For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்துமஸ் 2019: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - வாழ்த்துக்களை பரிமாறிய கிறிஸ்துவர்கள்

மார்கழி பனி பொழியும் நள்ளிரவு நேரத்தில் நட்சத்திரங்கள் உதித்து வழிகாட்ட தேவ மைந்தன் பிறப்பு நிகழ்ந்தது. அந்த நாளை இன்று உலகமே கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி வருகிறது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற

Google Oneindia Tamil News

சென்னை: தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில். தேவன் எல்லாம் அறிந்தவர். தேவன் எல்லாம் வல்லவர் என்கிறது தேவனுடைய வேத ஆகமம். மண்ணில் பிறந்த மக்களை ரட்சிக்க ஏசு மகான் பிறந்த நாள் குளிர் நிறைந்த ஒரு நாளில்தான் என்ற நம்பிக்கை உள்ளது அதனடிப்படையில் இன்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த ஏசு பிரானின் பிறந்த நாளை இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இயேசு பிறந்த போது 'ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று' என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை என்று அழைக்கிறோம்.

"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்...அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு எனப்படும். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. இப்போதும் அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். என் நாமத்தினால் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார்

இயேசு பிறந்த ஊரான பெத்லகேமில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பெத்லகேமில் முகாமிட்டுள்ளனர். இயேசு கிறிஸ்து பிறந்த வரலாற்றை குறிக்கும் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, வாடிகன் நகரில் உள்ள புனித பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

வீடுகளில் அலங்காரம்

வீடுகளில் அலங்காரம்

இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் விதமாக டிசம்பர் மாதம் பிறந்த உடனே கிறிஸ்துவ மக்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரத்தை கட்டி அலங்கரித்திருந்தனர். அலங்கார குடில்களை அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தும் தேவ மைந்தனை வரவேற்றனர். வீடுகளில் கூட்டு பிரார்த்தனை செய்த பின்னர் சுவையான பலகாரங்களை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

தேவாலயங்களில் பிராத்தனை

தேவாலயங்களில் பிராத்தனை

நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு கூடிய கிறிஸ்துவர்கள் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு நள்ளிரவு திருப்பலியில் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிறகு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.சி. வெஸ்லி தேவாலயத்தில், அதிகாலை 4.30 மணி மற்றும் 8.30 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குழந்தை இயேசு ஜனனம்

குழந்தை இயேசு ஜனனம்

கிறிஸ்துவர்களின் புனித தலமாக போற்றப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். கிறிஸ்து பிறப்பினை நினைவு கூறும் வகையில், குழந்தை இயேசுவின் பிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

விடிய விடிய பிரார்த்தனை

விடிய விடிய பிரார்த்தனை

ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டபின், குடிலில் குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பேராலயத்தைச் சுற்றியுள்ள மலர் செடிகளில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன. இப்பண்டிகையை முன்னிட்டு, நேற்றிரவு சிலுவைப் பாதையில் பக்தர்கள் மண்டியிட்டுச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள்

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள்

புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. குடும்பம் குடும்பமாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். சேலம் குழந்தை ஏசு தேவாலயம், கோவை மைக்கேல் ஆதித்தூதர் பேராலயம், குமரி மாவட்டம் கோட்டார் சவேரியார் பேராலயம் ஆகிய இடங்களிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஒருவருக்கொருவர் அன்போடு வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம் என்று கூறிக்கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் பிறந்த மகான் பிறந்த நாளினை அனைவரும் கொண்டாடுவோம்.

English summary
Midnight Mass held in churches across country on Christmas Eve. Christmas was celebrated with usual gaiety and fervour in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X