For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாற்பது ஆண்டுகள் தண்ணீருக்குள் தவம்... 48 நாட்கள் மக்களுக்கு தரிசனம் - காஞ்சி அத்திவரதர் கதை

அத்திரவரதரை தரிசனம் செய்ய நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு திரண்டு வருவதால் காஞ்சிமாநகரமே மக்கள் வெள்ளத்தினால் திணறி வருகிறது. நாற்பது ஆண்டு காலம் தண்ணீரில் தவமிரு

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: அத்திரவரதரை தரிசனம் செய்ய நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு திரண்டு வருவதால் காஞ்சிமாநகரமே மக்கள் வெள்ளத்தினால் திணறி வருகிறது. நாற்பது ஆண்டு காலம் தண்ணீரில் தவமிருந்த ஸ்ரீஆதி அத்திவரதர் தற்போது ஆனந்தசரஸ் குளத்தினை விட்டு வெளியே வந்துள்ளதால் அவரை தரிசிக்க குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர் என விவிஐபிக்கள் முதல் சாதாரண குடிமகன்கள் வரை ஆவலுடன் காஞ்சிக்கு வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்தி வரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளினார். அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. இந்த பெருமாளை, மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் முதல் 24 நாட்கள் கிடந்த நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிலை சற்று பலவீனமாக இருப்பதால், சிலையை நிற்கும் நிலைக்கு மாற்றி ஆகஸ்ட் 1 முதல் 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதரின் தரிசனம் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்பதால் வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசித்து விடவேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அத்திவரதரை தரிசனம் செய்தால் மோட்சம் பெறலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வருகை தருகின்றனர். அத்தி வரதர் ஏன் 40 ஆண்டுகள் குளத்திற்குள் இருக்கிறார். 48 நாட்கள் மட்டுமே ஏன் வெளியே வந்து தரிசனம் தருகிறார் என தெரிந்து கொள்வோம்.

அத்திவரதர் புராண கதை

அத்திவரதர் புராண கதை

ஆதி அத்தி வரதர் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய புராணகதை. ஒரு முறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கர, கதை மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் தரிசிக்க விரும்பினார். இதற்காக கடுமையாக தவம் செய்தார். பகவான் விஷ்ணு ஒரு புஷ்கரணி வடிவத்தில் தோன்றினாராம். பிரம்மா மேலும் தவத்தை தொடர பகவான் நாராயணர் காட்டின் வடிவத்தில் தோன்றினாராம். அந்த காடு இன்றைக்கும் நைமிஷாரண்யம் எனப்படுகிறது.

பிரம்மா செய்த யாகம்

பிரம்மா செய்த யாகம்

பகவான் நாராயணரை நான்கு கரங்களுடன், தரிசிக்க நூறு அஸ்வமேத யாகங்களைப் செய்ய வேண்டும் என்று ஒரு அசரீரி உரைத்தது.

நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதன் சிரமத்தை எண்ணி பிரம்மதேவர் வருந்திய போது, காஞ்சியில் செய்யப்படும் ஓர் அஸ்வமேத யாகம் நூறு அஸ்வமேத யாகத்திற்கு சமம் என்பதை அறிந்து, காஞ்சியில் யாகத்தை நிகழ்த்தினார்.

 தரிசனம் கொடுத்த வரதராஜர்

தரிசனம் கொடுத்த வரதராஜர்

யாகத்தில் கலந்து கொள்ள சரஸ்வதி தேவி கால தாமதமாக வந்ததால், பிரம்மா யாகத்தை காயத்ரி தேவியின் துணையுடன் மேற்கொண்டார்.

இச்செய்தியை அறிந்த சரஸ்வதி தேவி கடும் கோபம் கொண்டு, யாகசாலயை மூழ்கடிப்பதற்காக வேகவதி ஆறாக பெருக்கெடுத்து வந்தாள்.

பிரம்மாவின் யாகத்தை காக்க நாராயணர் நதிக்கு நடுவில் சயன கோலம் பூண்டார், இதனால் சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொள்ள யாகம் சிறப்பாக நிறைவு பெற்றது. யாகத்தில் பிரம்மாவின் விருப்பத்தின்படி பகவான் நாராயணர் நான்கு கரத்தில் ஸ்ரீ வரதராஜராக காட்சியளித்தார்.

