• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடிக்கிருத்திகை : தமிழ்கடவுள் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகள் தரிசனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆடிக்கிருத்திகை நாளான இன்றைய தினம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவிலுக்கு பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைனில் முருகன் கோவில்களில் நடைபெறும் அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்யலாம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான அக்னி பொறிகளில் அவதரித்தவர் ஆறுமுகக் கடவுள். சண்முகப்பொய்கையில் வந்த சண்முகரை கார்த்திகைப் பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்திக்கேயன் என்று போற்றப்படுகிறார் முருகப்பெருமான்.

இலங்கை கடற்படை அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம் இலங்கை கடற்படை அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்

குன்றிருக்கும் இடமெல்லால் குமரன் இருக்கும் இடமாக இருந்தாலும் தமிழ்கடவுள் முருகப்பெருமானுக்கு
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகள் பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகை தினமாக இன்றைய தினம் முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்புகள் அறிந்து கொள்வோம்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் குடைவரைக்கோவில். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்தபின், இந்திரனின் மகள் தெய்வானையை முருகப்பெருமான் மணம் புரிந்து கொண்ட சிறப்புமிகு தலம் திருப்பரங்குன்றம். அழகில் சிறந்த முருகன் தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. தெய்வத்திருமணங்களில் புகழ்பெற்ற முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் தேவர்கள் சூழ நடைபெற்ற தலம் என்பதால், திரு மணத் தடை இருப்பவர்கள் இங்கு திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யலாம். இதனால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் நம்பிக்கை. முருகனின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதால், இங்கு ஞானத்தின் அடையாளமாக விளங்கும் பார்வதி தேவி முருகப் பெருமானுக்கு அளித்த வேலுக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சரவணப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. பௌர்ணமி நாளில் இம்மலையை கிரிவலம் வருவதும் சிறப்பாகும். மதுரையில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றனம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

அழகன் முருகனின் ஆலயங்கள் அனைத்தும் மலைமீது அமைந்திருக்க முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது சிறப்பான இந்த ஆலயம். இங்குதான் தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக பக்தர்களுக்கு அருள்கிறார் முருகப்பெருமான். முருகன் தன் கைகளில் ருத்ராட்ச மாலையும் தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட் கோலத்தில் இங்கு காட்சி தருகிறார். இங்குள்ள நாழிக் கிணறு மற்றும் கடல் தீர்த்தங்கள் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து நோய்களையும் போக்கும் ஆற்றல் கொண்டது. இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகம் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர். கருவறையின் பின்புறம் முருகப்பெருமான் வழிபட்ட பஞ்ச லிங்கங்கள் உள்ளது சிறப்பு. தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து அதிக பேருந்து வசதிகள் உள்ளன.

பழனி

பழனி

முருகனின் மூன்றாவது படைவீடான பழநி, திருஆவினன் குடி என போற்றப்படும் சிறப்புடையது. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த தலம் என்ற பெருமை உடையது. பழநி மலை உச்சியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர் சித்தர்களில் ஒருவரான போகர். ஆண்டி கோலத்தில் மேற்கு நோக்கி அருளும் இத்தல இறைவன், இங்கு பாலகனாக வீற்றிருக்கிறார். இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திண்டுக்கல் நகரில் இருந்தும் தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரையில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

சுவாமி மலை

சுவாமி மலை

அப்பன் சிவனுக்கு பாடம் சொன்ன சுப்பன் அழகன் முருகன் அருள்பாலிக்கும் திருத்தலம் சுவாமிமலை.

தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது அப்பாவுக்கு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சிவபெருமானும் தனது மைந்தனிடம் சீடராக அமர்ந்து பாடம் கற்றுக்கொள்கிறார். சிவகுரு நாதன் என்ற பெயரால் வணங்கப்படுகிறார் முருகப்பெருமான். ஆலயத்தின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும்காட்சி சுதை சிற்பமாக உள்ளது. மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேலே உயரத்தில் சன்னிதியும், கீழே சிவனுக்கு சன்னிதியும் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில் 60 படிகள் 60 ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர். இங்கு வழிபடும் பக்தர்களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். கும்பகோணம் அருகில் உள்ளது இந்த திருத்தலம்.

திருத்தணி

திருத்தணி

முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு திருத்தணிகை மலை. சூரபதுமனையும், அவனது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரையும் முருகப்பெருமான் திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தார். ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. செரு என்றால் கோபம் என்றும், தணி என்றால் குறைதல் என்றும் பொருள். செருத்தணி என்று அழைக்கப்பட்டு வந்த ஊரே தற்போது திருத்தணி என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். முருகப்பெருமான், வேடர் குலப்பெண்ணான வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான். தணிகைநாதன், தணிகேசர், தணிகைவள்ளல் என்றெல்லாம் புகழப்படும் இந்த தல நாயகனுக்கு ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்படி பூஜையும் இங்க நடைபெறுகிறது. அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சிதர், ராமலிங்க வள்ளலார், கச்சியப்ப தேசிகர் போன்ற மகான்கள் இங்கு வந்து தணிகைநாதனின் அருட்பார்வை பெற்றுள்ளனர். திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார். "குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடிக்கிருத்திகை நாளில் இங்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் மட்டும் கந்த சஷ்டி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை அதற்கு பதிலாக சினம் தணிந்த முருகனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம். சென்னையில் இருந்து ரயில் வசதி, பேருந்து வசதி உள்ளது.

பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை

அழகர் மலையில் அழகாக காட்சி தருகிறது பழமுதிர்சோலை. சோலைமலை என்றும் புகழப்படும் இந்த ஆறாவது படை வீடு ஔவையாரிடம் முருகன் திருவிளையாடல் புரிந்த தலம் ஆகும். பழம் உதிர் சோலை என்பதே பழமுதிர்சோலை என்றானது. அழகன் முருகன் ஆடுமேய்க்கும் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி ஔவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இதுவாகும். மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

English summary
Special worships will be held at all the Murugan temples on the day of Adik Krithika. Devotees on this day will perform Murugan darshan from fasting. One can visit the sacrificial houses of Lord Murugan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X