For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2016: ஆனி போய் ஆடி வந்தா யாருக்கு டாப்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.

வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் கிருஷ்ண பட்ச அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், காலை மணி 9.23க்கு கன்யா லக்னத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் குரு பகவான் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி இராசிக்கு ஆடி 27ம் நாள், 11.8.2016 வியாழன் அன்று இரவு 9:28 மணி அளவில் பிரவேசிக்கிறார். ஆக மொத்தத்தில் ஆனி போய் ஆடி வந்தால் சில ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களும், சிலருக்கு லேசான பாதிப்பும் ஏற்படும்.

Effect of Jupiter Transit in Virgo

மனிதர்களின் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார்

எப்ப கல்யாணம் நடக்கும் என்று ஜோதிடரிடம் கேட்டால் அடுத்த ஆண்டு வியாழ நோக்கம் வரும் போது திருமணம் முடிக்கலாம் என்று கூறுவார்கள்.

பொதுவாகவே ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ,திசா புத்திகளின் அமைப்பை கொண்டு திருமண காலம் அமைகிறது. திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் தசாபுத்தி சரியாக அமையாதபொழுது,அவரின் ராசியிலிருந்து குரு,2,5,7,9,11ம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை நீங்கிறது. இதுவே குரு நோக்கமாகும்.

இன்னும் தெளிவாக சொல்வதன்றால்,ஆண்களுக்குகோச்சாரப்படி குரு உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் குரு உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.

புத்திரம், அறிவு விருத்திக்கு குரு காரகன் ஆவார். ஆண் கோள். ஆகாயத் தத்துவக்கோள். இக்கோள் சூரியனுக்கு ஐந்தாவது வட்டத்தில் உள்ளது. குரு பகவானுக்கு தனுசு, மீனம் ராசிகள் ஆட்சி வீடு. தனுசு ராசியில் மூலத்திரிகோண பலம் அடைகிறார். கடக ராசியில் பரம உச்சம் அடைகிறார். மகர ராசியில் பரம நீசம் அடைகிறார். ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் அவர் சஞ்சாரம் செய்கிறார்.

குரு பயோ டேட்டா

மனிதர்களுக்குத்தானே பயோ டேட்டா கோள்களுக்கும் கூட பயோ டேட்டா இருக்கிறதா என்று நினைப்பது புரிகிறது. ஒவ்வொரு கோள்களுக்கும் சுபாவம், நிறம், தானியம், தேவதை , அதிதேவதை, புஷ்பம் உள்ளது அதனை பயோ டேட்டாவாக தந்திருக்கிறோம்.

பாலினம் - ஆண்
பஞ்சபூதம் - ஆகாயம்
பார்வை - 5, 7, 9
தேவதை - பிரம்மன்
அதி தேவதை - இந்திரன்
புஷ்பம் - முல்லை
தானியம் - கடலை
ரத்தினம் - புஷ்பராகம்
உலோகம் - பொன்
நிறம் - மஞ்சள்
வஸ்திரம் - மஞ்சள்
குணம் - சாத்வீகம்
சுபாவம் - சௌமியர்
சுவை - தித்திப்பு
சமித்து - அரசு
ஆட்சி வீடு - தனுசு, மீனம்
உச்ச வீடு - கடகம்
மூலத்திரிகோண வீடு - தனுசு
நட்பு வீடு - மேஷம், சிம்மம், விருட்சிகம்
சம வீடு - கும்பம்
பகை வீடு - ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்
நீச வீடு - மகரம்
தசா ஆண்டுகள் - 16 ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 1 ஆண்டுகள்
நட்பு கோள்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
சம கோள்கள் - சனி, ராகு, கேது
பகை கோள்கள் - புதன், சுக்கிரன்
கோவில்கள் - ஆலங்குடி, திருச்செந்தூர்
பிற பெயர்கள் - அந்தணம், அரசன், ஆசான், பிரஹஸ்பதி, அரசகுரு, மறையோன்

  • கடந்த ஓராண்டு காலமாக சிம்ம ராசியில் அமர்ந்து இருந்த குரு அரசியலிலும், அரசியல்வாதிகளுக்கும் பல விளையாட்டுகளை விளையாடினார். தங்கத்தின் விலையில் அதிக ஏற்றத்தையும், சில சமயங்களில் தடால் என்ற சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தினார்.
  • 2.8.16 முதல் 1.9.17 வரை உள்ள கால கட்டத்தில் வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதனின் வீடான கன்னியில் அமர்கிறார் குரு. பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறையில் மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.
  • மாணவர்களின் புத்தகச் சுமை குறையும். வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்நாட்டிலேயே வேலை கிடைப்பதற்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
  • தகவல் தொழில்நுட்பத்துறை அசுரவளர்ச்சி அடையும். புதிதாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாள், வார, மாதப் பத்திரிகைகள் வெளியாகும். வைணவ ஸ்தலங்கள் வளர்ச்சியடையும்.
  • குருபகவான் ஐந்தாம் பார்வையால் சனிவீடான மகர ராசியைப் பார்ப்பதால், வாகன உற்பத்தி அதிகரிக்கும். அன்னிய முதலீடுகள் அதிகமாகும்.
  • குருபகவான் ஏழாம் பார்வையால் தன் வீடான மீன ராசியைப் பார்ப்பதால், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் உயரும். மத்திய அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெறுவர்.
  • மீனம் நீர் ராசியாகையால் தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும்.
  • கப்பல் போக்குவரத்துத் துறை வளர்ச்சியடையும். பழைய துறைமுகங்கள் புதுப்பிக்கப்படும். புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும்.
  • குருபகவான் ஒன்பதாம் பார்வையால் ஸ்திர ராசியான ரிஷப ராசியைப் பார்ப்பதால், சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • ரியல் எஸ்டேட் 19.9.16-க்குப் பின் ஓரளவு சூடு பிடிக்கும். அதிநவீன குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் அதிகம் உருவாகும்.
  • குரு ஐந்தாம் பார்வையாக மகர ராசியையும், ஏழாம் பார்வையாக தனது சொந்த வீடான மீன ராசியையும், 9ம் பார்வையாக ரிஷப ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆனி போய் ஆடி வந்தால் டாப்தான்.
  • இதேபோல சிம்மம், விருச்சிகம், ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி டாப்போ டாப்தான். நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குருபாகவானையும், தட்சிணா மூர்த்தியையும் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.
  • குருபகவானுக்கு பரிகாரமாக வேதபாட சாலையில் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லத்தில் மஞ்சள் நிற துணி (போர்வை, உடை) தானம் செய்யவும்.

மொத்தத்தில் குரு பெயர்ச்சியினால் ஆனி போய் ஆடி வந்தால் மீனம், விருச்சிகம், மகரம் ராசிக்காரர்கள் ரொம்ப டாப்பா வருவாங்களாம்.

English summary
Guru Peyarchi is happening on Thursday Aug 2016.Jupiter will be staying in Kanni Rasi Virgo Moon Sign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X