For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவணி மூலம் திருவிழா - கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நெல்லையப்பர்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான கருவூர் சித்தருக்கு ஜோதி மயமாக காட்சி கொடுக்கும் விழா ஞாயிறன்று நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: தன்னிடம் கோவித்துக்கொண்டு தனக்கு சாபம் கொடுத்து விட்டு போன கருவூர் சித்தருக்கு மானூரில் போய் ஜோதி வடிவத்தில் காட்சி கொடுக்கிறார் நெல்லையப்பர். ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய அம்சமான இந்த நிகழ்வு ஞாயிறன்று அதிகாலையில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவுக்கு தனி வரலாறு உண்டு. இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நெல்லையப்பர் கோவிலில் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுரு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

Aavani moolam festival at nellaiappar temple Tirunelveli

ஒரு நாள் கருவூர் சித்தர் பெருமை வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சுவாமி நெல்லையப்பரை அழைத்தார். அப்போது சுவாமி நெல்லையப்பரிடம் இருந்து பதில் வராததால் கோபம் அடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை. இவ்விடத்தில் எருக்கும் குறுக்கும் எழுக என சாபமிட்டு அருகில் உள்ள சிவத்தலமான மானூர் செல்ல முயன்றார்.

இதனை அறிந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து சித்தரை தடுத்து அழைத்தார். சித்தர், அந்த சிவத்தொண்டரை பார்த்து, நீ யாரென்று கேட்க, தான் தொண்டருக்கெல்லாம் தொண்டர் என்று கூறி பணிந்தார். சற்றே கோபம் தணிந்த சித்தர், இறைவனை மானூர் வந்து தனக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறச் சொல் என்று சிவத்தொண்டரிடம் கூறிவிட்டு மானூருக்கு புறப்பட்டார். தற்போது அந்த இடத்தில் தொண்டர் நயினார் கோவில் உள்ளது.

Aavani moolam festival at nellaiappar temple Tirunelveli

எனவே மறுநாள் காலை சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் மானூர் செல்லும் பொருட்டு, ராமையன்பட்டி வந்து, அங்கு சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி மானூர் வருகின்றனர்.

இதற்கிடையே சித்தருக்கு இறைவன் காட்சி கொடுக்க போவதை அறிந்த மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேசுவரர், தாமிரபரணி அம்மன் ஆகியோர் சேர்ந்து தாங்களும் அந்த திருக்காட்சியை காண விரும்பி இறைவனோடு மானூர் வருகிறார்கள்.

மானூரில் கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி மயமாக காட்சி தந்து அருளுகிறார். இதனால் சினம் தணிந்த கருவூர் சித்தரை அழைத்துக் கொண்டு இறைவன் உள்ளிட்ட யாவரும் நெல்லை நோக்கி வரும் வழியில் ராமையன்பட்டி வந்ததும் சந்திரசேகரரும், பவானி அம்மனும் மீண்டும் நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக மாறியதோடு குதிரையில் நெல்லை வருகிறார்கள்.

இறைவன் தொண்டராக வந்து சித்தரை தடுத்த இடம் வந்ததும், ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அறுக என்று சாப விமோசனம் வழங்குகிறார் கருவூர் சித்தர். மேலும் ஆண்டுதோறும் வரும் ஆவணி மூலத்திருநாளன்று அடியேனுக்கு இறைவன் காட்சி கொடுக்க வேண்டும் என்றும், அக்காட்சியை கண்டு வழிபடுவோருக்கு முக்தி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் இறைவனை கருவூர் சித்தர் வேண்டுகிறார். நெல்லையப்பரும் அவ்வாறே அருள்கிறார். இதுவே ஆவணி மூலத்திருவிழாவின் வரலாறு ஆகும்.

நேற்று இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லையில் இருந்து மானூருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. 10ஆம் நாள் திருநாளான இன்று நள்ளிரவு 1 மணி அளவில் நெல்லையப்பர் கோவிலில் இருந்து சந்திரசேகர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகளுடன் பல்லக்கிலும், சப்பரத்திலும் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி, ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூர் அப்பலவாண சுவாமி கோவிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறார்.

அங்கு நெல்லையப்பர், கருவூர் சித்தருக்கு ஜோதி மயமாக காட்சி கொடுக்கிறார். பின்னர் கருவூர் சித்தருக்கு அடிக்கு ஆயிரம் பொன் வழங்கி நெல்லை நோக்கி அழைத்து வருகிறார்கள். சந்திரசேகரரும், பவானி அம்பாளும் ராமையன்பட்டி வந்ததும் மீண்டும் நெல்லையப்பராகவும், காந்திமதி அம்பாளுமாக உருமாறி நெல்லை வருகிறார்கள். நெல்லையப்பர், சிவத்தொண்டராக வந்த இடத்தை வந்தடைந்ததும் ஈசன் இங்கு உளன். எருக்கும் குருக்கும் அறுக என கூறி கருவூர் சித்தர் சாப விமோசனம் வழங்குகிறார்.

English summary
Avani moolam festival celebrations of Nellaiappar Gandhimathi Amman Temple Tirunelveli on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X