For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவனின் ஆகாயத்தலம்...பொன்னம்பல நாதர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த அதிசயங்கள்

பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

Google Oneindia Tamil News

கடலூர்: சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள். திருவாதிரை திருவிழா நடைபெறப்போகும் இந்த நன்னாளில் சிதம்பரம் பொன்னம்பலமாகவும், ஆகாய தலமாகவும் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த அதிசயங்களை பார்க்கலாம்.

ஆகாயம்,பூமி, காற்று, நீர், நெருப்பு என்பவை பஞ்ச பூதங்கள். இந்த பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.

சிதம்பர ரகசியம்... பார்க்க முக்தி தரும் தில்லை என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.

சிதம்பரம் கோவில் தல புராணம்

சிதம்பரம் கோவில் தல புராணம்

சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பொன்னால் வேயப்பட்ட கருவறை

பொன்னால் வேயப்பட்ட கருவறை

சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள். நடராஜர் சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

அபிஷேக ஆராதனைகள்

அபிஷேக ஆராதனைகள்

தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

எமனும் சித்ரகுப்தனும்

எமனும் சித்ரகுப்தனும்

சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.
திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

கோபுரங்களின் அற்புதம்

கோபுரங்களின் அற்புதம்

இந்த ஆலயத்தில் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூணை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும்.

சிதம்பரம் கோவிலில் அதிசயங்கள்

சிதம்பரம் கோவிலில் அதிசயங்கள்

புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார். ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம்.

படிக்காசு கொடுத்த நடராஜர்

படிக்காசு கொடுத்த நடராஜர்

தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.

அறுபத்து மூவர் வரலாறு

அறுபத்து மூவர் வரலாறு

திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான். தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம். தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால் நந்தனார் சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

திருமுறைகளை சொன்ன பிள்ளையார்

திருமுறைகளை சொன்ன பிள்ளையார்

சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை மூத்த நாயனார் என்று அழைக்கின்றனர். சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.

English summary
The Thiruvathirai festival is one of the important festivals of Chidambaram. It is said that one should eat Thiruvathiraikali on that day. Chidambaram Natarajar Temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X