தமிழகத்தில் திடீர் திடீரென கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள்..அபசகுனமா?ஜோதிடர்கள் சொல்வது என்ன
சென்னை: கோவில் திருவிழாக்களில் விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது முதன்முறையல்ல இதே போல பத்து ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழா தேரோட்டத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் பலி ஏற்படாவிட்டாலும் தஞ்சாவூர் களிமேடு சப்பரத்தேர் தீ விபத்து 12 உயிர்களை காவு வாங்கியது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதியன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகின அப்போதே அது அபசகுனமாகப் பார்க்கப்பட்டது.
மாயமான ஐஜி பொன் மாணிக்கவேலின் துப்பாக்கி! 8 தோட்டா வேற இருந்துச்சாம்..! ஓடும் ரயிலில் பரபர சம்பவம்.!
கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட போது, தமிழக கோவில்களில் கடைபிடிக்கப்படும் தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து பதில் அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை ஹைகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன் விபத்து
தமிழ்நாட்டில் கோயில் தேரோட்டங்களில் விபத்துகள், குறிப்பாக மின்சார விபத்துகள் ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் இது முதல் முறை அல்ல. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்த நாள்களில் நடந்த இரண்டு தேரோட்ட விபத்துகளில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டது தமிழ்நாட்டை உலுக்கியது.

சாய்ந்த தேர் பலியான உயிர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள கைலாசநாதர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவை குறிப்பதற்காக வழக்கம் போல தேரோட்டம் புறப்பட்டது. ஆரணி மணிக்கூண்டு அருகே அந்த மரத்தேர் திடீரென கவிழந்தது. பலர் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் அரைமணி நேரம் போராடி கீழே விழுந்த தேரை தூக்கினர். இந்த விபத்தில்ஆரணி ரோட்டரி சங்கத்தின் செயலாளராக இருந்த டி.ஜவஹர், தந்தையும் மகனுமான இரண்டு தச்சர்கள், இத்தாலியில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

தீ விபத்து உயிர்பலி
கடந்த 2012ஆம் ஆண்டு மே 2ஆம் தேதியன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்ப்பேட்டை என்ற ஊரில் உள்ள கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் நள்ளிரவில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். 56 அடி உயரமுள்ள இந்த தேர் உயர் அழுத்த மின் கம்பியைத் தொட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழாவி போது கள்ளழகர் ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்பட்டது.

கள்ளக்குறிச்சி தேர் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் அமைந்துள்ள அங்காள அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிற்கான திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா கடந்த மார்ச் 8ஆம் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக எலவனாசூர்கோட்டை கள்ளக்குறிச்சி சாலையில் நிலைதடுமாறி தேர் சாலையில் கவிழ்ந்தது. இதில் கோவில் பூசாரி ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பொள்ளாச்சியில் தேர் சாய்ந்தது
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோட்டூர் - பழனியூர் ரோட்டில், பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவிலில் குண்டம் பூ மிதித்தல் விழா மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மீட்கும் பணிஇரவு தேர் திருவிழா துவங்கிய போது, 20 அடி உயரம் உள்ள தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி அம்மன் திருவீதி உலா நடந்தது. கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே தேர் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் கோட்டூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பழனியூருக்கு தேரோட்டம் துவங்கியது. கோட்டூர் சந்தைப்பேட்டை ரேஷன் கடை அருகே நேற்று மதியம் சென்றபோது, எதிர்பாராத விதமாக திடீரென தேரின் சக்கரம், சாக்கடை கால்வாயில் இறங்கி சாய்ந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

திருப்பரங்குன்றம் தேர் விபத்து
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த மார்ச் 22ஆம்தேதி அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருத்தேரில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் சுற்றி வந்தனர். இதில் பெரிய தேருக்கு முன்பாக விநாயகருடன் சட்டத் தேர் ஒன்று, பெண்களால் இழுக்கப்பட்டது. கிரிவலம் முடிந்து மீண்டும் இந்த சட்டத்தேரானது திருக்கோயிலுக்கு முன்பாக நிறுத்த முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார வயர் தேர் மீது பட்டதால் தேர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் உரசியதில் அந்த மின் கம்பம் திடிரென்று சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் பக்தர்கள் யாருக்கும், எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.

கூவாகம் தேர் விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவின் போது விபத்து நேரிட்டதில் பத்து பேர் காயமடைந்தனர். கடந்த புதன்கிழமையன்று அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கூவாகம் தேர்த்திருவிழாவின் போது தேரோட்டத்தை காண அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் ஏராளமான மக்கள் ஏறி இருந்தனர். தேர் வீட்டின் அருகே வந்தபோது திடீரென பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தீ பிடித்த நாமக்கல் தேர்
நாமக்கல் இ.பி. காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பரமத்தி சாலையில் தேர் சென்று கொண்டிருந்தபோது போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரில் உயர் மின்னழுத்த கம்பியில் தேர் மோதாமல் இருப்பதற்காக மின் வாரிய ஊழியர் குமரேசன் என்பவர் நீண்ட குச்சியால் மின் கம்பியை தூக்கிப் பிடித்தார். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி தீ விபத்து ஏற்பட்டது. தீப்பொறி தேரின் மீது விழுந்ததில் தேரின் சில பகுதிகளில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் காயம் அடைந்த மின் ஊழியர் குமரேசன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

களிமேடு தீ விபத்து
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, சப்பர உலா நடைபெற்றது. ஊர்வலம் முடிந்து வளைவில் திரும்பும் போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 12 பேர் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அபசகுனமா?
கோவில் திருவிழாக்களில் நிகழ்ந்த விபத்தும் உயிர்பலியும் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் வேறு இடங்களில் நடந்தால் கூட மக்களிடையே வெறும் துயரத்தோடு மறைந்து விடும். திருவிழாக்களில் நடந்த விபத்து என்பதால் ஏதேனும் அபசகுனம் நிகழ்ந்திருக்கலாமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற தேர் திருவிழாக்கள் நடைபெறும் முன்பாக பரிகார பூஜைகள் செய்து விட்டு தொடங்கினால் விபத்து நிகழாமல் தடுக்கலாம் என்பது ஜோதிடர்களின் ஆலோசனையாகும்.