For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பர ரகசியம்... பார்க்க முக்தி தரும் தில்லை என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் பொன்னால் ஆன வில்வத்தள மாலை தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் பார்க்க முக்தி தரும் தில்லை என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

கடலூர்: சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் தங்கத்தால் ஆன வில்வத்தள மாலை தொங்கும் காட்சியைப் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் பார்க்க முக்தி தரும் தில்லை என்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்துள்ளது. சிதம்பரம் என்பதை பிரித்தால் சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. மனிதனே உன்னிடம் ஏதும் இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். நடராஜர் ஆலயத்திற்கு பொன்னம்பலம் என்ற பெயர் உள்ளது. பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது.

நடராஜர் வடிவம்

நடராஜர் வடிவம்

சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம். சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது.

மனித உடலும் நடராஜர் ஆலயமும்

மனித உடலும் நடராஜர் ஆலயமும்

சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர்.

ஆனந்த தாண்டவத்தில் அகிலமும் இயங்கும்

ஆனந்த தாண்டவத்தில் அகிலமும் இயங்கும்

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம். மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது.

நடராஜருக்கு நாட்டியாஞ்சலி

நடராஜருக்கு நாட்டியாஞ்சலி

நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. நடராஜருக்காக இக்கோவிலில் நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நடராஜர் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். சிதம்பர ரகசிய பீடத்தின் வாயிலில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கும் காட்சி மட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.

ஆகாய உருவத்தில் இறைவன்

ஆகாய உருவத்தில் இறைவன்

மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன் கிடைக்கும். ஆனால் எவ்வித பலனையும் சிந்திக்காமல் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனைத்தான் பார்த்தாலே முக்தி தரும் தில்லை என்று சொல்கின்றனர்.

மனக்கண்ணால் இறைவனை தரிசிக்கலாம்

மனக்கண்ணால் இறைவனை தரிசிக்கலாம்

இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும் என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு மூலஸ்தானம். அருவ வடிவமாக, இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும். அதனால் சிதம்பரம் ஆகாயத் தலமாகவும் போற்றி வணங்கப்படுகிறது.

அபிஷேக பிரியன்

அபிஷேக பிரியன்

நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம்.
நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம். இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

காஸ்மிக் டான்ஸ்

காஸ்மிக் டான்ஸ்

சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் காஸ்மிக் டான்ஸ் என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் வருகின்றனர். இந்த அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருவது சிறப்பு. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்.

மன நிம்மதி தரும் கோவில்

மன நிம்மதி தரும் கோவில்

பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

English summary
Chidambara Rahasiyam the secret of Chidambaram is a Hindu belief that there is a secret message conveyed through the embossed figure near the shrine of Shiva in the Chidambaram Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X