For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னி நட்சத்திர தோஷ காலத்தில் சுபகாரியம் செய்யலாமா? - என்ன செய்யக்கூடாது

அக்னி நட்சத்திர தோஷ காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்யலாம். கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சில நல்ல காரியங்களை செய்யக்கூடாது தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாட

Google Oneindia Tamil News

மதுரை: ஜோதிட சாஸ்திரத்தில் அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று கூறுவதால் இந்த காலத்தில் சில சுப காரியங்களையும் புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். இந்த ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

ஜோதிடத்தில் உள்ள அஸ்வினி முதல் ரேவதி வடி 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. அப்புறம் எப்படி அக்னி நட்சத்திரம் என்று வந்தது என்று கேட்கலாம். காண்டவ வனத்தை அக்னி தேவன் கபளீகரம் செய்த காலமே அக்னி நட்சத்திர காலம் என்கிறது புராண கதை. ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கிறதோ, அந்த கிரகத்தின் சாரத்தில் செல்வதாக சொல்வார்கள். அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். அப்போது சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. ஆகவேதான் நெருப்புக்கு இணையான வெப்பத்தை கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர். அக்னி நட்சத்திரத்தை முன் ஏழு, பின் ஏழு என 2 பிரிவாக பிரித்து கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். சித்திரை கடைசி வாரம் தொடங்கி, வைகாசி முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது. சித்திரை மாதம், பரணி 4ஆம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் சஞ்சாரிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.

அக்னி நட்சத்திரம் புராண கதை

அக்னி நட்சத்திரம் புராண கதை

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கதை ஒன்று உள்ளது. அதை தெரிந்து கொள்வோம். யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன்.

அக்னி தேவனின் பசி

அக்னி தேவனின் பசி

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, "உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்.

அக்னி தேவனை தாக்கிய நோய்

அக்னி தேவனை தாக்கிய நோய்


அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். "அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே'' என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன். "உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்'' என்றார்.

மழையை தடுத்த அர்ச்சுனன்

மழையை தடுத்த அர்ச்சுனன்

அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன். "நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்'' என்றான். கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், "அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை'' என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான். அப்பொழுது கண்ணன், "அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.

வனத்தை எரித்த அக்னிதேவன்

வனத்தை எரித்த அக்னிதேவன்

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

மேஷத்தில் சூரியன் உச்சம்

மேஷத்தில் சூரியன் உச்சம்

மேஷ ராசி செவ்வாயின் வீடாகும். நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்புக் கோள் செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால் நெருப்பு கிரகமான சூரியன், மேஷத்தில் சஞ்சாரிக்கும் போது வெயில் உக்கிரமாக தகிக்கிறது. கடும் வெப்பம் நிலவும் காலம் என்பதால், அக்னி நட்சத்திர காலம் தோஷ காலமாக கருதப்படுகிறது. அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

 26 நாட்கள் அக்னி நட்சத்திரம்

26 நாட்கள் அக்னி நட்சத்திரம்

இந்த ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். கிராமங்களில் அம்மன் கோவில்களில் கொடை விழா நடைபெறும், பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்

 சுப காரியங்கள் செய்யலாம்

சுப காரியங்கள் செய்யலாம்

இந்த நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.

என்ன செய்யக்கூடாது

என்ன செய்யக்கூடாது

முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உரிக்கக்கூடாது, விதை விதைக்கக்கூடாது, கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது,வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

English summary
Agni nakshathra is also known as katthiri in Tamil.This is adopted from Kartaari in sankrit which means being hemmed in between.This period is the hottest period of summer and is also considered as unsuitable for conducting many auspicious events,thereby making this a period of agni nakshathra dosha Period. Kathiri Veyil is the period when the Sun or Surya passes through the star Kritika also known as Agni Nakshatram. The period is considered to be the peak summer season. In 2019, Kathiri Veyil in Tamil Calendar is from May 4 to May 29.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X