For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: திரு உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. "மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்" என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது.

மரகத நடராஜராக காட்சியளிக்கும், மரகதக் கல், முதலில் வீட்டுக்கு உபயோகப்படும் படிக்கட்டாகவே இருந்துள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த கல்லை பரிசோதித்த மன்னரின் ஆட்கள் அது அரிதான பச்சை மரகதக்கல் என்பதை அறிந்து, அதன்பின்பே மரகத நடராஜர் சிலையை உருவாக்கினர்.

தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகப்பழமையான சிவாலயங்கள் உள்ளன. அதில் சமயக்குறவர்கள் என்றழைக்கப்படும் நால்வரால் பாடல் பெற்ற சிவாலயங்கள் 276 உள்ளன. இவற்றில் முதன் முதலில் பாடல் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரியது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் தான். அதனால் தான், எம்பெருமான் ஈசனும் உண்ணுவதும் உறங்குவதும் இந்த உத்தரகோசமங்கை கோவிலில் தான் என்பது ஐதீகம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயமான உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவில் தான் உலகில் உருவான முதல் சிவன் கோவில் என்பதோடு சிவபெருமான் நடன கோலத்தில், நடராஜர் சிலை உருவானதும் இக்கோவிலில் தான். சைவ சமயக்குறவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசம் என்னும் ஒப்பற்ற நூலில் 38 பாடல்களில் இத்தலத்தைப் பற்றி தான் பாடியுள்ளார்.

மரகத நடராஜர் தரிசனம்

மரகத நடராஜர் தரிசனம்

இன்றைய தினம் திருஉத்திரகோசமங்கையில் சந்தனம் கலையப்பட்ட நிலையில் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில்? 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும். சுவாமிக்கு 32 வகையான அபிஷேகம் செய்ததும் பசி எடுத்துவிடுமாம். அதனால், திருஉத்திரகோசமங்கையில் மட்டும் தான் அபிஷேகம் முடிந்ததும், நைவேத்தியம் பண்ணி பிறகு அலங்காரம் செய்வது சிறப்பான ஒன்றாகும்.

அபூர்வ நடராஜர்

அபூர்வ நடராஜர்

பொதுவாக கோவில்களின் கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, பெரும்பாலும் கோவில் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு, ஒரு நல்ல முகூர்த்த நாளில், நல்ல நேரத்தில் முறைப்படி பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இக்கோவிலின் கருவரையில், முதலில் ஐந்தரை அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்து அதன் பின்பே கருவறையை கட்டி முடித்துள்ளனர் என்பது தான் ஆச்சரியம்.

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் கருவறையில் இருக்கும் நடராஜர் சிலை வெறும் கருங்கல்லாலோ அல்லது தற்போது கோவில்களில் உருவாக்கப்படுவது போல் கிரானைட் கல்லாலோ உருவாக்கப்படவில்லை. விலை மதிக்கமுடியாத அரிதிலும் அரிதான பச்சை மரகதக் கல்லால் உருவாக்கப்பட்டது. நடராஜர் சிலை முழுவதுமே மரகத கல்லால் உருவாக்கப்பட்டுள்ளதால் ஆண்டு முழுவதும் சந்தனத்தால் பூசி காப்பிட்டு பாதுகாத்து வருகின்றனர். இந்த நடராஜர் சிலையை மாதிரியாக வைத்து தான் தில்லை நடராஜர் கோவிலில் நடராஜர் சிலையை உருவாக்கினார்கள்.

சந்தனத்தால் பாதுகாப்பு

சந்தனத்தால் பாதுகாப்பு

நடராஜர் சிலை மரகத கல்லால் உருவானது என்பதால், சிலையில் இருந்து வெப்பம் வெளிப்பட்டு சிலைக்கு சேதம் ஏற்படும் என்பதாலும், மரகதக் கல்லுக்கு அதிகமான சத்தத்தையும் அதிர்வுகளையும் தாங்கும் சக்தி கிடையாது என்பதாலும் தான், ஆண்டு முழுவதும் சந்தனத்தால் மூடி பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டுமே சந்தனத்தை களைந்து, பக்தர்களுக்கு மரகத நடராஜரை காண அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் சந்தனத்தால் காப்பிடப்பட்ட நடராஜரைத் தான் காண முடியும். மரகத நடராஜர் என்பதால், மற்ற கோவில்களைப் போல், இக்கோவிலில் மேள தாளங்கள் முழங்குவது கிடையாது.

