• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடி பிறந்தாச்சு: ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி பெருக்கு அம்மன் கோவில்களில் இனி களைகட்டும்

|

சென்னை: ஆடி மாதம் பிறந்தாச்சு. ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. உயிர்களைக் காக்கும் சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிக் கொள்கிறார். ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 வரை உள்ளது.

பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.

தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது. மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.

இறைவழிபாட்டுக்குறிய ஆடி

இறைவழிபாட்டுக்குறிய ஆடி

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள்.

ஆடிக்கார்த்திகை நேர்த்திக்கடன்

ஆடிக்கார்த்திகை நேர்த்திக்கடன்

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். இந்த மாதம் ஆடிக்கிருத்திகை ஆடி 11, ஜூலை 27ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வாஸ்து நாளாகும்.

முன்னோர்களுக்கு வழிபாடு

முன்னோர்களுக்கு வழிபாடு

ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்ந வீட்டில் இருக்கிறார். அப்போது சூரியனுடன் தொடர்பு ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடி 16ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

பொங்கி வரும் காவிரி

பொங்கி வரும் காவிரி

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகஸ்ட் 3 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

அம்மன் பிறந்தநாள்

அம்மன் பிறந்தநாள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்

இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 4ஆம் நாள் ஆடி 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

கருட ஜெயந்தி

கருட ஜெயந்தி

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமியாகவும், கருட பஞ்சமியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடுவார்கள். இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆடி 20ஆம் நாள் ஆகஸ்ட் 5ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 7ஆம் நாள் பட்சி ராஜன் கருடாழ்வார் ஜெயந்தி. ஆகஸ்ட் 9 வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

ஆடி பவுர்ணமி

ஆடி பவுர்ணமி

ஆடி அமாவாசை போல ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும் என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இன்றைக்கும் பாரம்பரியமாக இந்த விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. ஆடி 29 ஆகஸ்ட் 14ஆம் தேதி பௌர்ணமி பூஜை கொண்டாடப்படுகிறது.

முன்னோர்களுக்கு படையல்

முன்னோர்களுக்கு படையல்

ஆடி மாதம் கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும். ஆடி மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடி 32 நாளாகும். ஆகஸ்ட் 17ஆம் நாள் கடைசி ஆடி கொண்டாடப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Auspicious days in Aadi Masam 2019, Festival days in Aadi Month 2019.In 2019, the Aadi Masam begins on July 17 and ends on August 17.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more