக வழங்குவது. பூமி தானத்தை விட எள் தானம் சிறந்தது, அதை விட தங்கம் மேலானது. தங்கத்திலும் சிறந்தது அன்னதானம். அதை விட சிறந்தது ஞானத்தை பிறருடன் பகிர்ந்து கொள்வது. கன்யாதானம் இவை எல்லாவற்றையும் விட சிறப்பு மிக்கது. வருதினி ஏகாதசி விரதம் இந்த அத்தனை தான பலன்களையும் அளிக்க வல்லது. அந்த பலன் வருதினி ஏகாதசி விரதம் மூலம் நமக்கு கிட்டும்.

கத்திரி வெயிலும் வருதினி ஏகாதசியும் சேர்ந்த இன்று செருப்பு, குடை, வஸ்திரம். கைத்தடி, மூக்கு கண்ணாடி போன்ற தானங்கள் செய்வது ஒருவர் இறந்தபோது செய்ய வேண்டிய தானங்களில் ஏதேனும் குறை இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை. சூரிய பகவான் ராஜாவாகவும் சனைச்சர பகவான் மந்திரியாகவும் விளங்கும் ஸ்ரீ விளம்பி வருஷத்தின் அக்னி நக்ஷத்திரத்தில் வந்திருக்கும் வருதினி ஏகாதசியில் தானங்கள் பல செய்து தோஷங்கள் நீங்கி வாழ்வோமாக!

-அஸ்ட்ரோ சுந்தர ராஜன்
9498098786

English summary
Varuthini Ekadashi or ‘Baruthani Ekadashi’ as it is also known as a holy fasting day for Hindus that is observed on the ‘ekadashi’ (11th day) of the Krishna Paksha (the dark fortnight of moon) during the ‘Vaishakha’ month in the North Indian calendar. However in the states of South India, where the Amavasyant calendar is followed, this ekadashi is celebrated during the month of ‘Chaitra’. In the Gregorian calendar this date corresponds to the months of April-May. On the day of Varuthini Ekadashi, God Vamana, who is known to be the 5th avatar of Lord Vishnu, is worshipped with complete devotion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X