For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆனி திருமஞ்சன விழா : சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கொடியேற்றம் - ஜூலை 8ல் மகா அபிஷேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் ஜூலை 8ஆம் தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத் திருவிழாவும் நடைபெறும். ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு, பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாரதனை செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்களும் சிவனடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீ நடராஜப் பெருமானையும், சிவகாம சுந்தரியையும் வழிபட்டனர். பத்து நாட்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மை அப்பனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

கயிலாய நாதன் சிவபெருமானுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் விரதம் இருந்து அபிஷேகத்திற்கும் சிவதரிசனம் செய்யவும் உகந்த நாட்களாக போற்றப்படுகிறது. ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஈசனின் ஆகாயத்தலம்

ஈசனின் ஆகாயத்தலம்

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த ஆலயம் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப் பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம் அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தல புராணம்.

மனித உடல் அமைப்பு

மனித உடல் அமைப்பு

மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

நடராஜருக்கு மகா அபிஷேகம்

நடராஜருக்கு மகா அபிஷேகம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல்அரசன் நடராஜருக்கு ஜூலை 8ஆம் தேதி திருமஞ்சனம் நடைபெறுகிறது. திருமஞ்சனம் என்றால் மகாஅபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

பத்து நாட்கள் கோலாகலம்

பத்து நாட்கள் கோலாகலம்

தில்லை சிதம்பரத்தில் ஆனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மையும் அப்பனும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், ஜூலை 1ம் தேதி திங்கள் கிழமை வெள்ளி சந்திரபிரபை வாகனத்திலும், 2ம் தேதி செவ்வாய் கிழமை பூத வாகனத்திலும், 3ம் தேதி புதன் கிழமை வெள்ளி ரிஷப வாகனத்திலும், 4ம்தேதி வியாழக்கிழமை வெள்ளி யானை வாகனத்திலும், 5ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கபர்வத வாகனத்திலும், 6ம் தேதி சனிக்கிழமை தங்கதேரிலும் வீதி உலா நடைபெறும்.

விடிய விடிய தோரோட்டம்

விடிய விடிய தோரோட்டம்

பத்துநாட்கள் நடைபெறும் ஆனித்திருமஞ்சன விழாவில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது.தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நள்ளிரவாகி விடுவதால் இரவு முழுவதும் நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில்தான் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும்.

அபிஷேகங்கள் ஆராதனைகள்

அபிஷேகங்கள் ஆராதனைகள்

ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு "ஆனி உத்திரம்" என்றும் ஒரு பெயர் உண்டு. திருமஞ்சன தினத்தில் சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும்.

தீர்க்க சுமங்கலி வரம் தரும் இறைவன்

தீர்க்க சுமங்கலி வரம் தரும் இறைவன்

உலக இயக்கத்தையே தனது உடலுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடும் நடராஜரைப் பார்த்தாலே பக்தர்களுக்குப் பரவசம்தான். ஆனித்திருமஞ்சன நாளில் தில்லை காளி அம்மனுக்காகக் காத்திருந்து தரிசனம் தந்து திரும்புவார் நடராஜர். இதில் குளிர்ந்து கோபம் தணிவாள் தேவி என்பதும் ஐதீகம். இந்தத் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

சிவன் சக்தி அருள் கிடைக்கும்

சிவன் சக்தி அருள் கிடைக்கும்

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

English summary
The important festival in Chidambaram Aani Tirumanjanam begins on today June 29th saturday Flag hoisting.Aani Thirumanjanam is on July 8, 2019 In Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X