கேட்ட வரம் தரும் பெருமாள்

கேட்ட வரம் தரும் பெருமாள்

பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மாவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவரை வணங்கி விரும்பிய வரத்தை பெற்றுக் கொண்டார்.

அனைவரும் கேட்ட வரத்தை கொடுத்த பெருமாளை வரதராஜ பெருமாள் என்று அழைத்தனர். பிரம்மதேவர் இன்றும் சித்தரை மாத பௌர்ணமியன்று நள்ளிரவில் வரதரை தரிசிக்க வருவதாகக் கூறப்படுகிறது. தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.

அத்திவரருடன் யாகம்

அத்திவரருடன் யாகம்

பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார். ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார். வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார்.

நீருக்குள் போன பெருமாள்

நீருக்குள் போன பெருமாள்

அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார். யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது.

அத்திவரதருக்கு பாதுகாப்பு

அத்திவரதருக்கு பாதுகாப்பு

கிருத யுகத்தில் பிரம்மா தரிசித்த பகவான் நாராயணரை பிரம்மாவினுடைய அறிவுறுத்தலின் பேரில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா அத்தி மரத்தைக் கொண்டு ஒரு திருவிக்ரஹமாக வடித்தார். அவரே இக்கோயிலில் மூல விக்ரஹமாக 16ஆம் நூற்றாண்டு வரை வழிபடப்பட்டு வந்தார்.

இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பின்போது வரதரை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, கோயிலுக்குள் இருந்த புஷ்கரணிக்கு உள்ளே வரதர் மறைத்து வைக்கப்பட்டார். வரதர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை கோயிலின் தர்மகர்த்தா குடும்பத்தைச் சார்ந்த இரண்டு சகோதரர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.

 காஞ்சிக்கு வந்த தேவராஜ ஸ்வாமி

காஞ்சிக்கு வந்த தேவராஜ ஸ்வாமி

நாற்பது வருடங்கள் கோயிலில் விக்ரஹம் இல்லாமல், பூஜை ஏதும் நிகழாமல் கழிந்தது. தர்மகர்த்தா சகோதரர்களும் மரணமடைய, அவரது மகன்கள் 40 வருடங்களுக்கு மேலாக விக்ரஹத்தை எல்லா இடங்களிலும் தேடினர். ஆயினும் வரதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உற்சவ மூர்த்திகள் மட்டும் உடையார் பாளையம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர். ஆயினும் அத்தி வரதரைக் காண முடியவில்லை என்பதால், காஞ்சிக்கு அருகிலுள்ள பழைய சிவரத்திலிருந்து தேவராஜ ஸ்வாமியினை காஞ்சிக்கு கொண்டு வருவது என்ன முடிவு செய்யப்பட்டது. இருவரது தோற்றமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது, அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதன்படி, தேவராஜர் காஞ்சிபுரத்திற்கு வந்து மூலவராக அமர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொண்டார்.

வெளியே வந்த அத்திவரதர்

வெளியே வந்த அத்திவரதர்

1709ஆம் ஆண்டு ஆனந்தசரஸ் கோயில் குளத்திலிருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றிய தருணத்தில், அங்கு சயனகோலத்தில் அத்தி வரதர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கோயில் சேவகர்கள் அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து 48 நாட்கள் மட்டும் பூஜை செய்வது என்று முடிவு செய்தனர், அதன்படி அத்தி வரதர் இன்றும் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தருகிறார். அவர் நீருக்குள் சென்றதற்கு எத்தனையோ புராண கதைகள் சொன்னாலும் அவர் தமது சுய விருப்பதினாலேயே நீருக்குள் வீற்றிருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

அவரை இனி குளத்திற்குள் வைக்க வேண்டாம் நிரந்தரமாக வெளியே வைத்து விடலாம் என்று சிலர் கூறினாலும் பெருமாளின் விருப்பத்தை மீற வேண்டாம் என்று பக்தர்கள் கூறி வருகின்றனர். அத்திவரதரை நீங்களும் பாதுகாப்பான தரிசனம் செய்துவிட்டு வரலாமே.

English summary
The 48 day festival has gained a lot of traction following the visit of high profile political leaders who visited Kancheepuram to offer prayers to Lord Athi Varadar.An incarnation of Lord Vishnu, the deity Lord Athi Varadar is a 9-feet tall idol made out of the fig tree, which is brought out of Varadaraja Perumal temple tank every 40 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X