மீனவரின் நம்பிக்கை

மீனவரின் நம்பிக்கை

இவ்வளவு பெருமை மிக்க இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப் பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

பாறையில் மோதிய படகு

பாறையில் மோதிய படகு

ஒரு நாள், மரைக்காயர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென கடலில் சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அவருடைய பாய்மரப்படகு நிலைகுலைந்து எங்கேயோ அடித்து சென்றது. அப்படியே வெகு தூரம் போனபிறகு, படகு ஒரு பாசிபடர்ந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. அதில் அந்த பாசி படர்ந்த பாறை அப்படியே சரிந்து மூன்று துண்டுகளாக அந்த படகில் விழுந்து விட்டது. பாறை சரிவதற்காகவே காத்திருந்தது போல், அது வரையிலும் அடித்து துவைத்து வந்த பேய் மழையும் சட்டென்று நின்றது. மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, திரும்ப மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால், அவருக்கு தான் எந்த திசையில் இருக்கிறோம் என்ற தெரியவில்லை. உடனே தான் அன்றாடம் கும்பிட்டு வரும் மங்களநாதசுவாமியை மனதில் நினைத்துக்கொண்டு, பல நாட்கள் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தார்.

வெளிச்சத்தில் மின்னிய பாறை

வெளிச்சத்தில் மின்னிய பாறை

கடலுக்கு சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று காத்திருந்த மரைக்காயரின் உறவினர்கள், அவரை உயிரோடு பார்த்த உடன் நிம்மதிப் பெருமூச்ச விட்டனர். மரைக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக் கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், சரி வீட்டுக்கு படிக்கல்லாக இருக்கட்டும் என்று போட்டு வைத்தார். வீட்டுக்குள் போக வரும் ஆட்கள் அந்த பாறைக் கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது.

பாண்டியன் பரிசு

பாண்டியன் பரிசு

பாறை மின்னுவதைப் பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்து, மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு, தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப் பாறை உள்ளது என்று தெரிவித்தார்.

பொற்காசுகள்

பொற்காசுகள்

பாண்டிய மன்னரும், மரைக்காயர் சொன்னதைக் கேட்டு உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த பச்சை பாறைக்கற்களை எடுத்துவரச் சொன்னார். கொண்டு வந்த அந்த பாறைக் கற்களை, அது பற்றிய விவரம் தெரிந்த ஆட்களை வைத்து சோதித்து பார்த்தார். பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழி அனுப்பி வைத்தார்.

சிலை வடிக்க ஆள் இல்லையே

சிலை வடிக்க ஆள் இல்லையே

மரைக்காயரை வழியனுப்பி விட்டு வந்த பாண்டிய மன்னர், இவ்வளவு விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, நடராஜர் சிலை வடிக்க பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தரான ரத்தின சபாபதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை நடராஜர் சிலை வடிக்க அனுப்பி வைக்குமாறு இலங்கை மன்னருக்கு ஓலை அனுப்பி வைத்தார்.

மரகத நடராஜர்

மரகத நடராஜர்

சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கிச் சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாண்டிய மன்னர், அந்த மங்களநாதசுவாமி சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்தார். அப்போது, நான் மரகத நடராஜர் சிலையை வடித்து தருகிறேன் மன்னா கவலை வேண்டாம், என்று ஒரு குரல் கேட்டது.
குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர். உடனே மன்னரின் கவலை நீங்கியது.

ஆடல்வல்லன் நடராஜர்

ஆடல்வல்லன் நடராஜர்

மரகத நடராஜர் சிலையை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அதோடு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். சித்தரும், அந்த பெரிய பாறையில் ஐந்தரை அடி உயர மரகத நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராஜரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி (நடராஜரை பாலாபிஷேகம் செய்யும் போது நாம் பார்க்கலாம்) வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பின்பு பாண்டிய மன்னரை அழைத்து முதலில் நடராஜ மூர்த்தியை பிரதிஷ்டை செய்த, பின்பு கருவறை அமைக்கும் படி அறிவுறை கூறினார். அப்படி செய்ததால் தான், பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லால் ஆன நடராஜர் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார்.

English summary
Surprisingly, Uthirakosamangai Emerald Natarajar Statue, Once upon a time, It has been home made staircase to be used. The king Pandiya who inspected the stone discovered that it was a rare green emerald, and subsequently built the emerald statue of Emerald.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X