• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வ வளம் தரும் பேரும் புகழும் கிடைக்கும் அபரா ஏகாதசி : பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள்

Google Oneindia Tamil News

சென்னை: அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்ற ஏகாதசி விரதம் அபரா ஏகாதசி விரதம். ஆனி மாதம் அபரா ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை ஒருவர் பெறலாம் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர் என்று பகவான் கிருஷ்ணர் அருளியுள்ளார்.

Apara Ekadashi Today: What are the benefits of worshiping Apara Ekadashi

அபரா ஏகாதசியில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும். காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

பாஜகவில் காலி பசங்க, ரவுடிகளை சேர்த்துட்டாங்க.. நான் ரொம்ப நாளா சொல்றேன்.. ராம சுப்பிரமணியம் ஆவேசம்பாஜகவில் காலி பசங்க, ரவுடிகளை சேர்த்துட்டாங்க.. நான் ரொம்ப நாளா சொல்றேன்.. ராம சுப்பிரமணியம் ஆவேசம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அபரா இந்த ஏகாதசியில் இறைவனை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் மேலும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கி சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி, 'அபரா ஏகாதசி' என அழைக்கப்படும். இந்த ஏகாதசியன்று பெருமாளை திரிவிக்கிரமராக பூஜை செய்யவேண்டும். இந்த ஏகாதசி, பாவங்கள் பலவற்றை நீக்கி, புண்ணியங்கள் அருளும். பிரம்மஹத்தி, பொய் சாட்சி, குருவைத் திட்டி அவமானப்படுத்தியது முதலான கொடிய பாவங்களை எல்லாம் இந்த ஏகாதசி விரதம் போக்கும்.

மாசி மாதத்தில் பிரயாகையில் புனித நீராடல், காசியில் சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை பூஜை செய்வது, கயையில் முன்னோர்களுக்காகப் பிண்டம் அளிப்பது, கேதாரேஸ்வரரைத் தரிசிப்பது, பத்ரிகாசிரமத்துக்குப் புண்ணிய யாத்திரை போவது ஆகியவற்றால் எல்லாம் எந்த அளவுக்குப் புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியத்தையும் ஒருசேர அளிப்பது 'அபரா ஏகாதசி' விரதம்.

அபரா ஏகாதசி புராண கதை

அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டு விடும். இதனால் அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரிஷனை கொல்வதற்கு ஏவினார். அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது.

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தான். அவர்களோ, 'நாங்கள் பக்தர்களுக்கு அடிமை. என் இதயம் பக்தர்கள் வசம் உள்ளது. எனவே நீ அம்பரிஷனிடமே போய் மன்னிப்பு கேள்' என்று கூறினர். முடிவில் துர்வாசர் மன்னனிடமே சென்று மன்னிப்பு கேட்டார். மன்னனும் சக்கரத்தாழ்வாரை பூஜித்து துர்வாச முனிவரை காப்பாற்றினான். துர்வாசர் மன்னனுக்கு நன்றி கூறி ஆசி வழங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் "பார்த்தா!. ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். ஏனெனில் இவ்ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் வழங்க வல்லதால், இதை அபரா ஏகாதசி என்று அழைப்பர். எவர் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர்.

அபரா ஏகாதசி நாளில் பெருமாளை மனதார நினைத்து வணங்கினால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது ஆகியவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகிறது. ஸ்திரீ கமனம், பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம் பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்ற பாப கர்மங்களினால் விளையும் பாபங்களும் இவ் அபரா ஏகாதசி விரதத்தின் மகிமையால் நீங்கப் பெறுகிறது என்று அருளினார்.

க்ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் யுத்த களத்திலிருந்து தப்பி ஓடும் க்ஷத்ரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதத்தின் புண்ணிய பிரபாவம், அத்தகைய க்ஷத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது.

குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை நிந்திப்பவர் நிச்சயம் நரகத்தை அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய குரு நிந்தனை செய்த பாபம் நீக்குவதுடன், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது. மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.

ஏகாதசி விரதத்தின் புண்ணியம்

குரு பகவான் கோட்சாரத்தில் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் கோமதி நதியில் நீராடுதல், கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கேதார்நாத் பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய, சந்திர கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புண்ணிய நீராடுதல் இவற்றால் கிட்டப் பெறும் புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணியத்தை அபரா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறுவர்.

கஜ தானம், அஸ்வம் தானம், யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா ஏகாதசி விரதத்தின் மூலம் ஒருவர் பெறுவர். பசு, பூமி, ஸ்வர்ண இவைகளின் தானத்தால் கிடைக்கப்பெறும் புண்ணிய பலனானது, அபரா ஏகாதசி விரத புண்ணிய பலனுக்கு இணையானதாகும். இவ்விரதமானது பாப விருட்சத்தை அழிக்கும் கோடரி போன்றதாகும். பாபவினைகள் சூழந்து இருண்டிருக்கும் உலகத்திற்கு இருட்டை விலக்கி ஒளியை வழங்கும் சூரியனைப் போன்றதாகும்.

அபரா ஏகாதசி விரதம் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களில் அவசியமான ஒன்றாகும். இவ்விரதம் மற்ற விரதங்களை விட சிறப்பானதும், உத்தமமானதும் ஆகும். அபரா ஏகாதசி நாளன்று, பக்தி பூர்வத்துடன் பகவான் மஹாவிஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். அதனால் இறுதியில் விஷ்ணுலோகப் பிராப்தியை மக்கள் பெறுவர்.

ஹே ராஜன்!, அபரா ஏகாதசி விரத மஹாத்மிய கதையை இவ்வுலக நன்மைக்காக அருளியுள்ளேன். இதை படிப்பதாலும், கேட்பதாலும் அனைத்து பாபங்களும் நீங்கி புது வாழ்வு பெறுவர் என்று பெருமாள் அருளியுள்ளார்.

அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம். எவர் ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர் பகவான் மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவர். பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர் என்பது ஐதீகம்.

இன்றைய தினம் மாலை நேரத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கி வர நம்முடைய பாவங்கள் நீங்கும். அபரா ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் அனைத்துவிதமான பாவங்களும் நீங்குவதுடன், அளவில்லாத செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

English summary
Apara Ekadashi Today. Myths say that by observing the Apara Ekadasi fast, all kinds of sins will be removed and unlimited wealth will be available.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X