• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கமான தாய்மாமன் உறவு - உங்க ஜாதகத்தில் புதன் எப்படியிருக்கு?

By Mayura Akilan
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: தாய் மாமன் உறவு என்பது ஆழமான உறவாகும். அது குழந்தையின் தாயை பொறுத்தே அமையும். ஜோதிடத்திற்க்கும் தாய்மாமன் எனும் உறவிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டிற்குமே காரகர் புதன்தான் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமில்லை. புதனின் அதிதேவதையும் தாய்மாமனை குறிக்கும் தெய்வமும் விஷ்ணுதான் என்கிறது.

புதனின் முக்கியக் காரகமாக தாய் மாமன் உறவு வருகிறது. அதனால தாங்க இன்றைய ஹீரோவான புத பகவானுக்கு "மாதுல காரகன்" என்ற சிறப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Budan important role and link with maternal uncle

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். குழந்தை பிறந்த உடன் முதலில் தெரிவிக்க வேண்டிய நபர்களில் தாய்மாமனும் ஒருவர். அதனால் புதிய வரவான குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது.

குழந்தையின் தாய்மாமன் வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டாலும், குழந்தையை பார்க்க ஒரு சில நாட்களில் வரவேண்டும் என பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள். சகோதரி தனக்கு கொடுத்த அன்பு, மரியாதையை அந்த குழந்தை மீது தனது கடைசி காலம் வரை தாய்மாமன் வைத்திருப்பான்.

ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாகும்.

"குழந்தைக்கு அன்னப்பராசனம் பண்ணனும். மடியில் உட்கார வெக்க மாமா வந்தாச்சா?"

"குழந்தைக்கு முதல் முடி குலதெய்வம் சன்னதியில் இரக்கவேண்டும். மடியில உட்காரவெக்க குழந்தையோட மாமா வந்தாச்சா பாருங்கோ!"

"குழந்தைக்கு காது குத்தனும். மடியில் உட்கார வைக்க குழந்தையோட மாமா யாரோவது இருக்காளா?"

"குழந்தைக்கு உபநயன முகூர்த்தம் நெருங்கிண்டு இருக்கு! குழந்தையை தோள் தூக்க மாமா இருக்காரா?"

"பொண்ணு பெரியவளாயிட்டா! இது அவ மாமா வாங்கி குடுத்த பட்டு பாவாடை தாவனி"

"மாங்கல்ய தாரண முஹூர்த்தம் நெருங்கிண்டு இருக்கு! பெண்ணை தோள் தூக்க மாமா யாரும் இருக்காளா?"

"தாய்மாமன் பட்டம் கட்ட யாரும் இருக்கிறார்களா?"

"மாமன் கோடி போட யாரும் வந்திருக்கிறார்களா?"

மேலே கூறியதெல்லாம் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? இவையெல்லாம் ஒரு குழந்தை பிறந்ததுமுதல் கடைசியில் காடு சேர்வது வரை "மாமா" எனும் தாய் மாமனுக்கு வழங்கும் சிறப்பாகும்.

தற்போது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதெல்லாம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது. பல குழந்தைகள் பெற்றுவந்த காலங்கள் போய் "இரண்டு பெற்றால் இன்ப மயம்" என்றானது. பின் அதுவும் மறைந்து "ஓன்று பெற்றால் ஒளிமயம்" என்றானது. பின் அதுவும் மறைந்து "நாமே குழந்தை - நமக்கேன் குழந்தை" என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.

ஒரு குழந்தையை நன்றாக வளர்தாலே போதும் என நினைப்பதால் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு சகோதர பாசம் என்பதே என்னவென்று தெரியாது. அதனால் அவர்களுக்கு பிறக்கபோகும் குழந்தைகளுக்கு அத்தை,மாமா,சித்தி போன்ற உறவுகளை இருக்காது.

எல்லா விஷயங்களுக்கும் பாதுகாப்பாக "பேக்அப்" (Backup) வைத்துக்கொள்ளும் இந்த கார்பரேட் கம்யூனிடி தங்கள் குழந்தைகளுக்கு ஒரு "பேக்அப்" இல்லாத பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் அபாயகரமான நிலையாகும்.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது வருடங்கள் கழித்து "தாய் மாமன்" என்பது வழக்கொழிந்த வார்த்தையாகி அகராதியில் இருந்தே நீக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

ஜோதிடத்தில் தாய்மாமன்:

ஜோதிடத்திற்கும் தாய்மாமன் எனும் உறவிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டிற்குமே காரகர் புதன்தான் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமிலை. புதனின் அதிதேவதையும் தாய்மாமனை குறிக்கும் தெய்வமும் விஷ்ணுதான் என்கிறது.

"அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்" எனும் பொருள் பொதிந்த பாடலில் காலபுருஷ முதல் ராசியான செவ்வாயை குறிக்கும் முருகனுக்கு அதன் ஆறாம் பாவம் விஷ்ணுவை குறிக்கும் புதன் வீடு எனும் உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

புதனின் முக்கியக் காரகமாக தாய் மாமன் உறவு வருகிறது. அதனால தாங்க இன்றைய ஹீரோவான புத பகவானுக்கு "மாதுல காரகன்" என்ற சிறப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் தாய்மாமனை குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும். ஆறாம் பாவத்ததின் நிலையைக்கொண்டு தாய்மாமனை பற்றியும் அவரின் ஆதரவை பற்றியும் அறிந்துக்கொள்ள இயலும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

சகோதரியின் குழந்தைக்கு எந்த பிரச்சனை என்றாலும் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என நினைத்து குழந்தையின் தாய்மாமா ஓடி ஓடி உதவி செய்வதால்தான் ஒருவருக்கு ஆறாம்பாவம் வலுக்க கூடாது என்றார்கள் போலும்.

