For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி அமாவாசை: கணவன் ஆயுள் நீட்டித்து தீர்க்க சுமங்கலி வரம் தரும் சிவபார்வதி விரதம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி பயபக்தியுடன் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வேண்டி விரதம் இருந்தால் மாங்கல்யம் பலம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உயிரோடு இருப்பவர்கள் நன்கு நீடுழி வாழ அவர்கள் பிறந்த நட்சத்திரம் அன்று அவர் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்கின்றோம்.

மறைந்தவர்கள் மோட்சம் அடைய அவர்கள் இறந்த திதி அன்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்கின்றோம்.

Aadi Amavasai Viratham women prays to Lord Siva and Parvathi

அமாவாசை அன்று சூரியன், சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருப்பதால் இது ஒருவரின் தந்தை, தாயினை குறிக்கின்றது. ஆகவே அமாவாசையில் முன்னோருக்கு வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

அதுவும் ஆடி அமாவாசை அன்று சந்திரனின் வீடான கடகத்தில் சூரியனும், சந்திரனும் இருப்பது விசேஷமானது. ஆடி மாதம் தக்ஷணாயன காலத்தில் அமாவாசை அன்று முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். அன்று நதி. ஆறு, கடல் கரைகளில் பித்ருக்களுக்கான தர்ப்பணத்தினை செய்யும் பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர். அவர்களை மோட்சம் அடையச் செய்யும் என கருட புராணம் கூறுகின்றது.

முன்னோர்களின் ஆசீர்வாதம் அவரது சந்ததிகளை வெற்றிகரமான வாழ்வு பெறச் செய்யும்.

அன்று முழுவதும் சைவமாகவே இருப்பர். அநேகர் ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களுக்கு சென்று பித்ரு வழிபாடு செய்வர். அன்று வழிபாடு முடியும் வரை உபவாசம் இருப்பர். பித்ரு வழிபாடு தரும் பலன்களாகக் கூறப்படுபவை உங்கள் தீய கர்மாக்களை நீக்குகின்றது.

Aadi Amavasai Viratham women prays to Lord Siva and Parvathi

வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் பெறுவர்.

வருங்கால சந்ததியினரின் வாழ்வு வளமாய் இருக்கும்.

முன்னோர்களின் மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

இத்தனை சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை பித்ருக்கள் வழிபாட்டினை இந்துக்கள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர்

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

விரதம் சரி... அது என்ன கதை என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

தீர்க்க சுமங்கலி விரதம் அருளும் கதை

அழகாபுரி நாட்டு அரசன் கத்தலைராஜா. பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அழகேசன் என்று பெயர் வைத்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான் மன்னள்.

ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்து போனான். இதனையடுத்து சடலத்திற்கு பெண்கொடுக்கும் குடும்பத்திற்கு தேவையான அளவு செல்வம் தரப்படும் என்று மன்னன் அறிவித்தான்.

அப்போது தேவசர்மா என்பவரின் பெண் கங்காவை அவளுடைய அண்ணிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசனின் சடலத்திற்கு திருமணம் செய்து தர முன்வந்தனர். மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்ற கங்காவை மணவறையில் அமரவைத்தனர். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் கூறி திருமணம் நடந்தேறியது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர்.

பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. தனது கணவன் அசதியின் காரணமாக உறங்குகிறான் என கங்கா நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே அவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள். அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். அவன் உயிரற்றவன் என்பது அப்போதுதான் தெரிந்தது. தனக்கு நேர்ந்த நிலமையை எண்ணி கதறினாள்.

கங்காவின் முன் சிவன் - பார்வதி சமேதராய் காட்சியளித்தனர். பார்வதிதேவியின் காலில் விழுந்து புலம்பிய கங்கா, தன் கணவனுக்கு உயிர்பிக்காவிடில் இவ்விடத்தைவிட்டு அகலவிடமாட்டேன் என சூளுரைத்தாள். சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன்வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய்.

இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது. உன் கணவன் உடனே எழுவான், என்றார். இளவரசன் அழகேசனும் எழுந்தான். மகிழ்ச்சியடைந்த கங்கா, இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள் கங்கா.

உடனே பார்வதி தேவி, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

English summary
Aadi Amavasai Viratham women prays to Lord Siva and Parvathi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X