சபரிமலை ஐயப்பன் திருவாபரணம்: மகரவிளக்கு பூஜை நாளில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பன்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நேரத்தில் அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு நாளை முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் அரச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த ஆபரண பெட்டிகளை காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர்.
மகர விளக்கு பூஜை சன்னிதானத்தில் நடைபெறும் சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஒளிரும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க தங்க ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். பொன்ஆபரணங்களை அணிந்து அரசனாக காட்சி அளிக்கும் ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகர விளக்கு பூஜையைக் காண வருவார்கள்.
முழு ஊரடங்கு: அப்படியே சைக்கிளை எடுத்து.. 5 கி.மீ ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.. வியந்து போன மக்கள்!
ஐயப்பனின் புனித தங்க நகைகளானது திருவாபரணம் என்று அழைக்கப்படுகிறது. திருவாபரணப் பெட்டி மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது. திருவாபரணப் பெட்டி,வெள்ளிப் பெட்டி,கொடிப் பெட்டி,திருவாபரணப்பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னிதியை அடைகிறது. மாளிகைப்புறத்தம்மன் சன்னிதிக்கு கொடிப்பெட்டி கொண்டு செல்லப்படும்.

சொக்கத்தங்கத்தால் ஆன திருவாபரணங்கள்
பந்தளம் அரண்மனையின் பொறுப்பில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வெளியே கொண்டு வரப்படுகிறது. சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன அந்த ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது. பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு பந்தள மன்னரால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

பந்தளம் அரண்மனையில் திருவாபரணம்
பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக பந்தளமன்னர் குடும்ப பிரதிநிதி உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களே இந்த பெட்டிகளை சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.

மூன்று நாட்கள் ஊர்வலம்
திருவாபரணத்தின் மூன்று நாள் ஊர்வலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி தொடங்குகிறது. அரச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த ஆபரண பெட்டிகளை காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர். திருவாபரணம் சபரிமலை கோவிலுக்குள் செல்லும்போது, ஊர்வலத்தின் மூன்றாம் நாளாகிய மகர ஜோதி தரிசனம் நடைபெறும். பொன்ஆபரணங்களை அணிந்த ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும்.

என்னென்ன ஆபரணங்கள்
ஐயப்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்ம சாஸ்தாவை அலங்கரிக்கும் ஆபரணங்கள் உள்ளன. திருமுகம், ப்ரபா மண்டலம், பெரிய கத்தி, சிறிய கத்தி, யானை விக்ரஹம், புலி விக்ரஹம், வெள்ளியால் சுற்றப்பட்ட வலம்புரி சங்கு, பூக்களை வைக்கும் தங்கத்தட்டு, பூர்ணா, புஷ்கலா தேவியர் உருவம், நவரத்தின மோதிரம், சரப்பளி மாலை, தங்க இதழ்களால் ஆன வில்வ மாலை, நவரத்தினங்களால் ஆன மணிமாலை, தங்க எருக்கம்பூக்களால் ஆன மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.

மாளிகைப்புறத்தம்மன்
வெள்ளிப் பெட்டியில் தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்ரங்களும் இருக்கின்றன. இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும். மூன்றாவது பெட்டியான கொடிப்பெட்டியில் யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள் குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன. கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மாளிக்கப்புறத்து தேவி சரம்குத்தி வரையில் யானையில் பவனி வருவார்கள்.

அரசனாக காட்சித்தரும் ஐயப்பன்
இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று சபரிமலைக் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை காலையில் திருவாபரண ஊர்வலம் தொடங்குகிறது. திருவாபரணம் ஊர்வலத்தையும் அந்த ஆபரண பெட்டி சன்னிதானத்தை அடைவதை காண்பதே ஒரு பரவசமான அனுபவமாக இருக்கும். ஜனவரி 14ஆம் தேதி வானத்தில் மகர நட்சத்திரம் உதிக்கும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும். தங்க ஆபரணங்களில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்கு பக்தர்களுக்கு பேரானந்தம் ஏற்படும். மெய்சிலிக்கும் அந்த அனுபவத்தை வர்ணிக்க வார்தைகள் கிடையாது.

பொன்னம்பல மேட்டில் மகரஜோதி
அந்தக் கணமே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் பார்ப்பது தனி பரவசம். கொரோனா பரவல் அதிகரித்திருந்தாலும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஜனவரி 20ஆம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தாரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகளை தொடர்ந்து அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.