ஒரு ஜாதகத்தில் புதனின் நிலையை வைத்து ஒருவரின் தாய்மாமனின் தன்மையை அறியமுடியும்.

1. புதன் சுபத்துவம் பெற்று ஆட்சி உச்சம் பெற்று நின்றால் மற்றும் சுய சாரத்தில் நின்றால் ஒருவருக்கு தாய்மாமனால் அனுகூலம் எப்போதும் உண்டு.

2. புதன் 6/8/12 தொடர்பு பெற்று நின்றால் தாய்மாமனுடன் விரோதம் ஏற்பட்டு பிரிந்து நிற்க நேறும்.

3. சூரியனுடன் சேர்ந்து நிற்கும் புதன் அரசாங்க செல்வாக்குள்ள மற்றும் அரசியல் தொடர்புள்ள கம்பீரமான தோற்றமுள்ள தாய்மாமனால் அனுகூலம் ஏற்படும். தாய்மாமன் கல்வியில் சிறந்து விளங்குவார்

4. சந்திரனுடன் சேர்க்கை பெற்ற புதனால் அழகிய கலா ரசனையுடன் கூடிய தாய் மாமன் அமைவார். என்றாலும் வளர்பிறை சந்திரன் சேர்க்கை மாமனால் அனுகூலமும் தேய்பிறை சந்திரன் சேர்க்கை மாமனால் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

5. செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற புதன் வீரமுள்ள தாய்மாமனை குறிக்கும் என்றாலும் தாய்மாமன் ஆதரவு அவ்வளவு சுகமாக இருக்காது. தாய்மாமனின் மகனை மணப்பதை குறிக்கும்.

6. குருவுடன் சேர்க்கை பெற்ற புதன் ஆன்மீகம் மற்றும் சிறந்த அறிவாளியான தாய்மாமனை குறிக்கும். புதன் வியாபார காரகன் என்பதாலும் குரு தன காரகன் என்பதாலும்மாமன் செல்வ செழிப்போடு விளங்குவார். ஆனால் உதவி செய்துவிட்டு சொல்லிகாண்பிக்கும் தன்மை கொண்டவராக இருப்பார்.

7. சுக்கிரனோடு சேர்க்கை பெற்ற புதன் சிறப்பான அம்சமாகும். தாய்மாமன் அழகானவராகவும் வசதிவாய்போடு இருப்பதையும் தாய்மாமனின் மகளை மணப்பதையும் குறிக்கும்.

8. சனியோடு சேர்க்கை பெற்ற புதன் தாய்மாமனின் தரித்திர நிலையையும் கல்வியற்ற தன்மையையும் தாய்மாமன் மூத்தவர் என்பதையும் குறிக்கும். மேலும் தாய்மாமன் கடுமையான உழைப்பாளி என்பதையும் குறிக்கும். சனியுடன் சேர்க்கை பெற்ற நிலையில் நமக்கு தாய்மாமனை பிடிக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது அல்லவா?

9. ராகுவோடு சேர்ந்த புதன் அதிக எண்ணிக்கையிலான தாய் மாமனையும் கேதுவோடு சேர்ந்த புதன் மாமன் இருந்து மறைதல் அல்லது இல்லாமலே இருத்தல் போன்ற தன்மையை குறிக்கும். மற்றபடி ராகு/கேது சேர்க்கை தாய்மாமன் கலாச்சாரத்திற்கு புறம்பான நிலையில் இருப்பதை குறிக்கும்.

சகோதர பலம் மற்றும் தாய்மாமன் அனுகூலம் தரும் பாண்டவ தூத பெருமாள்:

பெண்களுக்கு தங்கள் சகோதரருடன் பிரச்சனையா? உங்கள் குழந்தைகளுக்கு தாய்மாமனால் அனுகூலம் இல்லையா? உங்களுக்கு தாய்மான் அனுகூலம் வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய திருக்கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது.

புதனின் அதிதேவதையான விஷ்ணு ஸ்வருபமான கிருஷ்ணரே பாண்டவ தூத பெருமாளாக கோயில் கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், (ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரக் கோவில் )- காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு காட்சி யளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.

இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப் பட்டது. இங்குள்ள கல்வெட்டுக் களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்ற திருத்தலம் இதுவாகும்.

ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்க இங்கு வந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானைபணிந்து செல்ல, எல்லா தொல்லையும் நீங்கி சுக வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

ரோஹினி நக்ஷத்திரத்தில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என கூறுவர். அதுபோன்ற தோஷமுடையவர் இத்தலத்திலுள்ள திரௌபதிக்கு உதவிய பாண்டவ தூத பெருமாளை வணங்க தாய்மாமனுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

குழந்தை கொடி சுற்றி பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பார்கள். அவர்களும் குழந்தை மற்றும் அதன் தாய்மாமனும் இந்த கோயிலுக்கு வந்து புதன் கிழமையில் வணங்கினால் இருவருக்கும் தோஷங்கள் நீங்கும்.

English summary
Budan also influences one's relationship with maternal uncle (Thai maman)Budan or Mercury in Vedic Astrology rules over your friends, maternal uncle, neighbours, relatives, communication skills, speech, sense of humor, writing skill, etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X