For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரமாக எழுந்தருளிய நடராஜரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

கடலூர்: திருவாதிரை நட்சத்திரம் ருத்ரனின் அம்சமாகும். திருவாதிரை நட்சத்திரத்தன்று ஈசனின் ஆனந்த நடன தரிசனம் கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவிதமான நன்மைகளும் கிடைக்கும் பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். மார்கழி திருவாதிரை தினமான இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிஷேசன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றி சொல்ல, ஆதிஷேசனுக்கு தானும் அந்த நடனத்தை பார்க்க ஆவல் ஏற்பட்டது. அதற்காக பாதி உடல் மனிதனாகவும் மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது.

எம்பெருமான் ஈசன் ஆடும் நடனத்திற்கு ஏற்பவே இப்பூவுலகம் அசைகிறது என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். அதற்கேற்பவே, தில்லையில் நடராஜர் ஆடும் நடனமானது காஸ்மிக் நடனம் என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகின்றனர். அணுவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட அணுவின் அசைவானது நடராஜர் ஆடும் நடனத்தைப் போலவே இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அதை உணர்ந்தோ என்னவோ, திருமந்திரம் அருளிய திருமூலர் கூட அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறியிருக்கிறார்.

நடராஜரின் சிவ தாண்டவம்

நடராஜரின் சிவ தாண்டவம்

சிவபெருமானின் பஞ்ச சபைகள் என போற்றப்படுபவை சிதம்பரம் கனகசபை, திருவாலங்காடு ரத்தினசபை, மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிரசபை, திருக்குற்றாலம் சித்திரசபை. இங்கெல்லாம் சிவபெருமான் பலவகை நடனங்களை ஆடியுள்ளார். திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவத்தையும் அவிநாசியில் ஊர்த்தவ தாண்டவத்தையும், மதுரையில் சுந்தர தாண்டவத்தையும் திருவாரூரில் அஜபா தாண்டவத்தை தில்லையில் ஆனந்த தாண்டவத்தையும் பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம். திருநெல்வேலியில் காளிகா தாண்டவம், திருப்பத்தூரில் கவுரிதாண்டவம், குற்றாலத்தில் திரிபுரதாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்தவதாண்டவம் ஆடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவாதிரை திருவிழா

திருவாதிரை திருவிழா

சிவபெருமான் தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற்றவை. மார்கழி மாதத்தில் நடராஜ பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவார்கள் என்பது ஐதீகம். மேலும் மார்கழி மாத திருவாதிரை உற்சவம் விழா அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்

கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில். பரதம் என்னும் நாட்டியக் கலையை தோற்றுவித்த நாயகரான நடராஜர் நாட்டியமாடும் கோலத்தில் இருக்கும் தலம். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. பூலோக கைலாயம் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

நடனமாடிய நடராஜர்

நடனமாடிய நடராஜர்

நள்ளிரவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆருத்ரா தரிசனம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவ ஆலயங்களில் தரிசனம்

சிவ ஆலயங்களில் தரிசனம்

சேலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நடராஜரை வழிபட்டனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் சேலம் சுகவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று. இத்திருத்தலத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நள்ளிரவு நடராஜருக்கு பல வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

நடராஜர் தரிசனம்

நடராஜர் தரிசனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜரை தரிசனம் செய்தனர். இதேபோல உத்தமசோழபுரம் கரபுரநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நடராஜ பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தினுள் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து சாப விமோசனத்திற்காக ஆகாய கங்கையை அழைத்த நடராஜ பெருமான், பெரு வெள்ளம் கொண்டு பூமியை நோக்கி வந்த ஆகாய கங்கையை தனது ஜடா முடியில் கட்டி விட, இதனை கண்ட அம்மாள் கோபித்துக் கொண்டு சென்றதாகவும், இதனை ஆடாலசுந்தரராக தற்போது வாழும் ஓதுவார்கள் தீர்த்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

English summary
Thousands of Devotees witness to Tamil Nadu Chidambaram, Tiruvannamalai, Tiruvalangau, Uttarakosamangai Arudra Darisanam festival on Wednesday December 30, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X